நெகிழ வைத்த அப்பா - மகள்: நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி பகிர்வு

By செய்திப்பிரிவு

தனது கார் பயணத்தின்போது நெகிழ வைத்த அப்பா - மகள் குறித்து வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி.

11 மொழிப் படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்தவர் ஆஷிஷ் வித்யார்த்தி. தமிழில் 'தில்', 'கில்லி', 'குருவி', 'பீமா' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கு மற்றும் பெங்காலியில் சில படங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே, காரில் புனேவுக்குச் சென்று கொண்டிருந்தபோது டிரைவருக்கும், அவருடைய மகளுக்கும் தொலைபேசியில் நடந்த உரையாடல் தொடர்பாக நெகிழ்வுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஆஷிஷ் வித்யார்த்தி.

அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது:

''நாங்கள் இன்று புனே சென்று கொண்டிருந்தபோது ஒரு அற்புதமான விஷயம் நடந்தது. உங்களிடம் சுவாரசியமான அந்த விஷயத்தைப் பகிர வேண்டும் என்று நினைத்தேன். மும்பையிலிருந்து காலை 4 மணிக்கு எங்கள் பயணத்தை ஆரம்பித்தோம். காரின் ஓட்டுநர் அமைதியாக வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தார். வழியில் சில நண்பர்களை வண்டியில் ஏற்றிக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.

புனேவுக்குச் சென்று சேரும் முன், காலை 6 மணி அளவில், எங்கள் ஓட்டுநர் என் நண்பர் ஒருவரிடம், 'உங்கள் மொபைல பயன்படுத்திக்கொள்ளலாமா. எனது மொபைல் பேட்டரி தீர்ந்துவிட்டது' என்று கேட்டார். என் நண்பரும் மொபைலைக் கொடுத்தார். ஓட்டுநர் அவரது பெண் குழந்தையை அழைத்தார். ஸ்பீக்கரில் போட்டுவிட்டுப் பேசினார். மகள் அழைப்பை எடுத்ததும், 'மகளே, எழுந்திரு' என்றார். அதற்கு அவர் மகள், 'அப்பா நான் உங்களைக் காலை 5 மணிக்கு எழுப்பச் சொன்னேன். நீங்கள் இப்போது எழுப்புகிறீர்களே' என்று கேட்டாள். அவர் தர்மசங்கடமாக உணர்வதைக் கவனித்தேன்.

'பரவாயில்லை, இப்போது எழுந்து, கொஞ்சம் சமைத்துவிட்டு அதன் பின் பள்ளிக்குச் செல்லலாம்' என்றார் அப்பா. அதற்கு அவர் மகள், அந்த மெல்லிய குரலில், 'அப்பா, நான் காலை 4 மணிக்கே எழுந்து சமைத்து முடித்துவிட்டேன். பள்ளிக்குச் செல்லத் தயாராக இருக்கிறேன்' என்றாள். என்னமோ நடக்கிறது என்பது புரிந்தது. ஆனால் என்னவென்று எங்களுக்குப் புரியவில்லை. அழைப்பைத் துண்டித்துவிட்டு எங்கள் ஓட்டுநர் எங்களைப் பார்த்து, 'பெண் வளர்ந்துவிட்டாள்' என்றார்.

அவரிடம், 'வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள்' என்று மறைமுகமாகக் கேட்டேன். '12 வயது மகளும், 7 வயது மகனும். எனது மனைவியைக் கடந்த ஆண்டு டிசம்பர் 25 அன்று இழந்துவிட்டேன்' என்றார். நான் காலை 4 மணியிலிருந்து விழித்துக் கொண்டிருக்கிறேன், சமையல் முடித்து தயாராக இருக்கிறேன் என்று அந்த மகள் தன் அப்பாவிடம் மகிழ்ச்சியாகச் சொல்லிக் கிண்டல் செய்யும்போது அவளது வயது எங்களுக்குத் தெரியாது. ஆனால் அதைக் கேட்டதுமே நாங்கள் வாவ் வாவ் வாவ் என்று பாராட்டினோம்.

எங்கள் ஓட்டுநர் இந்தக் கதையைச் சொல்லி முடித்ததும்தான் எங்களுக்குப் புரிந்தது. அந்தக் குழந்தை முதிர்ச்சியடைந்து தன் வாழ்க்கைக்கான பொறுப்பைக் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறாள் என்று. அங்கு இரண்டு குழந்தைகளின் தந்தை ஒருவர், தான் வீட்டிலிருந்து தள்ளி இருந்தாலும் தன் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்று தன்னால் இயன்ற சிறந்த முயற்சியைச் செய்கிறார்.

என்னை இந்தக் கதை நெகிழச்செய்து விட்டது. அதனால் வண்டியை நிறுத்திவிட்டு உங்களிடம் இதைச் சொல்ல விரும்பினேன். நாம் ஒவ்வொருவரும் தடைகளைச் சந்திக்கிறோம்தானே? அதில் முடங்கி விடுகிறோம். ஆனால் நண்பர்களே, ஒவ்வொரு நாளும் நிறையப் பேர், குறைந்த விஷயங்களை வைத்து வாழ்க்கையில் நிறைய சாதிக்கிறார்கள். நமக்குக் கிடைத்த வாழ்க்கையை நாம் எவ்வளவு நன்றியுடன் நினைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நான் எனக்கு நினைவுபடுத்தும்போது உங்களுக்கும் நினைவுபடுத்த வேண்டும் என்று விரும்பினேன்.

கிடைக்கும் வாய்ப்புகளை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் சவுகரியமாக மாற்றுவதில் மட்டுமே கவனம் இல்லாமல், சூழ்நிலையைத் தாண்டியும் நம்மால் உயர முடியும் என்பதைப் பார்க்க வேண்டும். இது பற்றி உங்கள் கருத்துகளையும் தெரிந்துகொள்ள நினைக்கிறேன்''.

இவ்வாறு ஆஷிஷ் வித்யார்த்தி பேசியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 secs ago

க்ரைம்

6 mins ago

கல்வி

3 mins ago

உலகம்

14 mins ago

இணைப்பிதழ்கள்

28 mins ago

க்ரைம்

33 mins ago

க்ரைம்

40 mins ago

உலகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

வெற்றிக் கொடி

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்