துல்கர் சல்மான் கூறும் காரணங்கள் ஏற்புடையதல்ல; காட்சியை நீக்க வேண்டும்: சீமான் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

துல்கர் சல்மான் கூறும் காரணங்கள் ஏற்புடையதல்ல. 'வரனே அவஷ்யமுண்டு' படத்திலிருந்து அந்தக் காட்சியை நீக்க வேண்டும் என்று சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அனூப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து, தயாரித்த படம் 'வரனே அவஷ்யமுண்டு'. பெரும் வரவேற்பு பெற்ற இந்தப் படத்தில் சுரேஷ் கோபி, ஷோபனா, துல்கர் சல்மான், கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சில நாட்களுக்கு முன்பு இந்தப் படம் டிஜிட்டலில் வெளியானது.

இதில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டிக் காட்சிப்படுத்தியது படக்குழு. இந்த காமெடிக் காட்சிகளை வைத்து இணையத்தில் தமிழ்ப் பயனர்கள் பலரும் 'வரனே அவஷ்யமுண்டு' படக்குழுவினரைக் கடுமையாகத் திட்டத் தொடங்கினார்கள். துல்கர் சல்மான் இதற்கு மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து துல்கர் சல்மான் தனது ட்விட்டர் பதிவில் ஒரு கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதில் தனது தரப்பு நியாயத்தை விளக்கி, அதற்கு மன்னிப்பும் கோரியிருந்தார்.

இந்தச் சர்ச்சை தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"மலையாள மொழியில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான “வரனே அவஷ்யமுண்டு” திரைப்படத்தில் உள்ள ஒரு காட்சியில், தமிழ்த்தேசிய இனத்தின் முகமாகவும் முகவரியாக இருக்கும் பிராபகரனின் பெயரை தவறாகப் பயன்படுத்தி அவமதிக்கும் வகையில் காட்சியமைக்கப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

உலகமே வியக்கும் தம்முடைய போர்த்திறனாலும், மரபு சார்ந்த நவீன வலிமை வாய்ந்த ராணுவக் கட்டமைப்பினாலும், கட்டுக்கோப்பான ஒழுக்கத்தினாலும், இன விடுதலைக்குக் குரல் கொடுக்கும் உலக மாந்தர்களால் இன்றளவும் போற்றப்படும் வே.பிரபாகரனை நடிகர் துல்கர் சல்மானோ அல்லது தொடர்புடைய அவரது படக்குழுவினரோ அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. மேலும், துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த முந்தைய படமான “காம்ரேட் இன் அமெரிக்கா (COMRADE IN AMERICA)” திரைப்படத்திலும் பிரபாகரனின் புகைப்படம் ஒரு காட்சியில் பயன்படுத்தப்பட்டிருப்பதால் அவருக்குக் கட்டாயம் தெரிந்திருக்கக்கூடும். அந்தக் காட்சியிலும் ஒரு குடிகாரர் வீட்டில் இருக்கும் அப்புகைப்படம், இறந்துவிட்டார் என்பதைக் குறிக்கும் விதமாகக் காட்டப்பட்டிருப்பதும் இயல்பானதாக இல்லை.

எனவே தெரியாமல் வைத்துவிட்டோம் என்றோ, கேரளாவில் அது பெரும்பாலானோர் வைத்திருக்கும் பொதுப்பெயர் என்றோ துல்கர் சல்மான் கூறும் காரணங்கள் ஏற்புடையதல்ல. படக்குழுவினர் நினைத்திருந்தால் இப்படி ஒரு காட்சியில் அத்தகைய பெயரைப் பயன்படுத்தாமல் தவிர்த்திருக்கலாம். மேலும் படக்குழுவினருக்கு எவ்வித உள்நோக்கமும் இல்லையென்றால் அந்த ஒரு குறிப்பிட்ட பெயர் இடம்பெறும் காட்சியை மட்டும் தனியாக விளம்பரப்படுத்த வேண்டிய அவசியம் ஏன் வந்தது? என்ற கேள்வியும் எழுகிறது. பழைய படத்தில் இடம்பெற்ற தொடர்ச்சி அந்தக் காட்சி என்றால் அது இன்றைய சூழலில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று படக்குழுவினர் கணித்திருக்க வேண்டும்.

தமிழக இளம் தலைமுறையிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தவுடனேயே தற்போது துல்கர் சல்மான் பொதுவெளியில் மன்னிப்பு தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கதுதான் என்றாலும் படத்திலிருந்து அந்தச் சர்ச்சைக்குரிய காட்சியை உடனடியாக நீக்க வேண்டும். அதுவரை தங்களுடைய படத்திற்கு எதிரான தமிழர்களின் எதிர்ப்பு என்பது தொடர்ந்துகொண்டே இருக்குமென்று எச்சரிக்கிறேன். எனவே, காயம்பட்ட ஒவ்வொரு தமிழனின் உள்ளத்து உணர்வையும், அவர்களின் எதிர்ப்பு நிலைப்பாட்டின் தீவிரத்தையும் உணர்ந்து படத்திலிருந்து அக்காட்சியை முழுமையாக நீக்கவேண்டும்.

மேலும், எதிர்காலத்திலும் இவ்வாறு மலிவான காட்சிகள் மூலம் தமிழர்கள், தமிழ்த் தலைவர்களை இழிவுபடுத்திவிடலாம் என்ற சிந்தனையே எழாமல் இருப்பதுதான் இரு சகோதர தேசிய இனங்களின் ஒற்றுமைக்கும், மேன்மைக்கும் நலம் பயக்கும் என்பதைத் தொடர்புடைய படக்குழுவினர் உணர்ந்து செயல்படுவர் என்று நம்புகிறேன்".

இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

விளையாட்டு

11 mins ago

சினிமா

17 mins ago

தமிழகம்

38 mins ago

இந்தியா

23 mins ago

சினிமா

47 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்