முட்டாள்கள் தினத்தில் 'ராக்கெட்ரி' ட்ரெய்லர் ஏன்? - மாதவன் விளக்கம்

By செய்திப்பிரிவு

முட்டாள்கள் தினத்தன்று 'ராக்கெட்ரி' ட்ரெய்லரை வெளியிட்டது ஏன் என்று மாதவன் தனது ட்விட்டர் பதிவில் விளக்கம் அளித்துள்ளார்.

மாதவன் இயக்கி, நடித்துள்ள படம் 'ராக்கெட்ரி'. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் மாதவன். நேற்று (ஏப்ரல் 1) ஒரே சமயத்தில் அனைத்து மொழிகளிலும் 'ராக்கெட்ரி' படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.

இதற்குத் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் மாதவனுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். 'ராக்கெட்ரி' படத்தின் ட்ரெய்லருக்குக் கிடைத்த வரவேற்பால் நெகிழ்ந்துபோன மாதவன், தனது ட்விட்டர் பதிவில் ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"அன்பு நண்பர்களே, நான் இந்தப் பயணத்தை ஆரம்பித்து ஐந்து வருடங்கள் ஆகின்றன. நாட்கள் நகர நகர நீங்கள் ஒவ்வொருவரும் எனது இந்தப் பயணத்தில் சேர்ந்துகொண்டு இந்தப் பயணத்தை உங்களில் ஒரு பங்காக ஆக்கிக் கொண்டீர்கள். நாங்கள் ஆரம்பித்தபோது பல தடைகள் எங்கள் முன்னே இருந்தன. ஆனால், ஒவ்வொரு தடையையும் வாய்ப்பாக மாற்றினோம்.

விட்டிருந்தால் சாதாரணமான ஒன்றாக ஆகியிருக்கும் விஷயத்தைச் சிறப்பானதாக ஆக்கும் ஒரு வாய்ப்பு. தோளோடு தோள் நின்று படிப்படியாக நாங்கள் நகர்ந்தோம். கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் பயணம் அசாதாரணமானதாக மாறியது.

இப்போது எங்கள் அன்பின் உழைப்பான இந்த ட்ரெய்லரை வெளியிடும் நேரம், சொல்லப்படாத ஒரு கதைக்கு உயிர் கொடுத்த அற்புதமான பயணத்தின் கடைசிக் கட்டத்துக்கு நகர்கிறோம். உங்கள் அனைவருக்கும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி கூறிக்கொள்கிறேன்.

இது படம் என்பதைத் தாண்டி நமது தேசத்தின் மீதிருக்கும் அன்புக்காக, வேட்கைக்காகத் தங்களால் செய்ய முடியும், எதையும் செய்யும், தாங்கள் செய்யும் வேலைக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நம்பிக்கையுடன் இருக்கும் அறியப்படாத நாயகர்களுக்கான ஒரு அசாதாரணமான காணிக்கை.

சமூகத்துக்காகப் பங்காற்றிய இவர்களைத்தான் நாம் கொண்டாட வேண்டும். கையில் பெரிதாக எதுவுமின்றி அவர்கள் விடாமுயற்சியுடன் சாதிக்கின்றனர். தங்களை யாரும் கவனிக்கவில்லை என்று அவர்கள் கலங்குவதில்லை. ஆனாலும், அவர்கள் கவனிக்கப்படாமல், அங்கீகாரமின்றி இருக்கிறார்கள். சில நேரங்களில் அவர்களுக்கு அநீதியும் இழைக்கப்படுகிறது.

சில நேரங்கள் அப்படி ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ அநீதி இழைக்கப்படும்போது அது இந்த ஒட்டுமொத்த தேசத்துக்கே இழைக்கப்படும் அநீதியாகும்.

நம்பியுடன் நான் உரையாடியபோது ஒரு முறை சொன்னார், "எவ்வளவு பேர்? இன்னும் எவ்வளவு பேர் மாதவன்? அவர்களின் தேசப்பற்றினால் பாதிக்கப்பட்டு முட்டாளானவர்கள் எவ்வளவு பேர்!"

இன்று, 2021ஆம் ஆண்டின் முட்டாள்கள் தினத்தில், உயர்ந்த, கவனம் பெறாத நம்பி நாராயணன் என்கிற நாயகரைப் போற்றுவதன் மூலம், அப்படியான முட்டாள்களுக்கு எங்கள் காணிக்கையைச் செலுத்தி இந்த நாளை அர்ப்பணிக்கிறோம்.

கடவுள் அவரையும், அவரைப் போல இந்த உலகை இன்னும் சிறப்பானதாக ஆக்கும் போற்றப்படாத நாயகர்களையும் ஆசிர்வதிக்கட்டும்".

இவ்வாறு மாதவன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

மேலும்