’கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் உன்னிடம்’; மறக்க முடியாத டி.எஸ்.ராகவேந்தர் காலமானார்

By வி. ராம்ஜி

பழம்பெரும் நடிகரும், பாடகருமான டி.எஸ்.ராகவேந்தர் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 75.

ஏகப்பட்ட படங்களெல்லாம் நடிக்கவில்லை. ஒரு படத்தின் முக்கியக் கதாபாத்திரத்திலெல்லாம் நடிக்கவில்லை. ஆனால், நல்ல கேரக்டராக நிறைய படங்களில் நடித்திருக்கிறார். நாலு சீனோ... ரெண்டு சீனோ... மக்கள் மனங்களில் பதியும்படி, பளிச்சென்று நடித்திருக்கிறார். அவர்... டி.எஸ்.ராகவேந்தர்.

இசையுடன் தொடர்பு கொண்ட ராகவேந்தர், பின்னாளில் நடிகரானார். நடுவே, எண்பதுகளில், சில படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் என்பது பலரும் தெரிந்திடாத ஒன்று. ’வைதேகி காத்திருந்தாள்’ படத்தில், விதவை மகளான ரேவதியின் துயரத்தைத் தாங்கமுடியாமல், குடிபோதைக்கு ஆளாகிப் புழுங்கும் கேரக்டரில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ‘அட... பிரமாதமா நடிக்கிறாரே... யாருப்பா இவரு?’ என்று கிராமங்களில் கூட கேட்டுத் தெரிந்துகொண்டார்கள் ரசிகர்கள்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பேனரில், கமல் தயாரித்து நடித்த ‘விக்ரம்’ படத்தில், சிறிய ஆனால் அருமையான கேரக்டரில் நடித்தார் டி.எஸ்.ராகவேந்தர். ‘அக்னிபுத்ரா’ ராக்கெட் களவு போய்விடும். அதைக் கண்டுபிடிக்கும் பணியில் இறங்கும் உளவுத்துறை அதிகாரி கமல், மிகப்பெரிய கடத்தல் கும்பலுக்கு உளவுத்துறையிலேயே ஆள் இருப்பது தெரியவரும். அவர்தான் டி.எஸ்.ராகவேந்தர்.

அவரிடம் விசாரணை நடக்கும். அப்போது, ’அக்னிபுத்ரா’ இருக்கும் இடத்தை, வரைபடத்துக்கு அருகே சென்று காட்டுகிறேன் என்று சொல்லிவிட்டு, மாடியிலிருந்து குதித்து இறந்துவிடுவார். அப்போது உயரதிகாரி சாருஹாசன், கமல் மற்றும் அதிகாரிகள் எல்லோரும் எட்டிப்பார்த்து, அதிர்ந்து போவார்கள். ‘இப்போ என்ன செய்றது?’ என்று சாருஹாசன் கேட்பார். ‘என்ன செய்றதுன்னு தெரியாது. ஆனா என்ன செய்யக்கூடாதுன்னு தெரியுது’ என்பார் கமல். ‘என்ன?’ என்று கேட்பார் சாருஹாசன். அதற்கு கமல்’ விசாரிக்கும்போது, இப்படி மூணாவது மாடில வைச்சு விசாரிக்கக் கூடாது’ என்பார். அந்தக் காட்சியையும் காட்சியில் இறந்துபோன டி.எஸ்.ராகவேந்தரையும் மறக்கவே முடியாது.

இயக்குநர் கே.பாலசந்தர், சிவகுமார், சுஹாசினி, சுலக்‌ஷணா முதலானோர் நடித்த ‘சிந்து பைரவி’ படத்தில், ஒரு முக்கியமான கேரக்டர் இருந்தது. நீதிபதி கேரக்டர். அதேசமயம் இசை ரசிகராகவும் விமர்சகராகவும் இருக்கிற கேரக்டர் அது. அதற்கு பாலசந்தர், டி.எஸ்.ராகவேந்தரைத்தான் அழைத்தார்.

அந்தக் கேரக்டரில் பிரமாதப்படுத்தியிருந்தார் ராகவேந்தர். அதில், ‘கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் உன்னிடம்’ என்ற வரியைக் கொண்டு, எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி எப்படிப் பாடுவார்கள் எனப் பாடிக்காட்டி, அப்ளாஸ் அள்ளுவார்.

அதேபோல், அவருடைய கார் டிரைவரான கவிதாலயா கிருஷ்ணனிடம் இசை சம்பந்தமாக பந்தயம் வரும். அதில் தோற்றுவிடுவார் ராகவேந்தர். அந்தக் காட்சியும் மனதில் பதிந்துவிட்ட ஒன்று. இப்படி எத்தனையோ படங்களில் நடித்தார். மக்கள் மனங்களில் இடம் பிடித்தார். ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில், ரேவதி நடனமாடுகிற ’அழகு மலராட’ என்ற பாடலில் நடித்திருப்பார்.

ஏகப்பட்ட படங்களில் நடிக்காத போதும், மக்கள் மனங்களில் அப்படியொரு இடம் பிடித்த ராகவேந்தர், சிலநாட்களாக உடல்நலமின்றி இருந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்தார்.

ஆனால், தமிழ் சினிமா ரசிகர்கள், டி.எஸ்.ராகவேந்தரின் தனித்துவமான நடிப்பையும் அவரையும் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

56 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்