லைகா நிறுவனர் சுபாஷ்கரன் பயோபிக்: மணிரத்னம் - ஏ.ஆர்.முருகதாஸ் ஆர்வம்

By செய்திப்பிரிவு

லைகா நிறுவனர் சுபாஷ்கரனின் வாழ்க்கை வரலாற்றப் படமாக்க இயக்குநர் மணிரத்னம் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகிய இருவரும் ஆர்வம் தெரிவித்துள்ளனர்.

விஜய் நடிப்பில் வெளியான ‘கத்தி’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் சுபாஸ்கரன் அல்லிராஜா. லைகா புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து பல்வேறு பிரம்மாண்ட படங்களைத் தமிழில் தயாரித்தது. தற்போது ரஜினி நடித்துள்ள 'தர்பார்', கமல் நடித்து வரும் 'இந்தியன் 2', மணிரத்னம் இயக்கவுள்ள 'பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்து வருகிறது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனர் சுபாஷ்கரனுக்கு மலேசியாவில் உள்ள ஏம்ய்ஸ்ட் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. இவரது லைகா குழுமம், இங்கிலாந்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் ஒருபிரிவான லைகா மொபைல் நிறுவனம், ஐரோப்பாவில் இயங்கும் பல தொலைபேசி நிறுவனங்களில் முதலிடத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் உள்ள தமிழர்கள் குடியிருக்க நூற்றுக்கணக்கான வீடுகளையும், ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள சிறுவர்களுக்கு உதவி, விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள், குடிநீர்த் தட்டுப்பாடு உள்ள நாடுகளில் அதற்கான வசதிகளைச் செய்து கொடுப்பது என்று பல உதவிகளைச் செய்து வருகிறார் சுபாஸ்கரன். அவருடைய சமூக சேவைகளைப் பாராட்டியே இந்த டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

சுபாஸ்கரனுக்கு வழங்கப்பட்ட டாக்டர் பட்டத்துக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் மணிரத்னம் பேசும்போது, "முதலில் சுபாஷ் சாரைப் பார்க்கும் போது, எப்படி இந்த அளவுக்கு வளர்ந்தார் என்ற ஆர்வம் ஏற்பட்டது. எப்படி என்று அவரிடமே கேட்டேன். அதை இப்போது சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால், அதை ஒரு நாள் சினிமாவாக பண்ண ஆசை. எங்கிருந்து ஆரம்பித்து, எங்கு போயிருக்கிறார் என்று நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது" என்று பேசினார்.

அவரைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் பேசும்போது, "’கத்தி’ படம்தான் இந்த நிறுவனத்தில் முதலில் பண்ணினேன். அப்போது, அவர் எவ்வளவு பெரிய ஆள் என்பது தெரியாது. அதற்குப் பிறகு எவ்வளவு பெரிய பிசினஸ் மேன், இலங்கைத் தமிழர் என்றெல்லாம் தெரிந்து கொண்டேன். அந்தப் படம் வெளியாகும்போது நிறைய எதிர்ப்புகள் வந்தன. அதை எப்படிச் சமாளிக்கலாம் என்பது தெரியாமல் இருந்தது. ஏனென்றால் எனக்குத் தெரிந்த ஒரே மொழி தமிழ். அந்தச் சமயத்தில் நான் தமிழுக்கு எதிரான ஆள் என்றெல்லாம் செய்தியை உருவாக்கினார்கள்.

இப்போது நிறைய பெரிய படங்கள் பண்ணினாலும், முதல் படத்துக்கு நிறையத் தடங்கல்கள் இருந்தன. அதற்குப் பிறகு பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்து, தான் யார் என்பதை விளக்கினார். அவருடைய வியாபாரம் எவ்வளவு பெரியது என்பதை எல்லாம், அவரது லண்டன் அலுவலகத்துக்குச் சென்றவுடன்தான் தெரிந்து கொண்டேன்.

தற்போது படமாக்கி வரும் 'தர்பார்' படத்துக்காக லண்டன் போயிருந்தேன். அப்போதுதான் அவரிடம் நிறைய பேசக்கூடிய சந்தர்ப்பம் அமைந்தது. உண்மையில், தமிழர்கள் அனைவருமே பெருமைப்படக் கூடிய சாதனையை அவர் செய்துள்ளார். நம்மை ஆட்சி செய்த பிரிட்டிஷ்காரர்கள் மத்தியில் அவர் தற்போது ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். அவருடைய அனுபவங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டபோது, ஒரு பயோபிக் பண்ணும் அளவுக்கான கதை அவரிடமுள்ளது. அது ஆச்சரியமாக இருந்தது.

உண்மையில் இந்த டாக்டர் பட்டத்துக்குத் தகுதியானவர் சுபாஸ்கரன் சார். மணி சாரும் ஆசைப்பட்டதாகச் சொன்னார்கள். அவர் முதல் பாகம் பண்ணினால், நான் 2-ம் பாகம் பண்ணிக் கொள்கிறேன். உண்மையிலேயே அவரது கதை ஒரு பாகத்திற்குள் அடங்காது. அவ்வளவு இருக்கிறது” என்று பேசினார் ஏ.ஆர்.முருகதாஸ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்