அம்பிகா 40 : முதல் படம் ‘சக்களத்தி; முதல் வெற்றி ‘அந்த 7 நாட்கள்’ 

By செய்திப்பிரிவு

வி.ராம்ஜி


நடிகை அம்பிகா 1979-ம் ஆண்டு தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். அவருடைய முதல் படம் ‘சக்களத்தி’. திரைக்கு வந்து 40 ஆண்டுகளாகிவிட்டன. அவர் முதன் முதலாக மிகப்பெரிய வெற்றியைச் சுவைத்த படம் ‘அந்த 7 நாட்கள்’.


கேரளத்தில் பிறந்து தமிழுக்கு அறிமுகமாகி, எண்பதுகளின் எல்லா நடிகர்களுடனும் நடித்து, மிகப்பெரிய ரவுண்டு வந்தார். இன்றைக்கும் படங்களிலும் சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.


அம்பிகா, முதன்முதலாக தமிழில் நடித்த படம் ‘சக்களத்தி’. இயக்குநர் தேவராஜ் - மோகன் இயக்கத்தில், சுதாகர், விஜயன், ஷோபா, ஒய்.விஜயா முதலானோர் நடித்த இந்தப் படத்தில் அம்பிகாவும் நடித்திருந்தார். படத்துக்கு இசை இளையராஜா. எல்லாப் பாடல்களும் செம ஹிட்டு.


1979-ம் ஆண்டு வெளிவந்தது அம்பிகாவின் முதல் படம். இதையடுத்து 80-ம் ஆண்டு படம் எதுவும் வரவில்லை. ஆனால் 80-ம் ஆண்டு மத்தியில், படங்கள் புக் ஆகத்தொடங்கின. ஆனாலும் எல்லாமே சின்னச் சின்ன படங்களாகவே அமைந்தன.


81-ம் ஆண்டு, கமல் இருவேடங்களில் நடித்த ‘கடல் மீன்கள்’ படம் வெளியானது. கமல், சுஜாதா, ஸ்வப்னா, அம்பிகா, சுமன், நாகேஷ், தங்கவேலு முதலானோர் நடித்திருந்தனர். பின்னாளில், கமல் - ரஜினியுடன் ஏகப்பட்ட படங்களில் ஜோடியாக நடித்தார் அம்பிகா. கமலுடன் முதன்முதலாக அம்பிகா நடித்த படமென்று பார்த்தால், அது ‘கடல்மீன்கள்’. ஆனாலென்ன... இந்தப் படத்தில், கமலுக்கு மகளாக நடித்தார் அம்பிகா. அதாவது அப்பா - மகன் என இரண்டு கமல். ஆக, கமலுக்கு மகள் ப்ளஸ் கமலுக்கு சகோதரி. இதில் அம்பிகாவுக்கு ஜோடி சுமன்.
கமலின் ‘கடல்மீன்கள்’ படத்தை ஜி.என்.ரங்கராஜன் இயக்கினார். இளையராஜா இசை. பாட்டெல்லாம் சூப்பர். ஆனாலும் படம் பெரிதாகப் போகவில்லை. ஆகவே, அம்பிகா திரையுலகில் கவனிக்கப்படவில்லை.


இதேகாலகட்டத்தில், ‘கடல்மீன்கள்’ படத்தை அடுத்து, ‘தரையில் வாழும் மீன்கள்’ படத்தில் நடித்தார் அம்பிகா. இதில் விஜயபாபு ஹீரோ. ‘கடல்மீன்கள்’ படத்தைப் போலவே ‘தரையில் வாழும் மீன்கள்’ படமும் வெற்றியில் இருந்து கழுவுற மீனில் நழுவுற மீனாகிப் போனது.
இந்த சமயத்தில்தான், அம்பிகாவுக்கு அப்படியொரு வாய்ப்பு கிடைத்தது. காதலித்தது ஒருவரை... கல்யாணம் செய்து கொள்வது இன்னொருவரை. காதலின் குதூகலத்தையும் அது தோல்வியில் முடிந்து கல்யாணத்துக்குள் சிக்கிக்கொண்ட துக்கத்தையும் துக்கத்தினால் தற்கொலைக்கு முயன்றி மீண்டு வந்திருக்கிற இயலாமை கலந்த விரக்தியையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார். அதுதான்... ‘அந்த 7 நாட்கள்’.


’அந்த 7 நாட்கள்’ படத்தை யாரால் மறக்கமுடியும். பாக்யராஜ், அம்பிகா, ராஜேஷ், காஜா ஷெரீப். அவ்வளவுதான் கேரக்டர்கள். பாலக்காட்டு மாதவனையும் வசந்தியையும் டாக்டர் ஆனந்தையும் கோபியையும் மறந்துவிடமுடியுமா என்ன?


‘செண்டிமெண்ட்ல எல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. அதுவரைக்கும் அம்பிகா நடிச்ச படங்கள் பெருசாப் போகலை. ஆனா ‘அந்த 7 நாட்கள்’ படத்துக்கு அம்பிகா சரியா இருப்பாங்கன்னு அவரை புக் பண்ணினேன். ‘அம்பிகா நடிச்ச படம் எதுவுமே சரியாப் போகல.வேற நடிகையைப் போடுங்க’ன்னு எல்லாருமே அட்வைஸ் பண்ணினாங்க. ‘அப்படியொரு பேரு அவங்களுக்கு இருக்குன்னா, அதை மாத்திக்காட்டணும். அப்படியொரு படமா இந்த ‘அந்த 7 நாட்கள்’ இருக்கட்டுமே’ன்னு சொல்லிட்டேன்.


படம் வந்துச்சு. மிகப்பெரிய வெற்றியைத் தந்துச்சு. நான் இப்படிப்பட்ட செண்டிமெண்டுகள்ல எப்பவுமே லாக் ஆக மாட்டேன்’ என்று நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் தெரிவித்தார்.


79-ம் ஆண்டு அறிமுகமாகி படங்களில் நடித்து வந்த அம்பிகாவுக்கு 81-ம் ஆண்டு ‘அந்த 7 நாட்கள்’ கிடைத்தது. அவர் அடைந்த முதல் வெற்றி இது.
இந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும் கமலுடன் நடித்தார் அம்பிகா. இந்த முறை ஜோடி. வெள்ளிவிழாவையெல்லாம் கடந்து ஓடிய அந்தப்படம்... ‘சகலகலா வல்லவன்’.


அதேபோல், பஞ்சு அருணாசலம் தயாரிப்பில், எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், ரஜினியுடன் அம்பிகா இணைந்து நடித்ததுதான் ‘எங்கேயோ கேட்ட குரல்’. இதில் ராதாவும் நடித்தார். அநேகமாக, அக்கா அம்பிகாவும் தங்கை ராதாவும் இணைந்து நடித்த முதல் படம் இதுவாகத்தான் இருக்கும்.


ஆக, 1979-ம் ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி வெளியானது, அம்பிகாவின் முதல் படமாக ‘சக்களத்தி’ இப்போது 40 வருடங்களாகிவிட்டன.
நாற்பது வருடங்களைக் கடந்தும், மக்கள் மனங்களில் நின்றுகொண்டிருக்கிற, இன்றைக்கும் நடித்துக் கொண்டிருக்கிற அம்பிகாவை வாழ்த்துவோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்