நடிகர் சங்கத்தேர்தல்; ஜூன் 23ஆம் தேதி நடத்தலாம்: உயர் நீதிமன்றம் அனுமதி

By செய்திப்பிரிவு

நடிகர் சங்க தேர்தலை நிறுத்திவைத்த சங்கங்களின் பதிவாளர் உத்தரவை ரத்து செய்யக்கோரி விஷால் தொடர்ந்த வழக்கில் தேர்தலை திட்டமிட்டபடி நாளை (ஜூன் 23) நடத்தலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நடிகர் சங்க தேர்தல் நிறுத்தபட்ட உத்தரவுக்கு தடைவிதிக்க கோரி பொது செயலாளர் விஷால் நேற்று வழக்கு தொடர்ந்தார்.

அவரது  மனுவில், "தமிழ்நாடு சங்கங்கள் சட்டப்படி நடிகர் சங்க தேர்தல் நடைமுறையில் தலையிட சங்கங்களின் பதிவாளருக்கு  எந்த அதிகாரமும் இல்லை, தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க விரும்பாத அரசு, சங்கங்களின் பதிவாளர் மூலம் தேர்தல் நடைமுறையை முடக்கியுள்ளதால், பதிவாளர் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதி  ஆதிகேசவலு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விஷால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஓம்பிரகாஷ் வாதத்தில்,  "தொழில் முறை ஆயுட்கால உறுப்பினர்கள் மற்றும் தொழில்முறை ஆண்டு சந்தா உறுப்பினர்கள் ஆகியோர்களுக்கு மட்டுமே வாக்குரிமை உள்ளது. சுயவிவர பட்டியலை வழங்காத 44 உறுப்பினர்களை தொழில்முறை அல்லாத உறுப்பினர்கள், அதேப்போன்று ஆண்டு சந்தா செலுத்தாத 6 பேரை  சங்கத்தில் இருந்து நீக்கியும்

2017 ஆம் ஆண்டு  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது" என்று தெரிவித்தார்.

 மேலும், சங்கத்தின் பதிவை ரத்து செய்ய மட்டுமே பதிவாளருக்கு அதிகாரம் உள்ளதாகவும், தேர்தலை நிறுத்த அதிகாரம் கிடையாது என்றும் வாதிட்டார்.

நடிகர் சங்க உறுப்பினர்கள் தகுதி பட்டியல் குறித்து விசாரிக்கவும்  பதிவாளருக்கு அதிகாரம் இல்லை என்றும், 61 பேரும் ஒரே மாதிரியான புகார் அளித்ததில் இருந்தே இதன் பின்னணியில் 3 வது நபர் இருப்பது தெளிவாக தெரிவதாகவும், தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிய பிறகு அதில் யாரும்  தலையிட முடியாது என்றும் வாதிட்டார்.

சங்கங்களின் பதிவாளர் தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த்பாண்டியன் ஆஜராகி வாதாடினார். அவரது வாதத்தில், "பதவிக்காலம் முடிந்த பிறகு சங்கத்தின் பொது செயலாளர் என்ற முறையில் சங்கத்தின் சார்பில் இந்த மனுவை தாக்கல் செய்ய விஷாலுக்கு தகுதியில்லை என்பதால், அதனடிப்படையில் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல.  சங்கத்தின் விளக்கத்தை கேட்ட பிறகே தேர்தலை நிறுத்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது" என தெரிவித்தார்.

அப்போது நீதிபதி குறுக்கிட்டு, "ஏற்கனவே 9 மாதங்கள் தாமதமாக நடைபெறவுள்ள தேர்தலை மேலும் தள்ளிபோடுவதன் நோக்கம் என்ன? சங்கத்தை நிர்வாகிக்க தற்போதைய நிர்வாகிகளுக்கு அதிகாரம் இல்லையென்றால் அதற்கான குழுவை அமைப்பது தானே?, ஒரு தேர்தலை நடத்துவது எவ்வளவு சிரமமானதும், பொருட்செலவு ஆகும் என்பதும் அரசுக்கு தெரியாதா?  தேர்தல் செலவை அரசு ஏற்க தயாரா? என்றும் கேள்வி எழுப்பினார்.

 பின்னர், அனைத்து ஏற்பாடுகளும் செய்துவிட்டதால், திட்டமிட்டபடி ஜூன் 23-ல் தேர்தல் நடப்பது நடக்கட்டும் என்றும், வாக்குகளை எண்ணாமல் வைக்கட்டும்,  வழக்கின் முடிவை பொறுத்து வாக்குகள் எண்ணுவதா? வேண்டாமா? என முடிவெடுக்கலாம். என யோசனை தெரிவித்தார்.

ஆனால் பதிவாளர் தரப்பில், "இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்க வேண்டாம், பொது செயலாளர் என வழக்கு தொடர விஷாலுக்கு முகாந்திரமே இல்லை என்பது தொடர்பான ஆட்சேபனை குறித்து ஜூன் 24-ல் பதிலளிக்கிறோம்.  ஒரு வேளை இடைக்கால உத்தரவிட்டால் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்ற நிலைப்பாடு குறித்து பதிலளிக்க இரண்டு வாரம் அவசாசம் வேண்டும்." என கோரிக்கை வைத்தார்.

அப்போது விஷால் தரப்பில், அடையாறு எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரிக்கு பதிலாக நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.-வில் தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஜூன் 23-ம் தேதி தேர்தல் நடைபெறுமா? இல்லையா? என்பது குறித்த வழக்கில் இன்றே உத்தரவிடுவதாக நீதிபதி தெரிவித்தார்.

அதன்படி இரவு இதில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி நடிகர் சங்க தேர்தலை திட்டமிட்டப்படி ஜூன் 23 அன்று நடத்த  அனுமதி அளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஓடிடி களம்

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்