’குருவம்மா’, ‘ஒச்சாயி கிழவி’, ‘கஞ்சப்புருஷனின் மனைவி’; நிகரில்லா நடிகை; ’நடிப்பு ராட்சஷி’ காந்திமதி! 

By வி. ராம்ஜி

’அவருடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது’ என்று ஒரு சில நடிகர் நடிகைகளைச் சொல்லுவார்கள். அந்தப் பட்டியல் மிகச்சிறியதுதான். சின்னஞ்சிறிய பட்டியலுக்குள், விஸ்வரூபமெடுத்து நிற்கும் முக்கியமான நடிகை... காந்திமதி.

சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீதும் கூத்தின் மீது அப்படியொரு ஈடுபாடு காந்திமதிக்கு. மானாமதுரையில் கோயில் திருவிழா, ஊரில் ஒரு விழா என்றால் குதூகலமாகிவிடுவார் காந்திமதி. வள்ளி திருமணம் முதலான நாடகங்கள், விடிய விடிய போடுவார்கள். கண்கொட்டாமல், விடிய விடிய பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, வீட்டில், அக்கம்பக்கத்தில் நடித்துக்காட்டுவார். ராஜபார்ட், ஸ்த்ரீ பார்ட், கள்ளபார்ட் என நாடகத்தின் அத்தனை கதாபாத்திரமாகவும் மாறிப் பேசுவார். ஒரு வசனம் விடாமல் பேசுவார்.

நடிப்பின் மீது கொண்ட ஆர்வமும் வெறியும்தான் நாடகத்துக்குள் இவரைக் கொண்டு வந்து சேர்த்தது. எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் நாடகக் குழு, அந்தக் காலத்தில் வெகு பிரபலம். இந்தக் குழுவில் சேர்ந்து நடிக்கத் தொடங்கினார். இவரின் நடிப்பும் வசனமும் குறிப்பாக வசன உச்சரிப்பும் தனித்து இவரை அடையாளம் காட்டியது.
ஜோசப் தளியத் இயக்கத்தில் வந்த ‘இரவும் பகலும்’ தான் ஜெய்சங்கரின் முதல் படம். ஜெய்சங்கருக்கு மட்டுமல்ல... காந்திமதிக்கும் இதுவே முதல்படம். பிறகு, காந்திமதியே மறந்துவிட்ட அளவுக்கு எத்தனையோ படங்கள். ஒரு காட்சி, கூட்டத்தில் ஒருவர், ஒரேயொரு வசனம்... என்றெல்லாம் நடித்து வந்தார். ஜெயகாந்தனின் ‘யாருக்காக அழுதான்’ படத்தில்தான் இவரின் முகம் பரிச்சயமானது ரசிகர்களுக்கு.

எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்டோரின் கருப்பு வெள்ளை, கலர் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். எம்ஜிஆருக்கு அம்மா, சிவாஜிக்கு அம்மா என்றெல்லாம் நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய கதவு திறந்த படம், மிகப்பெரிய பாதையையே உருவாக்கித் தந்த படம் என்றெல்லாம் போற்றப்பட்டு, மொத்த திரையுலகையும் தமிழ் உலகையும் வியக்க வைத்தது பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’. படத்தில் சப்பாணி, மயிலு, பரட்டையன், டாக்டர் எல்லோரும் நம் நினைவில் நிற்கிறார்கள். அதேபோல் இன்றைக்கும் நம் மனதில் நிற்கிற குருவம்மா கேரக்டரை அவ்வளவு சுலபமாக எவரும் மறந்துவிடமுடியாது.

மயிலின் அம்மா குருவம்மா... அச்சு அசலான கிராமத்து அம்மா. வந்த வம்படியை விடாமல், நீயா நானா என்று பார்த்துவிடுகிற ஆவேச அம்மா. மானம் போய்விட்டதை அறிந்து துடித்துக் கதறி, உயிர்விடுகிற யதார்த்த எளிமையான மாந்தராக, அம்மாவாக, குருவம்மாவாக அப்படியொரு அவதாரம் எடுத்தார் காந்திமதி.

கவுண்டமணிக்கு ஜோடியாக, பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருந்தார். இந்த இரண்டு படங்களும் காந்திமதி எனும் நடிகை, சாதாரணரில்லை என்பதை தெளிவுற பறைசாற்றின. கே.பாக்யராஜ் முதன் முதலாக இயக்கிய ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தில் கல்லாபெட்டி சிங்காரத்தின் மனைவியாக, பாக்யராஜின் அம்மாவாக இவர் கொடுத்த அலப்பறை செம காமெடி.

‘இன்று போய் நாளை வா’ உள்ளிட்ட படங்களிலெல்லாம் இவரும் தனித்துத் தெரிந்தார். இவர் நடிப்பும் புதுபாணி என்று பேரெடுத்தது. மளமளவென படங்கள் குவிந்தன. முன்னதாக, ‘சட்டம் என் கையில்’ படத்தில் கமலுக்கு அம்மாவாக, அசோகனுக்கு மனைவியாக, குடிசை வாழ் பெண்மணியாக வெளுத்து வாங்கியிருப்பார்.

இந்த சமயத்தில்தான் எம்.ஏ.காஜாவின் ‘மாந்தோப்பு கிளியே’ வந்தது. படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழகத்தின் பட்டிதொட்டிகளில், வீடுகளில் நடைபெறும் விசேஷங்களில், லவுட் ஸ்பீக்கரில், ‘மாந்தோப்பு கிளியே’ காமெடியும் ‘16 வயதினிலே’ ஒலிச்சித்திரமும் ஓடின. ஊரே அமைதியாகக் கேட்டு ரசித்தது. கஞ்சக் காமெடியைக் கேட்டு வெடித்துச் சிரித்தது. சுருளிராஜன் - காந்திமதி இல்லையென்றால், ‘மாந்தோப்புக் கிளியே’ வெற்றிப்படமாக அமைந்திருக்காது. இன்றைக்கும் மனங்களில் நின்றிருக்காது.

மணிவண்ணனின் ‘சின்னதம்பி பெரியதம்பி’யில், பிரபு, சத்யராஜ் அம்மாவாக அட்டகாசமான நடிப்பை வழங்கியிருப்பார். ‘அக்கா...’ என்று ‘கரகாட்டக்காரன்’ படத்தில் சண்முகசுந்தரம் பேசுகிற வசனம் பிரபலம். அந்த அக்காவாக, ராமராஜனின் அம்மாவாக சிறந்த நடிப்பை வழங்கியிருப்பார் காந்திமதி.

அக்காவாக நடிப்பார். உருகுவார். அம்மாவாக நடிப்பார். பாசம் பொழிவார். மாமியாராக நடிப்பார். மிரட்டியெடுப்பார். ‘கால்கேர்ள்’ வைத்து வியாபாரம் செய்வார். கொஞ்சிக்குழைவார். எந்தக் கதாபாத்திரம் என்றில்லாமல் அசத்துவார். நல்ல கதாபாத்திரமோ நெகட்டீவ் கதாபாத்திரமோ... அதில் தன் முத்திரையைப் பதித்துவிடுவார். செட்டிநாட்டு பாஷை, மதுரை பாஷை, கோவை பாஷை, சென்னை பாஷை என்பதெல்லாம் காந்திமதிக்கு சரள பாஷை. சகஜ பாஷை. ஆனால் எந்த பாஷையில், எந்தக் கேரக்டராக இருந்தாலும், கொஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்சம் இழுத்துப் பேசுகிற காந்திமதி ஸ்டைல்தான்... டாப்டக்கர்!

திரையுலகில் எல்லோருக்கும்... கமல் உட்பட சகலருக்கும் காந்திமதி அக்காதான். ‘அக்கா அக்கா’ என்று அன்புடன் பழகுவார்கள். கமல், தன் படங்களில் ஏதேனும் ஒரு கேரக்டர் கொடுத்துவிடுவார். ‘அபூர்வ சகோதரர்கள்’ முதலில் எடுக்கப்பட்டு 20 நாளுடன் நின்றுவிட்டது. அப்போது மெக்கானிக் கமலுக்கு அம்மாவாக காந்திமதிதான் நடித்தார். பிறகுதான் மனோரமா. ‘உங்க அம்மாவோட காலைத்தொட்டு கும்பிடணும்டோய்’ என்ற பாடல், படத்தின் 75வது நாளில் இருந்து இடைவேளையில் திரையிடப்பட்டது. அப்போது கமலும் காந்திமதியும் ஆடிய பாடலைப் பார்ப்பதற்காகவே அடுத்தடுத்து வந்தார்கள் ரசிகர்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, காந்திமதியை ‘குருவம்மா’வாக்கிய பாரதிராஜா, ‘மண்வாசனை’ படத்தில், ‘ஒச்சாயி’ கிழவியாக ஆக்கியிருந்தார். கையில் கோல், காதில் தண்டட்டி, சுருக்கம் விழுந்த பார்வை, கூன் விழுந்த முதுகு... வார்த்தைக்கு வார்த்தை பழமொழிகள்... என ’மண்வாசனை’யில் ஒச்சாயிக் கிழவி எடுத்ததெல்லாம் விஸ்வரூபம்.

'விருமாண்டி’யில் விருமாண்டியையும் அன்னலட்சுமியையும் தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்துக் காப்பாற்றுவார் காந்திமதி. இரண்டு மூன்று காட்சிகள்தான். ஆனாலும் மனதில் நின்றுவிடுவார் காந்திமதி. இரண்டரை மணி நேர ‘தேவர் மகன்’ படத்தில், க்ளைமாக்ஸ் காட்சியில், தேரோட்டம் நடைபெறும் காட்சியில், ஒரேயொரு காட்சியில் வருவார் காந்திமதி. ‘யாரு தேவர்மகன்... கூப்பிடு அவரை’ என்பார். ‘உங்க அப்பாருதான் எனக்கு கல்யாணம் பண்ணி வைச்சாரு’என்று சொல்லுவார். வடத்தைப் பிடித்துக் கொண்டு, ‘நான் காசு பணமா கேட்டேன். தேரை இழுக்க இடம்தானே கேட்டேன். போற வழிக்கு புண்ணியம் கிடைச்சாப் போதுமே’ என்பார். அந்த க்ளைமாக்ஸ், தேர் வெடிக்கும் காட்சி, காந்திமதிக்கான காட்சி. அவர் நடிப்புக்கான சாட்சி.

இப்படி எத்தனையோ படங்கள். எந்த சாய்ஸும் இல்லாத, எவர் சாயலுமில்லாத நடிகை காந்திமதி.

2011ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி காலமானார் காந்திமதி. மகத்தான நடிகை காந்திமதி காலமாகி ஒன்பது ஆண்டுகளாகின்றன. அவர் நடித்துக் கொண்டிருந்தபோதும் சரி... காலமாகிவிட்ட இந்த ஒன்பது ஆண்டுகளும் சரி... இனி வரப்போகும் காலங்களும் சரி... காந்திமதியின் நடிப்புக்கு நிகரான நடிகை இன்னும் வரவில்லை; இனியும் வரமாட்டார்.

இன்னும் கொஞ்சம் வாய்ப்புகள், தமிழ்த்திரையுலகம் கொடுத்திருந்தால், ‘நடிப்பு ராட்சஷி’ என்று தமிழ்த் திரையுலகமே இன்னும் கொண்டாடிக்கொண்டிருக்கும்.
காந்திமதி எனும் கலைநயமிக்க நடிகையைப் போற்றுவோம்.

- இன்று காந்திமதியின் நினைவுதினம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

இந்தியா

3 mins ago

விளையாட்டு

53 mins ago

தமிழகம்

22 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்