’ஹீரோ’ கதை சர்ச்சை: மித்ரனுக்கு மறைமுகமாகப் பதிலளித்த இயக்குநர் பாக்யராஜ்

By செய்திப்பிரிவு

'ஹீரோ' கதை சர்ச்சை தொடர்பாக இயக்குநர் மித்ரனுக்கு மறைமுகமாகப் பதிலளிக்கும் வகையில் பேசியுள்ளார் இயக்குநர் பாக்யராஜ்.

சிவகார்த்திகேயன், கல்யாணி ப்ரியதர்ஷன், அர்ஜுன், அபய் தியோல், இவானா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'ஹீரோ'. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் கதை சர்ச்சையில் சிக்கியுள்ளது. இயக்குநர் அட்லியிடம் உதவியாளராக இருப்பவர் போஸ்கோ பிரபு. இவர் என் கதையைத் திருடி இயக்குநர் மித்ரன் ’ஹீரோ’ படத்தை எடுத்துவிட்டார் என்று தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைக்கு இயக்குநர் மித்ரன் ஒத்துழைப்பு தராததால், நீதிமன்றத்தை நாடவும் என்று எழுத்தாளர் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் மூன்று பக்கக் கடிதம் ஒன்றை போஸ்கோ பிரபுவுக்கு எழுதியுள்ளார். அதில் இரண்டு கதையும் ஒன்றே எனவும் குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இதற்குப் பதிலளிக்கும் வகையில் இயக்குநர் மித்ரன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, வெறும் கதைச் சுருக்கத்தை மட்டுமே வைத்து இரண்டு கதையும் ஒன்று என எப்படிச் சொல்லலாம், எழுத்தாளர் சங்கம் எனக்குக் கடிதம் எழுதவே இல்லை உள்ளிட்ட தன் தரப்பு நியாயங்களைத் தெரிவித்தார். 'ஹீரோ' படமும் வெளியாகிவிட்டதால், இந்தக் கதை சர்ச்சை என்னவாகும் என்பது தெரியாமல் இருக்கிறது.

இந்நிலையில், அஜயன் பாலா எழுதிய 'தமிழ் சினிமா வரலாறு' புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிவகுமார், ராஜேஷ், இயக்குநர் பாக்யராஜ் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் பாக்யராஜ் தனது பேச்சில், 'ஹீரோ' இயக்குநர் மித்ரனுக்கு பதிலளிக்கும் விதமாக மறைமுகமாகப் பேசினார்.

பாக்யராஜ் தனது பேச்சில், "ராஜேஷ் பேசும் போது, நானெல்லாம் எடுத்தால் சொல்லிவிடுவேன் என்று சொன்னார். அதாவது 4 நாள் நீங்கள் ஊரில் இல்லை, ஆகையால் எடுத்தேன் என்று கூறிவிட்டால் திருட்டு ஆகாது என்று தெரிவித்தார். இப்போது எல்லாம் திருட்டு என்று சொன்னாலும் ஒப்புக் கொள்வதில்லை.

திருட்டு என்று கூடச் சொல்லாமல் இதுவும், அதுவும் ஒத்துப் போகுதுப்பா என்றுதான் சொன்னேன். கொச்சைப்படுத்தக் கூடாது, கெளவரக் குறைச்சலாக நடத்தக் கூடாது என்பதால் அப்படிச் சொனேன். தெரிந்தோ, தெரியாமலோ உன்னை மாதிரியே ஒரு சிந்தனையில் எழுதியிருப்பதைச் சுட்டிக்காட்டினேன்.

முதல் காட்சி, இடையில் உள்ள காட்சி, இறுதிக் காட்சி என அனைத்துமே ஒத்துப் போகிறது. அவன் உனக்கு முன்னால் பதிவு பண்ணிவிட்டான் என்றேன். அதற்கு நான் எப்படி ஒப்புக்கொள்ள முடியும் என்றார். இவர்களை எல்லாம் என்றைக்காவது ஒப்புக் கொள்ள வைக்க முடியும் என நினைக்கிறீர்கள். அது முடியவே முடியாது. ரொம்பவே கடினம்.

முன்பு சினிமாவுக்குப் போவியா என்று எல்லாரும் அடிப்பார்கள். இன்று சரியான சினிமா எடுப்பியா என்று அடிக்கக் கூடிய சூழல். அடுத்தவர்களுடைய சட்டையை என்னதான் மாற்றிப் போட்டாலும், பொருத்தமாக இருக்கும். ஆனால், அது ஒரிஜினல் அல்ல. பழசு தான். ஆகையால், வரும் தலைமுறையினர் அதைப் பண்ணாதீர்கள்.

படத்தின் கதையைத் தழுவி என்ன வேண்டுமானாலும் பண்ணலாம். இங்கு கொஞ்சம் சுட்டு, அங்கு கொஞ்சம் சுட்டுப் பண்ணினால் என்றைக்கும் தேறவே முடியாது. ரொம்ப நாள் நீடிக்கவும் முடியாது" என்று பேசினார் இயக்குநர் பாக்யராஜ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

இந்தியா

23 mins ago

ஆன்மிகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்