முதல் பார்வை: மாஸ்டர்

By க.நாகப்பன்

அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்ட சிறுவர்களைத் தவறான வழியில் பயன்படுத்தும் ரவுடிக்கும், அந்தச் சிறுவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியருக்கும் இடையே நடைபெறும் மோதலே 'மாஸ்டர்'.

சென்னையில் கல்லூரிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார் ஜே.டி. (விஜய்). மாணவர்கள் மத்தியில் அவருக்கு ஏகப்பட்ட மாஸ். ஆனால், பேராசிரியர்கள், முதல்வர் உள்ளிட்ட கல்லூரி நிர்வாகத் தரப்பில் நல்ல இமேஜ் இல்லை. இச்சூழலில் மாணவர் தேர்தலை நடத்த வேண்டாம் என்று கல்லூரி நிர்வாகம் முடிவெடுக்கிறது. தேர்தல் வேண்டும் என்று விஜய் சொல்கிறார். தேர்தலை நடத்தும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதில் அசம்பாவிதம் நடந்தால் பணியிலிருந்து விலக வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்படுகிறது. துரதிர்ஷடவசமாக தேர்தல் முடிந்த பிறகு கலவரம் வெடிக்கிறது. இதனால் விஜய் அதே பணியில் தொடர்வதை நிர்வாகம் விரும்பவில்லை.

3 மாதம் பிரேக் எடுத்துக்கொள்ள வேண்டிய சூழல் நேரிடுகிறது. நாகர்கோவிலில் உள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்ட சிறுவர்களை நல்வழித்தப்படுத்தும் ஆசிரியராகச் செல்கிறார். 90 நாட்கள் கழித்து மீண்டும் கல்லூரிக்கே செல்ல நினைக்கிறார். ஆனால், அங்கு நடக்கும் வித்தியாசமான செயல்கள், விபரீதங்கள், ஆபத்தை அறிந்து அதிர்ச்சி அடைகிறார். அவர் குற்ற உணர்ச்சி அடையும் அளவுக்கு அசம்பாவிதங்கள் நடக்கின்றன. பிரச்சினையின் ஆணிவேரைக் கண்டறிய முயல்கிறார்.

உண்மையில் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் நடப்பது என்ன, அது யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது, அதற்கான பின்புலம் என்ன, விஜய்யால் பிரச்சினைகளைத் தீர்க்க முடிந்ததா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

ஒரே படத்தில் ஓஹோ என்று பெயர் எடுத்தவர் லோகேஷ் கனகராஜ். 'மாநகரம்' படத்தின் மூலம் நம்பிக்கையூட்டும் நல்வரவானவர், 'கைதி' மூலம் கச்சிதமான கமர்ஷியல் படத்தைக் கொடுத்தவர் இந்த முறை திசை மாறிய திரைக்கதையால் திணறி இருக்கிறார். விஜய் படமாகவும் இல்லாமல், லோகேஷ் கனகராஜ் படமாகவும் இல்லாமல் இரண்டும் கலந்த கலவையாகவே இருக்கிறது. ஆங்காங்கே விஜய்க்குரிய காட்சிகளும், சில இடங்களில் லோகேஷின் டைரக்டர் டச் மட்டும் தெரிகின்றன.

தமிழ் சினிமா ஏகப்பட்ட வாத்தியார்களைப் பார்த்திருக்கிறது. அந்தப் பட்டியலில் ஸ்லிம்மாக, கெத்தாக, தத்துவம் பாடி, அறிவுரை கூறி, அழுது, ஆர்ப்பாட்டம் செய்யாமல் அரவணைக்கும் ஆசானாக விஜய் இணைந்துள்ளார். வழக்கமான பில்டப் காட்சிகள், பன்ச் வசனங்கள் விஜய்க்கு இல்லாதது ஆறுதல். அதே சமயத்தில் விஜய்யின் எனர்ஜி லெவலும், எமோஷனல் லெவலும் அதிகம் உள்ளன. எல்லாக் காட்சிகளையும் ஆக்கிரமிக்கும் நாயக பிம்பத்தையும் நிறையவே இறக்கி வைத்திருக்கிறார். தான் இருக்கும் காட்சிகளில் சிறுவர்கள் ஸ்கோர் செய்ய இடம் கொடுத்திருக்கும் அந்த தாராளம் பாராட்டுக்குரியது. தொடர்ந்து பின்பற்ற வேண்டியதும் கூட. தன் பெர்சனல் பிரச்சினைகள் என்று ஒவ்வொரு கதையாய் அளந்து விடுவதும் ரசிக்க வைக்கிறது.

ஆனால், விஜய் கதாபாத்திரப் படைப்பில் விட்ட குறை, தொட்ட குறை படம் முழுக்கத் தொடர்கிறது. அவரது கேரக்டர் ஸ்கெட்ச் முழுமையடையவில்லை. மாஸ்டர் என்று பெருமைப்படும் அளவுக்கு, அவர் புத்திசாலி என்பதை மருந்துக்கும் பயன்படுத்தவில்லை. அது பெருங்குறை.

நல்லவன், கெட்டவன் லாஜிக்கைத் தாண்டிப் பார்த்தால் விஜய் சேதுபதியை எதிர் நாயகன் என்றுதான் சொல்ல வேண்டும். பெரும்பாலான கமர்ஷியல் படங்களில் மாஸ் நடிகரின் படத்தில் வில்லனுக்கான கதாபாத்திரம் சிறப்பாக எழுதப்படுவதில்லை. அப்படி எழுதப்பட்டால் அந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பவர்களின் தேர்வு சரியாக அமையாது. லோகேஷ் கனகராஜ் அந்த விதத்தில் எந்தக் குறையும் வைக்கவில்லை. விஜய் சேதுபதியின் பாத்திரத்தை மிகக் கச்சிதமாகக் கையாண்டுள்ளார்.

விஜய் சேதுபதியும் அதன் நுட்பம் உணர்ந்து, நோக்கம் அறிந்து மிகச் சிறப்பான திரையைத் தன்வசப்படுத்துகிறார். படத்தின் பல இடங்களில் விஜய் சேதுபதியின் எதிர் நாயகத் தன்மை சிந்தாமல் சிதறாமல் எடுபடுகிறது. அவர் மட்டும் இன்னும் கொஞ்சம் மாடுலேஷன் மாற்றி நடிப்பில் மெனக்கிடல் செய்திருக்கலாம். இனியும் இதே பாணியைத் தொடர்ந்தால் ஒரே மாதிரியான நடிப்புக்குள் சிக்கிக் கொள்வார்.

கமர்ஷியல் படத்தில் நாயகிக்குக் கிடைக்கும் சிற்சில காட்சிகளே மாளவிகா மோகனனுக்கும் கிடைத்துள்ளன. அதிலும் கதைக்குத் தேவைப்படவில்லை என்று சொல்லிவிடக்கூடாது என்பதையே மனதில் வைத்து நாயகன் சாகசம் புரியும் சண்டைக்காட்சிகளினூடே ஹோட்டல், டாஸ்மாக், மெடிக்கல் ஷாப் என்று இஷ்டத்துக்கும் கூடவே இழுத்து வைத்திருக்கிறார்கள். அதற்கான ஒரு காரணத்தையும் சொல்லி வைத்திருக்கிறார்கள். அதை மட்டும் ஏற்றுக்கொள்ள முடிகிறது. மாளவிகா தன் பங்கைக் குறையில்லாமல் நிறைவேற்றியுள்ளார்.

படம் முழுக்க ஏகப்பட்ட துணைப் பாத்திரங்கள். நாசர், அழகம்பெருமாள், ஸ்ரீமன், சஞ்சீவ், பிரேம், நாகேந்திர பிரசாத், ஸ்ரீநாத், ரம்யா, சாய் தீனா, ரமேஷ் திலக், சேத்தன், கல்யாணி நடராஜன், லல்லு, தீனா, சுனில் ரெட்டி, அருண் அலெக்ஸாண்டர், விஜய் முருகன் என்று படம் முழுக்கத் தெரிந்த முகங்களே தென்படுகிறார்கள். ஆனால், இவர்கள் யாருக்கும் முக்கியத்துவம் தரப்படவில்லை. சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷண் ஆகியோரும் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதையெல்லாம் மீறி (மாஸ்டர்) மகேந்திரன், சிபி புவன சந்திரன், பூவையார், அர்ஜுன் தாஸ் ஆகியோர் மட்டும் சில காட்சிகளில் தங்கள் இருப்பைப் பதிவு செய்கிறார்கள்.

சென்னை, நாகர்கோவில் என இருவித நிலப்பரப்புகளின் தன்மையைத் துல்லியத்துடன் அப்படியே கேமராவில் அள்ளி வந்திருக்கிறார் சத்யன் சூரியன். அரசினர் கூர்நோக்கு இல்லத்தின் அவல நிலையைப் படம் பிடித்த விதத்தில் அவரின் உழைப்பு பளிச்சிடுகிறது. அனிருத் இசையில் வாத்தி கமிங், வாத்தி ரெய்டு, குட்டி ஸ்டோரி பாடல்கள், மாஸ்டர் பீட் ரிப்பீட் ரகம். பின்னணி இசையும் கதைக்குப் பலம் சேர்த்துள்ளது.

பிலோமின் ராஜ், இயக்குநருடன் இணைந்து பேசி கல்லூரிக் காட்சிகளைக் கொஞ்சம் கத்தரித்திருக்கலாம். அது நீளத்தைக் குறைக்கப் பயன்பட்டிருக்கும்.

இயக்குநராக லோகேஷ் கனகராஜ் கதாபாத்திரத் தேர்வில் அப்ளாஸ் அள்ளுகிறார். நடிகர்களிடம் நடிப்பை வாங்கியதிலும் அவரின் திறமை தெரிகிறது. விஜய்யின் ஃபிளாஷ்பேக் இதுவென்று ஒரு சோகக் கதையை, குடும்பத்தைப் பலி கொடுத்த கதையைச் சொல்லாமல், 'காதல் கோட்டை', 'வாரணம் ஆயிரம்', 'பிரேமம்', 'புன்னகை மன்னன்',' டைட்டானிக்' ஆகிய படங்களின் கதைகளைத் தன் காதல் கதைகளாச் சொன்ன விதத்தில் லோகேஷின் டைரக்டர் டச் பிரகாசம்.

லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், பொன்.பார்த்திபன் ஆகிய மூவரும் இணைந்து திரைக்கதையை எழுதியுள்ளனர். வழக்கமாக பலம் பொருந்திய வலிமையான, புத்திசாலித்தனமான நாயகன்தான் இப்படத்துக்குத் தேவை. ஆனால், விஜய் அப்படி எந்த புத்திசாலித்தனமான செயலையும் இப்படத்தில் செய்யவில்லை. குற்றத்தின் பின்னணி அறிய அவர் தேடல் பயணத்தையும் நிறையப் பேரை புரட்டி எடுக்கிறார். ஆனால், அதனால் என்ன பயன்? அதன் விளைவு என்ன? அதனால் அவர் என்ன கண்டுபிடித்தார் என்பதற்கு பதில் இல்லை. அந்தத் தேடல் வலுவிழந்து பயனில்லாமல் போகிறது.

மது அருந்துவதற்கான காரணத்தைச் சொன்னால் அதையே காரணமாகக் கொண்டவர்கள் தொடர்ந்து அதை அருந்துவார்கள் என்று விஜய்யின் மூலம் சொல்ல வைத்த லோகேஷ், தேவைக்கும் அதிகமான காட்சிகளில் விஜய் மது அருந்தும் காட்சிகளைக் குறைத்திருக்க வேண்டும்.

லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தேர்தலில் நிற்போம் என்று முறுக்கிக்கொண்டு நின்ற மூன்று பேரில் இருவருக்கு நேர்ந்த கதியைத் தெரிந்துகொண்ட பிறகு மூன்றாவது நபரும் எப்படித் தானாக வந்து சிக்குவார்? மாளவிகா மோகனன் ரவுடிகளிடமிருந்து தப்பிக்க சென்னை, திருவல்லிக்கேணியில் ஓடுகிறார். அடுத்த காட்சியில் நாகர்கோவிலில் இருக்கிறார். கதை எந்த இடத்தில் நிகழ்கிறது என்பதில் லாஜிக் இல்லை.

மிகப்பெரிய எதிரிக்குச் சவால் விடும் நாயகன், தன் நட்பு சூழ் உலகை எப்படி எச்சரிக்கை செய்யாமல் இருப்பான்? படத்தில் நாயகனை விட எதிர் நாயகன் புத்திசாலித்தனமாக இருப்பதுதான் திரைக்கதையின் சறுக்கல். திரைக்கதை தொய்வடையும் ஒவ்வொரு கட்டத்திலும் விஜய்யின் எமோஷனல் காட்சிகள் மூலம் சரிவைச் சரிசெய்யப் பார்த்திருக்கிறார்கள். அது தனியாகத் துருத்திக்கொண்டு நிற்கிறது. சில இடங்களில் வெறுமனே எமோஷனல் வசனங்கள் பேசுவது நம்பம்படியாக இல்லை. இப்படி திரைக்கதையின் ஓட்டைகள் அடைக்க முடியாத அளவுக்கு உள்ளன.

அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்ட சிறுவர்கள் செய்யும் முதல் குற்றம் மட்டுமே எமோஷனல் அடிப்படையிலானது. அடுத்தடுத்து செய்யும் குற்றங்கள் ஏன் நடக்கின்றன? யாரால் நடக்கின்றன? என்பதன் பின்னணியையும், வழிதவறிப் போகும் சிறுவர்களை வாழவைக்கப் போராடுவதன் அவசியத்தையும் சமூக அக்கறையோடு பதிவு செய்த விதத்தில் மட்டும் 'மாஸ்டர்' கண்ணியமான பெயரைச் சம்பாதித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 mins ago

வணிகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்