அப்பாவித்தனத்தை தக்கவைக்கவே விரும்புகிறேன்: சிவகார்த்திகேயன் சிறப்புப் பேட்டி

By சுதிர் ஸ்ரீனிவாசன்

சினிமாவில் கடந்து வந்த பாதை, 'ரஜினிமுருகன்' மீதான எதிர்பார்ப்புகள், தமிழ்த் திரையுலகை அணுகும் விதம் உள்ளிட்டவை குறித்து நடிகர் சிவகார்த்திகேயனிடம் உரையாடியதிலிருந்து...

உங்களின் ஆரம்ப காலங்களில் 'எதிர்நீச்சல்' போன்ற வெற்றியை ஈட்டித்தந்த துரை செந்தில்குமாருடன் 'காக்கிச் சட்டை'யில் பணியாற்றினீர்கள். அதேபோல 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' என்ற மிகப்பெரிய வெற்றியைத் தந்த பொன்ராமுடன் தற்போது 'ரஜினிமுருகன்' படத்தில் பணியாற்றுகிறீர்கள்... இப்படி ஏற்கெனவே பணியாற்றிய இயக்குநர்களுடனேயே திரும்பத் திரும்ப பணியாற்றுகிறீர்களே?

இயக்குநர் பாண்டிராஜிடம் ஏற்கெனவே இரண்டு படங்கள் (மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா) பணியாற்றினேன். 'மெரினா'வில் பணியாற்றியபோது ''ஒரு தொலைக்காட்சித் தொகுப்பாளருக்கு சினிமாவில் நல்ல வரவேற்பு இருக்காது'' என்று எனக்கு எதிராக பல அறிவுரைகள் வழங்கப்பட்டன. ஆனால் நடந்ததே வேறு. நான் அந்த இயக்குநருடனும் அவருடைய குழுவுடனும் மிகவும் சௌகர்யமாக உணர்ந்தேன். எனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.

நான் 'எதிர்நீச்சல்' படத்தில் பணியாற்றியபோது எனக்கு ஏற்கெனவே அறிமுகமாகியிருந்த துரை 'காக்கிச்சட்டை'யில் பணியாற்ற அழைப்புவிடுத்தார். அதைப்போலவே, பொன்ராமுடன் 'வருத்தபடாத வாலிபர் சங்கம்' படத்தில் பணிபுரிந்ததால் மீண்டும் இணைவது என்று முடிவு செய்தோம். எங்கள் முதல் படத்திலிருந்தே நகைச்சுவையை தக்கவைத்துக்கொண்டு அடுத்த படத்துக்கான விஷயத்தை முடிவெடுத்தோம். இப்படித்தான் ஏற்கெனவே பணியாற்றிய இயக்குநர்களுடனேயே திரும்பத் திரும்ப பணியாற்றும் சூழல் உருவானது.

'ரஜினிமுருகன்' நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகத்தானே இருக்கும்.

ஆமாம். முதல் காட்சியே சூரி அண்ணாவுடன் ஒரு நகைச்சுவை காட்சிதான். படத்தின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்திருப்பதாக நினைக்கிறேன். இதுபோன்று தொடர்ந்துவரும் பல காட்சிகளால் நமது எல்லா மன அழுத்தங்களும் பதற்றங்களும் பறந்தோடிவிடும் என்று தோன்றுகிறது. நகைச்சுவை, அதுதான் என் பலம்.

உங்களுடைய பலவீனம் எது என்று சொல்லமுடியுமா?

பலபேரைக் கடந்து என்னால் வெல்ல முடிந்ததற்கான காரணங்களை பற்றி நான் யோசித்ததில்லை. ஆனால் என் படங்களில் சண்டைக்காட்சிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் இருக்காது. 'காக்கிச் சட்டை'யில் சண்டைக் காட்சிகளின் எண்ணிக்கையை குறைத்தோம். இதனால் படத்தில் இடம்பெறும் பாடல் - நடனக் காட்சிகள் மற்றும் கதையோட்டத்தில் வரும் நடிப்பு போன்ற மற்ற அம்சங்களில் சிறப்பான கவனத்தை செலுத்தினேன். என்னுடைய நகைக்சுவைக்காக மட்டுமின்றி எல்லாவகையிலும் ஒரு முழுமையான கலவையாக படங்கள் அமையவேண்டுமென நான் விரும்புகிறேன்.

ஆனால் நீங்கள் இப்போதைக்கு கவலைப்படத் தேவையில்லை என்றே தோன்றுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக வெற்றிகளைத் தந்துகொண்டிருக்கிறீர்கள்...?

(சிரித்தபடி) அதுதான் இந்த நேரத்தில் மிகப்பெரிய நட்சத்திரமாக வளர்ந்துவிட்டதாகத் தோன்றுகிறது. திரைக்கு வந்த புதிதில் எப்படி ஒரு நகைச்சுவையாளனாக இருந்தேனோ அதேபோலத்தான் இப்போதும் இருக்க விரும்புகிறேன்.

நீங்கள் குறிப்பிடுவது மிகப்பெரிய நட்சத்திரமாக வளர்ந்ததைப் பற்றி... ஒரு 'நடிகராக' வளர்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நல்ல விஷயம்... நான் எல்லா நேரத்திலும் வளர்ந்துகொண்டுதான் வருகிறேன். எனது பன்முகத் திறமையை வெளிப்படுத்த முயன்றுவரும் அதேநேரத்தில் நான் கமர்ஷியல் தளத்தின் எல்லையைத் தாண்டாதவாறும் பார்த்துக்கொள்கிறேன்.

இயக்குநர் மிஷ்கின் ஒருவித இருள் சூழ்ந்த கதையோடு தங்களை அணுகும்பட்சத்தில் சரி என்று சொல்வீர்களா?

(சிரித்தபடி) அவர் என்னை அணுகுவதாக நான் கற்பனைகூட செய்து பார்க்கவில்லை.

சரி, அப்படியொரு படம் செய்யப்போவதாக சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.

எக்கச்சக்க வன்முறையோடு ஒரு திரைக்கதை, இதைத்தானே சொல்கிறீர்கள்?

ம்... அதற்கு என்ன பதில் சொல்வீர்கள்?

சரி, நீங்கள் சொல்வதுபோல் என்னை அவர் அணுகினால், நான் சொல்கிற பதில் நிச்சயம் ''முடியாது'' என்பதுதான். என்னுடைய ஆர்வங்களே வேறு. ரசிகர்கள் எனது திரைப்படத்தை சில எதிர்பார்ப்புகளோடுதான் வந்து பார்க்கின்றனர்.

நீண்டகாலமாக கேமராவை மட்டுமே நம்பிக்கியிருக்கிற ஒரு கலை வடிவம்தான் திரைப்படம். ஒருமுறை ஒரு படம் செய்துவிட்டால், அதன்பிறகு அதை மாற்றமுடியாது. அதனால் மிகவும் கவனம் தேவை. மேலும் திறமைகளை நான் வளர்த்துக்கொண்டு பரிசோதனை முயற்சிகளில் இறங்கும் யோசனை இருக்கிறது. ஒரு திரைப்படத்தில் இருவித ரோல்களில் வருவேன். அதில் நிச்சயம் ஒன்று பரிசோதனையானதாக இருக்கும்.

ஆமீர்கான் வகைப் படங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். அவர் ஒரு கட்டத்தில் '3 இடியட்ஸ்', 'தலாஷ்', 'பிகே' போன்ற படங்களில் நடித்தார். அவரது படங்களில் நடிகர்கள் பணிபுரியும் உற்சாகத்தைக் கண்டிருக்கிறேன். அதில் என்னை பறிகொடுத்த நான் என்னை மேலும் வளர்த்துக்கொண்டேன். சில வருடங்கள் ஆனபிறகு, நானும் அந்த இடத்திற்கு வருவேன். இத்துறையில் நான் இப்போதும்கூட ஆரம்ப கட்டத்தில்தான் இருக்கிறேன்.

ரஜினிமுருகனில் ராஜ்கிரணோடு நடிக்கும்போது அவரது நடிப்பைக் கண்டு சிலிர்த்துப்போனேன். நான் 'அரண்மனைக்கிளி' படத்தை முன்வரிசையில் அமர்ந்து பார்க்கும்போது நான் சிறுவனாக இருந்தேன். எங்கள் இருவரையும் ஒன்றாக நடந்துசெல்லும் ஒரு காட்சியை இயக்குநர் படமாக்கும்போது இதை அவரிடம் நான் இதைப்பற்றி கூறியிருக்கிறேன். இதேவிதமான பரவசம் மிக்க மகிழ்ச்சியை நான் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் சத்யராஜுடன் நடிக்கும்போது உணர்ந்திருக்கிறேன்.

நட்சத்திரப் புகழைப் பார்த்து சலித்துவிட்ட இந்த மூத்த நடிகர்களுடன் நடிக்கும்போதும்கூட பரவசம் கிட்டுகிறதா?

உண்மை. உண்மையில் எனக்கு நம்பிக்கை இல்லை. அவர்களோடு நடிக்கமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இந்த பரவசத்தைப் பற்றி சொல்லவேண்டுமென்றால் திரையில் அவர்களுடன் தொடர்புடைய எனது காட்சிகளைப் பார்த்தாலே தெரியும். அத்தகைய பெரிய நடிகர்களின் முன்னிலையில் நடித்தபோது ஏற்பட்ட பதற்றத்தை, நான் உணர்ச்சிவயப்பட்டதை சுகமாக அனுபவித்தேன் என்றுதான் சொல்லவேண்டும்.

ஆனால், உங்களின் பேச்சு சில நேரங்களில் பெரிய சர்ச்சையைக் கிளப்பிவிடுகிறதே, அப்பாவித்தனமாக பேசுவதை தக்கவைத்துக் கொள்வதில் தங்கள் வெற்றி இருப்பதாக நினைக்கிறீர்களா?

எனக்கு தெரியாது. ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொள்கிறார்கள். நான் எங்கு சென்றாலும் மக்கள் என்னிடம் கைகுலுக்குகிறார்கள். சுதந்திரமாக என்னுடன் பேசுகிறார்கள். என் மனைவியைப் பற்றியும் என் மகள் ஆராதனாவைப் பற்றியும் கேட்கிறார்கள். சில நேரங்களில் விமர்சகர்கள் கூறுவதுபோல் என்னை ஒரு பக்கத்துவீட்டுப் பையனாக அவர்கள் பார்க்கவில்லை. தங்களில் ஒருவனாகவே அவர்கள் என்னைப்பார்க்கிறார்கள். ஏனெனில் எனக்கும் மனைவியுண்டு, எனக்கும் மகள் ஒருவர் இருக்கிறார், நானும் ஒரு வீட்டில் வசிக்கிறேன். நானும் அவர்களைப்போல சாப்பிடுகிறேன் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.

ஆனால், நீங்கள் கூறுவதுபோல் நான் பேசும் வார்த்தைகளுக்கு சிலவிதமான ஆட்கள் வெவ்வேறு அர்த்தங்களைக் கற்பித்துவிடுகின்றனர். இதனால் மைக் முன்பு நான் பேசும்போது என் பேச்சுக்களைப் பற்றிய விளைவுகளைப் பற்றி நான் மிகவும் கவலைப்பட வேண்டியிருக்கிறது. மக்களை மகிழ்விக்கவேண்டும் என்பதில்தான் எனக்கு ஆர்வமேயொழிய யாருக்கும் தவறிழைப்பதில் இல்லை.

மேலும், இப்போது எனது நகைச்சுவையை சிலர் தவறாக புரிந்துகொள்ளக்கூடியதற்கான காரணத்தை இப்போது நான் தெரிந்துகொண்டேன். அதேநேரத்தில் அதை மாற்றுவதற்காக நான் தந்திரமாக செயல்பட வேண்டுமென்று நான் நினைக்கவில்லை. அப்படி நினைத்தால் நான் யார் என்பதையே இழக்க நேரிடும். என் அப்பாவித்தனத்தை தக்கவைத்துக்கொள்ள விரும்புகிறேன். நான் சிவகார்த்திகேயன் என்பதை உலகம் அறியும். நான் சிறப்பாக வருவதற்குத்தான் முயன்றுவருகிறேன் என்று நம்புகிறேன்.

தமிழில்: பால்நிலவன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

41 mins ago

இலக்கியம்

6 hours ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்