இருவருக்கும் பேச்சுவார்த்தையே இல்லாத நிலை; அசோகனுக்கு நடித்துக்காட்டினார் சிவாஜி

By வி. ராம்ஜி

’உயர்ந்த மனிதன்’ படத்தில், முக்கியமான காட்சியில் எப்படி நடிக்கவேண்டும் என்பதை அசோகனுக்கு நடித்துக் காட்டினார் சிவாஜி. இதில் ஆச்சரியம்... அப்போது சிவாஜியும் அசோகனும் பேசிக்கொள்ளமாட்டார்கள் என்பதுதான்!

சிவாஜி, வாணிஸ்ரீ, செளகார் ஜானகி, மேஜர் சுந்தர்ராஜன், அசோகன், சிவகுமார் நடித்த படம் ‘உயர்ந்த மனிதன்’. சிவாஜியின் 125வது படம் இது.

ஏவிஎம் தயாரிப்பில், கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய படம். 1968ம் ஆண்டு, நவம்பர் மாதம் 29ம் தேதி இந்தப் படம் ரிலீசானது. கிட்டத்தட்ட படம் வெளியாகி, 50 ஆண்டுகளாகிவிட்டன. சிவாஜியின் முதல் படமான ‘பராசக்தி’ திரைப்படத்தை நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியாரும் ஏவிமெய்யப்பச் செட்டியாரும் இணைந்து தயாரித்தனர். சிவாஜியின் 125வது படமான ‘உயர்ந்த மனிதன்’ திரைப்படத்தை, ஏவிஎம் நிறுவனமே தயாரித்தது. ’பராசக்தி’யின் இயக்குநர்களான கிருஷ்ணன் - பஞ்சுவே இந்தப் படத்தையும் இயக்கினார்கள்.

படம் வெளியாகி 50வது ஆண்டுவிழாவை, நடிகரும் சிவாஜியின் தீவிர ரசிகருமான ஒய்.ஜி.மகேந்திரன், மிகப்பெரிய விழாவாக நேற்று 21ம் தேதி கொண்டாடினார். இந்த விழாவில், வாணிஸ்ரீ, செளகார்ஜானகி முதலானோர் கலந்துகொண்டனர்.

இந்தப் படம் குறித்து ஓர் சுவாரஸ்யம். தயாரிப்பாளர் ஏவி.மெய்யப்பச் செட்டியார், இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சு, நடிகர் அசோகன் மூவருக்கும் சிவாஜிக்கும் கருத்துவேறுபாடு இருந்தது. எனவே இவர்களுடன் சிவாஜி பேசாமலேயே இருந்தார். ஆனால் இந்த சின்ன சங்கடத்தை உடைத்து, பழையபடி நட்பு தொடரக் காரணமாக இருந்ததுதான் ‘உயர்ந்த மனிதன்’.

ஒருமுறை, சிவாஜியும் ஏ.பி.நாகராஜனும் ஏவிஎம் ஸ்டூடியோவில் உள்ள தியேட்டருக்கு படம் பார்க்க வந்தார்கள். அப்போது உள்ளே, ஏவிஎம் தயாரித்த படம் ஒன்றைப் போட்டுப்பார்த்துக்கொண்டிருந்தார் மெய்யப்பச் செட்டியார். படம் எடுத்ததும் ஒருதடவைக்கு பத்து முறை திரும்பத் திரும்பப் போட்டுப் பார்த்து, கரெக்‌ஷன் சொல்லி, ரீஷூட் செய்வது செட்டியாரின் ஸ்டைல். அதற்காகத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்.

வெளியே சிவாஜி நீண்டநேரம் காத்திருந்தார். ஒருகட்டத்தில், கோபமாகி, சிடுசிடுத்தபடி கிளம்பிவிட்டார். வெளியே வந்த மெய்யப்பச் செட்டியாருக்கு சிவாஜி வெகுநேரம் காத்திருந்தது சொல்லப்படவில்லை. ஆனால், திட்டிக்கொண்டே சென்றது மட்டுமே சொல்லப்பட்டது.

இந்தநிலையில், ஒருநாள்... ஏ.சி.திருலோகசந்தரின் படத்தில் நடித்துக்கொண்டிருந்தார் சிவாஜி. ஏ.சி.திருலோகசந்தரும் ஏவிஎம்.சரவணனும் நல்ல நண்பர்கள். அவரைப் பார்க்க அங்கே சரவணன் வந்திருந்தார். இதனிடையே தான் வெளியே நின்றிருந்தது செட்டியாருக்குத் தெரியாது எனும் உண்மையை அறிந்து ரொம்பவே வருந்தியபடி இருந்தார் சிவாஜி.

அப்போது சரவணனிடம், ‘உங்க கம்பெனில என்னை வைச்சு படம் எடுக்கமாட்டீங்களே. ஏவிஎம், என் தாய்வீடு. நான் பேசினது தப்புதான். அப்பாகிட்ட சொல்லிருங்க’ என்றார் சிவாஜி. விஷயத்தை அப்படியே அப்பச்சியிடம் சொன்னார் சரவணன்.

இதையடுத்து ‘உத்தர்புருஷ்’ எனும் வங்காளப் படத்தின் உரிமையை வாங்கி, அந்தப் படத்தைப் போட்டுக்காட்டினார்கள் சிவாஜிக்கு. படம் பார்த்த சிவாஜி, ‘அந்த டாக்டர் கேரக்டர்ல நான் நடிக்கிறேனே’ என்றார். ‘அப்படீன்னா, ஹீரோவா யாரைப் போடுறதாம்? நீங்கதான் ஹீரோ’ என்றார்கள். யோசித்த சிவாஜி, ‘சரி, அந்தக் கேரக்டருக்கு வி.கோபாலகிருஷ்ணனைப் போடுங்க’ என்றார். அதற்கு ஏவிஎம்.சரவணன், ‘டாக்டர் கேரக்டர்ல அசோகன் நடிக்கிறாரு.ஒப்பந்தம் போட்டாச்சு’ என்றார்கள். அசோகனுக்கும் சிவாஜிக்கும் பேச்சுவார்த்தையே இல்லை அப்போது. ஆனால் சிவாஜி ஒன்றுமே சொல்லவில்லை.

அடுத்து வந்தது இன்னொரு  பிரச்சினை.  ’டைரக்ட் பண்றது ஏ.சி.திருலோகசந்தர்தானே’ என்றார் சிவாஜி. ‘கிருஷ்ணன் பஞ்சு’ என்று சொல்லப்பட்டது. ‘கிருஷ்ணன் பஞ்சு கூடலாம் என்னால ஒர்க் பண்ணமுடியாது’ என்று உடனே சொன்னார் சிவாஜி. ‘அதெல்லாம் ஒரு பிரச்சினையும் வராது. ஒருநாள் ஷூட்டிங் போனா எல்லாம் சரியாப் போகும்’ என்று சொல்ல அதற்கும் ஒத்துக்கொண்டார் சிவாஜி.

நிறைவாக சம்பளம் பேசப்பட்டது. சிவாஜியின் சகோதரரிடம் ‘எவ்ளோ சம்பளம் வேணும்?’ என்று ஏவிஎம் நிறுவனம் கேட்டது. ‘உங்க இஷ்டம்’ என்று சொன்னார் அவர். அப்போது சிவாஜி வாங்கிக்கொண்டிருந்த சம்பளத்தைக் கேட்டறிந்து, அந்தச் சம்பளத்தைத் தருவதாகச் சொன்னார்கள். ‘எல்லாம் சரி, ஒரேயொரு கண்டீஷன். இந்தப் படத்துக்கு முன்பணம்னு எதுவுமே தரவேண்டாம். படம் முடிஞ்சதும் கொடுத்தாப்போதும்னு சொல்லிட்டாரு’ என்று சிவாஜியின் சகோதரர் சொன்னார். அதுதான் சிவாஜியின் பெருந்தன்மை.

படப்பிடிப்பு நடந்தது. படத்தில் முக்கியமான காட்சி. சிவாஜியும் அசோகனும் காட்சியில் இருக்க, அசோகன் முக்கியமானதொரு விஷயத்தை சிவாஜியிடம் சொல்லுவார். ஆனால் அசோகனின் நடிப்பு, இயக்குநர்களுக்கு திருப்தியாக இல்லை. அப்போது சிவாஜி, இயக்குநர் கிருஷ்ணன் பஞ்சுவிடம் சென்று காதோரமாக... ‘தப்பா எடுத்துக்கலேன்னா, இந்த சீன்ல எப்படி நடிக்கணும்னு நடிச்சுக் காட்டட்டுமா?’ என்று கேட்டார். அசோகனிடமும் கேட்கச் சொன்னார். அதன்படியே கேட்கப்பட்டது. அசோகனும் சம்மதித்தார்.

அசோகன் நடிக்க வேண்டியதை சிவாஜி நடித்துக் காட்டினார். அப்போது அரங்கில் இருந்தவர்கள் அனைவரும் சிவாஜியின் நடிப்பைக் கண்டு மிரண்டுபோனார்கள். அப்படியே விழிகள்விரியப் பார்த்துக்கொண்டே இருந்தார்கள். அசோகனும் அப்படியே நடித்தார். மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்