மிரட்டல் கூடாது; தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இன்னும் பல கூறுகளாக உடையும்: பாரதிராஜா எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து முன்னணித் தயாரிப்பாளர்கள் பலரும் வெளியேறி, தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கப்பட்டது. இதில் தற்போது படங்கள் தயாரித்து வரும் முன்னணித் தயாரிப்பாளர்கள் பலரும் இடம்பெற்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தேர்தல் நடைபெற்றது. அதில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைமையிலான அணி வெற்றி பெற்றது.

அதனைத் தொடர்ந்து திரையுலகில் நிலவி வரும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என இரண்டிலுமிருந்து அறிக்கைகள் வரத் தொடங்கின.

இந்நிலையில், பாரதிராஜா தலைமையில் செயல்பட்டு வரும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருப்பவர்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் இணையும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அதை யாருமே ஏற்கவில்லை. இதனைத் தொடர்ந்து நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதில், தங்களுடைய சங்கத்துக்குப் போட்டியாகச் சங்கம் நடத்துவது முறையல்ல என்றும், இதற்கான விளக்கம் கிடைத்தவுடன் சங்க விதிகளின்படி என்ன செய்யலாம் என்று முடிவு எடுக்கவுள்ளதாகவும் தயாரிப்பாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து பாரதிராஜா இன்று (09.03.20) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

''மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல் இல்லாமல் இங்கே புற்றீசல்கள் போல் தயாரிப்பாளர்களுக்கு சங்கம் உருவானது சற்றே துரதிர்ஷ்டமானது. அதற்குக் காரணம் இங்கே சங்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களின் புரிதலில் ஏற்பட்ட குழப்பங்களே என நான் நம்புகிறேன்.

புது சங்கங்கள் உருவாவதென்பது காலமாற்றத்தின் விதிகளுக்கு உட்பட்டது. ஒன்று பழைய சங்கங்கள் கால மாற்றத்தை உணர்ந்து கொள்கைகளைக் கட்டமைத்துக்கொள்ள வேண்டும் அல்லது மற்ற சங்கங்களுடன் கலந்து செயல்படக் கற்றுக்கொள்ள வேண்டும். இதை விடுத்து மற்ற சங்கங்களையும் அதில் உள்ளவர்களையும் அடக்கி ஆள நினைப்பது, இவை சார்ந்த துறையையே மொத்தமாக நிர்மூலமாக்கிவிடும்.

இதற்குச் சான்றாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகம் பல சீர்கேடான விஷயங்களை முன்னெடுத்து வருகிறது. இது காலம் வரை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு இணையான இரு வேறு சங்கங்களுடன் இணக்கமாக இருந்து தயாரிப்பாளர்களுக்குச் சேவையாற்றி வந்துள்ளது. இதை இந்தப் புதிய நிர்வாகம் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் பெரும்பான்மையோர் இந்த 3 சங்கங்களிலும் உறுப்பினர்களாக உள்ளனர். பதவி அதிகாரம் என்பது அரசியலமைப்புக்கு உட்பட்டதாக இருக்கும் ஆனால், சங்கங்கள் அதன் உறுப்பினர்களுக்குச் சேவை புரியத்தான். இதைத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் திரும்ப உணர வேண்டும்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்றுமே ஒரு தாய்ச்சங்கமாகும். சமீபத்தில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களை தனித்தனியாக அழைத்து மிரட்டியும் நிர்வாகிகளுக்கு அவர்களின் படங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்த முற்படுவதையும் அறிந்தேன். அவ்வாறு நடக்கும் பட்சத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இன்னும் பல கூறுகளாக உடைந்து அதன் பொலிவிழக்கக் காரணமாக இந்தப் புதிய நிர்வாகம் இருக்கும் என்பதையும், என் உறுப்பினர்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்படும் பட்சத்தில் முதல் ஆளாக நின்று அதை எதிர்ப்பேன் என்பதையும் எச்சரிக்கையாக இங்கே பதிவு செய்கிறேன்''.

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

23 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஆன்மிகம்

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்