‘இளையராஜா - 75’ நிறைவு விழா கோலாகலம்; இசையின் சுயம்புதான் இளையராஜா: ரஜினி பெருமிதம்; பாடல்களைப் பாடிய கமல்ஹாசன்

By செய்திப்பிரிவு

‘இசையின் சுயம்புதான் இளையராஜா’ என்று ‘இளையராஜா - 75’ விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கூறினார். இளையராஜாவின் இசையில் தான் பாடிய பாடல்களை கமல்ஹாசன் மேடையில் பாடினார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ‘இளையராஜா - 75’ என்ற 2 நாள் விழா சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடத்தப்பட்டது. விழாவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் 2-ம் தேதி தொடங்கிவைத்தார். இதில் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், ‘இளையராஜா - 75’ விழாவின் 2-வது மற்றும் நிறைவுநாள் நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன. இதில் ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலகினர் பங்கேற்றனர். விழாவில் ரஜினி பேசியதாவது:

கலைகளிலேயே உயர்ந்த கலை இசைக் கலை. அதுதான் சாமானியர்களுக்கும் புரியக்கூடியது. அதனால், இசைக் கலைஞர்களை பெரிதும் போற்றுகிறேன். லிங்கங்களிலேயே சுயம்பு லிங்கத்துக்குதான் பவர் அதிகம். அதுபோல, இசையின் சுயம்புதான் இளையராஜா. அவரது ஒட்டுமொத்த திறமையும் ‘அன்னக்கிளி’யில் இசையாக வெடித்து வெளிவந்தது. அன்று தொடங்கிய அவரது இசை ராஜ்ஜியம் இன்றுவரை நடக்கிறது. அவரை கவுரவிக்கும் வகையில், தயாரிப்பாளர் சங்கம் விழா நடத்துவது மகிழ்ச்சி.

முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல், பண்டிகை நாள் என்றால் 15, 16 படங்கள் ரிலீஸாகும். அதில் 12 படங்களுக்கு இளையராஜாதான் இசையமைத்திருப்பார்.

இளையராஜாவுக்காகவே தயாரிப்பாளர்கள் காத்திருப்பார்கள். இளையராஜா இசையமைத்து முடித்துவிட்டார் என்றால் தயாரிப்பாளர்கள் குஷியாகி விடுவார்கள். எத்தனையோ தயாரிப்பாளர்களுக்கு பணம் வாங்காமலே செய்து கொடுத்திருக்கிறார்.

இப்போதெல்லாம் ஒரு படத்தின் ரீ-ரிக்கார்டிங்குக்கு 30 நாட்கள் ஆகிறது. ஆனால், இளையராஜா ஒரு நாளில் 3 படங்களுக்கு ரீ-ரிக்கார்டிங் முடித்திருக்கிறார்.

எளிமையான வாழ்க்கை

ஆரம்பத்தில் ‘ராஜா சார்’என்றுதான் கூப்பிடுவேன். அப்புறம், சிறிய இடைவெளிக்குப் பிறகு எதேச்சையாக சந்தித்தபோது, பேன்ட்-சட்டையில் இருந்து வேட்டி-ஜிப்பாவுக்கு மாறியிருந்தார். அவரை ‘சார்’ என்று கூப்பிடத் தோன்றவில்லை. ‘சாமி’ என்று கைகூப்பத்தான் தோன்றியது. அதுமுதல், நாங்கள் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் ‘சாமி’ என்றுதான் கூப்பிட்டுக் கொள்கிறோம். பெரிய மனிதர் எவ்வளவு எளிமையாக, தூய்மையாக இருக்கிறார் என்பதற்கு இளையராஜா உதாரணம்.

என்னைக்கூட தன் படத்தில் பாட வைத்தார். ‘மன்னன்’ படத்தில் 6 வரிகள் பாடினேன். பாடியது என்னவோ 6 வரி. ஆனால், அதற்கு 6 மணி நேரம் பயிற்சி எடுத்தேன்.

இவ்வாறு ரஜினி கூறினார்.

‘‘சரஸ்வதி தேவி மட்டுமல்லாமல், லட்சுமி தேவியும் இளையராஜாவிடம் தற்போது வாசம் செய்கிறாள்’’ என்று ரஜினி சிரித்துக்கொண்டே கூற, இளையராஜாவும் சிரித்தார்.

‘‘ஆனாலும், என்னைவிட கமலுக்குதான் நல்ல பாடல் நிறைய கொடுத்திருக்கிறீர்கள்’’ என்று ரஜினி கூற, அதற்கு இளையராஜா, ‘‘இதையே கமலிடம் கேட்டால், ரஜினிக்குத்தான் நல்ல பாட்டு போடுகிறீர்கள் என்பார். ஏன், ராமராஜன், மோகனுக்கு நான் நல்ல பாட்டு தரவில்லையா. எந்த நடிகருக்கும் நான் வித்தியாசம் பார்ப்பதில்லை. அனைவரின் படங்களுக்கும் ஒன்றுபோலதான் இசையமைக்கிறேன்’’ என்றார்.

மேடையேறிய கமல்ஹாசன், ‘ஹேராம்’ படப் பாடல்,‘நினைவோ ஒரு பறவை’ (சிகப்புரோஜாக்கள்), ‘உன்னைவிட இந்த உலகத்தில் உசந்தது’(விருமாண்டி) ஆகிய பாடல்களை சித்ராவுடன் இணைந்து பாடினார்.

லதா ரஜினிகாந்த், மணிரத்னம், ஷங்கர், பி.வாசு, விஜய் சேதுபதி, மோகன்பாபு, வெங்கடேஷ், விஜய் ஆன்டனி, கார்த்தி, மனோ உள்ளிட்ட திரையுலகினர் பங்கேற்றனர்.

ஒரு மாதமாகப் பயிற்சி பெற்ற ஹங்கேரி இசைக் குழுவினர், இங்குள்ள கலைஞர்களுடன் இணைந்து ஆர்க்கெஸ்ட்ரா வழங்கினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

தமிழகம்

37 mins ago

இந்தியா

20 mins ago

க்ரைம்

55 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வர்த்தக உலகம்

2 hours ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்