முதல் பார்வை:  Mr.லோக்கல்

By உதிரன்

ஸ்டேட்டஸ் ஈகோவால் அவமானப்படுத்தும் நாயகியை அன்பால் காதலிக்க வைக்கும் மிடில் கிளாஸ் நாயகனின் கதையே ' Mr.லோக்கல்'.

கார் விற்பனை நிறுவனத்தில் பணிபுரிகிறார் சிவகார்த்திகேயன். அம்மா, தங்கை என்று அவரது குடும்பம் அன்பின் எல்லையில் அழகாகிறது. குங்குமம் சீரியல் நாயகி நக்‌ஷத்ராவைச் சந்தித்து செஃல்பி எடுக்க ஆசைப்படுகிறார் ராதிகா. இதைத் தன் மகன் சிவகார்த்திகேயனிடம் கூறுகிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் நக்‌ஷத்ராவைச் சந்திக்க பைக்கில் அம்மா ராதிகாவை ஏற்றிச் செல்கிறார் சிவா. இந்த சூழலில் சிக்னலில் வேகமாக வந்த கார் ஒன்று சிவகார்த்திகேயன் பைக் மீது மோத, ராதிகா கீழே விழுகிறார். இதனால் காரை ஓட்டி வந்த நயன்தாராவுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் மோதல் ஆரம்பிக்கிறது.

அடுத்தடுத்த சந்திப்புகளும் மோதலில் முடிய, சிவகார்த்திகேயன் அவமானப்படுத்தப்படுகிறார். அவரின் வேலையும் பறிபோகிறது. இப்படியே நீளும் இருவரின் ஈகோ யுத்தம் முடிவுக்கு வந்ததா, சிவாவின் காதலை நயன் ஏற்றுக்கொண்டாரா, சிவாவைப் புரிந்துகொண்டாரா, ஏன் சிவா சிறை செல்கிறார் போன்ற கேள்விகளுக்கு ராஜேஷ் படங்களின் டெம்ப்ளேட் பாணியில் பதில் சொல்கிறது திரைக்கதை.

இயக்குநர் எம்.ராஜேஷ் கதைக்காக, சம்பவங்களுக்காக, காட்சிகளுக்காக ஏன் வசனங்களுக்காகக் கூட ரொம்ப மெனக்கிடல் செய்யவில்லை. முந்தைய படங்களின் சாயலில் இருக்கும் காட்சிகளைப் பிய்த்துப் போட்டு ஒரே மிக்ஸியில் அடித்துக் கொடுத்திருக்கிறார். அது  எது மாதிரியும் இல்லாமல் அவரது முந்தைய படங்களை நினைவூட்டிக்கொண்டே இருப்பதுதான் சோகம்.

வழக்கம் போல் வெட்டியாகவே திரியுமாறு சிவகார்த்திகேயன் கதாபாத்திரம் இருக்கும். இதில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்யுமாறு காட்டியிருக்கிறார்கள். அதுவும் சும்மா ஒரு இமேஜ் ரெஃபரன்ஸ் போலத்தான்.  உடல் மொழியில், நடனத்தில் வழக்கம் போல் சிவா குறை வைக்கவில்லை. சில இடங்களில் மிமிக்ரியும் செய்கிறார். ஆனால், எதிலும் தனித்துவமும், புதுசும் இல்லை. கவுன்ட்டர் கொடுக்கும் ஒன்லைனர் வசனங்களில் கூட கொஞ்சம் அடக்கியே வாசித்துள்ளார். அந்த வாசிப்பு ஈர்க்கவில்லை. கதாநாயகனுக்கான அம்சங்களில் தன்னைப் பொருத்திக்கொள்ளும் சிவா, கதைக்காக எப்போது பொருத்திக்கொள்வார்? அடுத்த படத்திலாவது  எதிர்பார்க்கலாம். 

நயன்தாரா படம் முழுக்க வருகிறார். ஆனால், அந்தக் கதாபாத்திரத்தின் ஒட்டுமொத்த குணத்தையும் பரிணாமத்தையும் அவர் பிரதிபலிக்கவில்லை.  திமிர், ஈகோ, அதிகாரம், காதல், கருணை, அன்பு, போட்டி என்று எதையும் சரியாகக் கட்டமைக்காத அளவுக்கு நயனின் பாத்திர வார்ப்பில் சறுக்கல். அதையும் மீறி நாயகியாக, அழகுப் பதுமையாக சில காட்சிகளில் ஜொலிக்கிறார்.

அப்பாவியான அம்மாவாக ராதிகா தன் ட்ரேட் மார்க் நடிப்பைக் கொடுத்துள்ளார். 'எருமசாணி' ஹரிஜா சிவகார்த்திகேயனின் தங்கையாக யதார்த்தமான நடிப்பில் மின்னுகிறார். ரோபோ சங்கர், யோகி பாபு, சதீஷ் என்று நகைச்சுவைக்கு மூன்று பேர் உள்ளனர். இதில் யோகி பாபு மட்டுமே ஸ்கோர் செய்கிறார்.

தம்பி ராமையா தன் பங்களிப்பைச் சரியாகச் செய்துள்ளார். நாராயண் லக்கி கதாபாத்திரம் காமெடி என்கிற பெயரில் கண்ணியக் குறைவு.

தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவும், ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசையும் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன. மிஸ்டர் லோக்கலு, நீ நெனைச்சா பாடல்கள் ரசிக்க வைக்கும் ரகம். டக்குனு, மேனா மினுக்கி பாடல்களைக் கத்தரி போட்டுத் தூக்கியிருக்கலாம்.

அரசியல், தேர்தல், சமூக விரோதி, சீமான், மன்சூர் அலிகான் என்று நடப்பில் இருக்கும் அத்தனை விஷயங்களையும் வசனத்தில் சேர்த்துவிட்டால் அது ட்ரெண்டில் பேசப்படும் படமாக இருக்கும் என்று இயக்குநர் ராஜேஷும் கண்ணை மூடி நம்பியிருப்பதுதான் வருத்தம். எந்தத் தவறும் செய்யாமல் இருக்கும் இளைஞனை சமூக விரோதி என்று துப்பாக்கியால் சுடுவதாகச் சொல்வதெல்லாம் அபத்தத்தின் உச்சம். 

சில இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும்  வடிவேலு ரெஃபரன்ஸ் இமிடேஷன்கள் மட்டும் ரசிக்க வைக்கின்றன. சிவகார்த்திகேயனுக்கும் நயனுக்கும் இருக்கும் ஈகோ பிரச்சினை, ஸ்டேட்டஸ் பிரச்சினை சொல்லப்படுகிறது. ஆனால், அதை நம்பகத்தன்மையுடன் காட்சிப்படுத்தவில்லை. நயனைப் பின்தொடர்ந்து சிவா செல்வதற்கான எந்தக் காரணமும் சரியாகச் சொல்லப்படவில்லை. பாரீஸ் காட்சிகள் எல்லாம் படத்தில் தேவையே இல்லாத ஆணி. அடுத்தடுத்து வரும் செயற்கையான காட்சிக் கோர்வைகள் அலுப்பை வரவழைக்கின்றன.

படத்தில் புதிதாக ஈர்த்த ஒரே அம்சம் லவ் கேம்தான். அதைத் தவிர்த்துப் பார்த்தால் உணர்வுபூர்வமாகவும் இல்லாமல், காதலின் உன்னதத்தையும் சொல்லாமல் 'Mr.லோக்கல்' வெறுமனே கடந்து போகிறது. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண அன்னைக்கே வெச்சு செய்துவிடல் என்று சிவகார்த்திகேயன் படத்தில் சொல்கிறார்.  தன்னை நம்பி வரும் ரசிகர்களுக்கும் அதையே இம்மி பிசகாமல் செய்திருக்கிறார் என்பதுதான் நகை முரண்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

29 mins ago

விளையாட்டு

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

மேலும்