'கோமாளி' படத்தில் ‘ரஜினி அரசியல்’ விமர்சன காட்சிகள் நீக்கம்: தயாரிப்பாளர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

 ‘ரஜினி அரசியல்’ தொடர்பான விமர்சன காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்படுவதாக 'கோமாளி' படத்தயாரிப்பாளர் தனியார் தொலைக்காட்சிப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ப்ரதீப் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கோமாளி'. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகவுள்ளது. 

ஆகஸ்ட் 3-ம் தேதி  படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டது படக்குழு. அதில் இறுதிக் காட்சியில் கோமாவிலிருந்து எழுந்த கதாநாயகனிடன் யோகிபாபு இது 2019-ம் ஆண்டு என்று கூறி ரஜினி அரசியலுக்கு வருவேன் என பேசிய காட்சியை காட்டுவார். அப்போது நாயகன் நான் நம்பமாட்டேன், இது 1996-ல் சொன்னது என்று கூறுவார்.

நகைச்சுவைக்காக அமைக்கப்பட்ட இந்தக்காட்சியில்,  ரஜினி பல வருடங்களாக அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்வதைக் கிண்டல் செய்திருந்தார்கள். இதற்கு ரஜினி ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

மேலும், 'கோமாளி' ட்ரெய்லரைப் பார்த்துவிட்டு கமல், அதன் தயாரிப்பாளருக்கு தொலைபேசி வாயிலாக தன் அதிருப்தியை பதிவு செய்தார். இதனால் இது கூடுதல் சர்ச்சையாக உருவெடுத்தது.

இந்நிலையில் 'கோமாளி' படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இன்று (ஆகஸ்ட் 5) காலை தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில் "ரஜினி தொடர்பான காட்சிக்கு கமல் அவர்கள் தொலைபேசியில் அழைத்து தனது அதிருப்தியைச் சொன்னார்.

அவர் கூற்றுப்படி காட்சி எண்ணத்தை உருவாக்குவதாக இருந்தால் கண்டிப்பாக அந்தக்காட்சியை படத்திலிருந்து நீக்கிவிடுகிறேன் என்று கூறியிருந்தேன். மேலும், ரசிகர்கள் தொடர்ச்சியாக அந்தக் காட்சிகளை நீக்குமாறு கேட்டு வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து அவர்களது கோரிக்கையை ஏற்று, படத்திலிருந்து அந்தக் காட்சிகளை நீக்கிவிடுகிறோம்.

ரஜினிகாந்த் எனது நெருங்கிய நண்பர். அவர் நடித்த '2.0' படத்தில் இணைந்து நடித்துள்ளேன். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என நினைக்கும் ரசிகர்களில் நானும் ஒருவன். அவருடைய பெயருக்கும் புகழுக்கும் என்ன இழுக்கு வந்தாலும் தாங்கிக் கொள்ள மாட்டேன்.

அவர் சீக்கிரமாக அரசியலுக்கு வர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் அந்தக் காட்சியை படமாக்கினோம். தற்போது வரும் அதிருப்தியை மனதில் வைத்து நீக்க முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக படத்தின் இயக்குநர் ப்ரதீப், ஜெயம் ரவி ஆகியோரிடமும் பேசிவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார் ஐசரி கணேஷ்.

'கோமாளி' படக்குழுவினரின் இந்த அறிவிப்பால், சமூக வலைத்தளத்தில் நிலவி வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

க்ரைம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்