இயக்குநர் சங்கத் தலைவர் பதவி ராஜினாமா: தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்கு பாரதிராஜா போட்டி - பின்னணி என்ன?

By ஸ்கிரீனன்

2017 - 2019 ஆம் ஆண்டுக்கான தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில், தலைவராக விக்ரமனும், பொதுச் செயலாளராக ஆர்.கே.செல்வமணியும், பொருளாளராக பேரரசுவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது.

எனவே, 2019 - 2021 ஆம் ஆண்டுக்கான தேர்தல் குறித்த இயக்குநர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் தலைவராக பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அவரை எதிர்த்து யாரும் போட்டியிட விரும்பவில்லை என்பதால், ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக தனது இயக்குநர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் பாரதிராஜா. இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கடந்த மாதம் நடைபெற்ற நமது சங்க பொதுக்குழுவில், நமது சங்க நிர்வாகிகள், இயக்குநர்கள், இணை - துணை உதவி இயக்குநர்கள் பேராதரவுடன் போட்டியின்றி என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்ததற்கு மிகவும் நன்றி.

ஆனால், தேர்தலில் போட்டியிடாமல் ஒரு பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அதனால் ஏற்படும் சங்கடங்களை நான் நன்கு உணர்ந்துள்ளேன். ஆகையால், ஜனநாயக முறைப்படி தலைவரைத் தேர்ந்தெடுக்க வசதியாக, எனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளேன். ஒரு மூத்த இயக்குநராக நமது சங்க வளர்ச்சிக்கும், உறுப்பினர்களின் எதிர்கால எனது வழிகாட்டுதலும் பேரன்பும் என்றும் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.

ஜூலை 14-ல் தேர்தல்

பாரதிராஜா தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால், இதர பதவிகளுக்கு ஜூலை 14-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு யாரெல்லாம் போட்டியிடுகின்றனர் என்பது குறித்த விவரங்களும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், பாரதிராஜா ராஜினாமாவால், இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கும் போட்டி நடைபெறவுள்ளது. தலைவர் பதவிக்கு பாரதிராஜா போட்டியிடுவாரா என்று விரைவில் தெரியவரும். கடந்த இரண்டு முறை விக்ரமன் தலைவர் பதவியில் இருந்ததாலும், தற்போது அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதாலும் அவர் போட்டியிட மாட்டார் எனத் தெரிகிறது. மேலும், ஆர்.கே.செல்வமணியும் வேறு இரண்டு சங்கங்களில் பதவிகளில் இருப்பதால், அவரும் போட்டியிட மாட்டார் என்கிறார்கள்.

தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டி

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல், விரைவில் நடைபெறவுள்ளது. இதில், பாரதிராஜாவைப் போட்டியிட வைக்க முயற்சிகள் செய்யப்படுகின்றன. ஆனால், ஒரே நபர் இரண்டு பதவிகளை வகிக்க முடியாது என்ற சர்ச்சை, விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக இருக்கும்போது எழுந்தது. அதேபோன்றதொரு சர்ச்சை, பாரதிராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிடும்போது வரக்கூடாது என்று தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் கருதினார்கள். இதனை முன்வைத்தே பாரதிராஜா தனது இயக்குநர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுதொடர்பாக தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமாரிடம் பேசியபோது, “தயாரிப்பாளர்  சங்கத்தில் பாரதிராஜா சார் வந்தவுடன் நிறைய மாற்றங்கள் செய்து வருகிறோம். க்யூப் நிறுவனத்திடம் பேசி பல சலுகைகள் பெற்றுள்ளோம். நியாயமான விஷயங்களைச் செய்து வருகிறோம். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்கு சுயநலம் இல்லாத ஒரு ஆள் தேவை. அதேநேரத்தில், அந்தப் பதவிக்கு முன்னணி நபராக இருப்பவரும் வரவேண்டும். இந்த இரண்டுமே கொண்டவர் பாரதிராஜா சார். ஆகையால், அவர் தயாரிப்பாளர் சங்கத்தில் இருப்பதுதான் நல்லது என்று, அவரிடம் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கோரிக்கை வைத்தோம். எனவேதான் அவர் இயக்குநர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்” என்று தெரிவித்தார்.

இதன்மூலம் விரைவில் நடைபெறவுள்ள தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு பாரதிராஜா போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

இந்தியா

6 mins ago

சினிமா

30 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்