நடிகர் சங்கத் தேர்தலை அடையாறு எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதி இல்லை: உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

By செய்திப்பிரிவு

நடிகர் சங்கத் தேர்தலை எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதி இல்லை. பொதுமக்கள் பாதுகாப்புதான் தங்களுக்கு முக்கியம். மாற்று இடத்தை நாளை தெரிவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சங்கத் தேர்தலில் போலீஸார் புதிதாக ஒரு முடிவு எடுப்பதால் எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் தேர்தல் நடத்த பாதுகாப்பு வழங்க போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி நடிகர் விஷால் புதிய மனு ஒன்றை உயர் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார்.

நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23-ம் தேதி அடையாறு எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெற உள்ளது. தேர்தல் நடப்பதற்கு முன்னர் ஆயிரம் அறிக்கைப் போர்கள், புகார்கள் என தேர்தல் பரபரப்பான சூழலை நோக்கி நகர்கிறது.

நடிகர் சங்கத் தேர்தலில் அரசியல் கட்சியின் தலையீடு உள்ளதென்று இருபுறமும் பரஸ்பரம் குற்றச்சாட்டை வைத்து வரும் நிலையில் நடிகர் சங்கத் தேர்தல் நடக்கும் இடத்தில் பாதுகாப்புக் குறைபாட்டைக் காரணம் காட்டி போலீஸார் மாற்று இடம் குறித்து பேசுவதாகத் தகவல் வெளியாகியது.

சங்கத் தேர்தலுக்கு 5 நாட்கள்கூட இல்லாத நிலையில் இந்தப் பிரச்சினை குறித்து விஷால் உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அவரது மனுவில், “சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் வரும் 23-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தல் நடைபெற உள்ள இடம் அமைச்சர்கள் குடியிருப்புகள், நீதிபதிகள் குடியிருப்புகள், மருத்துவமனைகள் உள்ள பகுதி என்பதால் அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் தேர்தல் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் ஆய்வாளர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வேறு இடத்திற்கு மாற்றப் பரிந்துரைக்கும்படி கல்லூரி நிர்வாகத்திற்கு ஆய்வாளர் கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில் காவல்துறை அனுமதி பெற்றால் தான் தேர்தலை நடத்த முடியும் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேர்தலுக்குப் பாதுகாப்பு கோரி ஏற்கெனவே காவல்துறை ஆணையரிடம் அளித்த கோரிக்கை மனு நிலுவையில் இருப்பதால், அதைப் பரிசீலித்து பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு பட்டியலிடப்பட்டு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''தாங்கள் ஏற்கெனவே தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டதாலும், ஜூன் 23 அன்று தேர்தல் நடத்துவதற்கான அனைத்து வேலைகளையும் செய்துள்ளதால் எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் தேர்தல் நடத்த உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிடவேண்டும்'' எனக் கேட்டுக்கொண்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ''பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க மாற்று இடத்தில் வெளியில் எங்காவது தேர்தலை நடத்த முடியுமா?'' எனக் கேட்டார்.

அப்போது பதிலளித்த விஷால் தரப்பு வழக்கறிஞர், ''வெகு தொலைவில் தேர்தல் நடத்தினால் வாக்களிக்க பெரும்பாலானோர் வர மாட்டார்கள். ஏனென்றால் போக்குவரத்து வசதி பிரச்சினையாக இருக்கும்'' எனத் தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு ஈ.சி.ஆர் அல்லது ஓ.எம்.ஆர் பகுதிகளில் தேர்தல் நடத்த ஆட்சேபம் இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நகருக்கு வெளியே நடத்த சிரமம் என்றால், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ, கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி போன்ற மாற்று இடங்களைத் தேர்வு செய்யலாமே என நீதிபதி தெரிவித்தார்.

எம்.பி., எம்.எல்.ஏ தேர்தலை விட நடிகர் சங்கத் தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. நடிகர் சங்கத் தேர்தலைப் பற்றி கவலையில்லை. மக்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம் என தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நடிகர் சங்கத் தேர்தலை எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது என்றும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத மாற்று இடத்தை நாளை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஜூன் 19க்கு (நாளை) ஒத்தி வைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஓடிடி களம்

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்