திரை விமர்சனம்: லக்ஷ்மி

By செய்திப்பிரிவு

வங்கி ஊழியரான ஐஸ்வர்யா ராஜேஷின் மகள் தித்யா (ல‌ஷ்மி). அம்மாவுக்கு இசை, நடனம் என்றால் அறவே பிடிக்காது. மகள் ல‌ஷ்மிக்கோ பேச்சு, மூச்சு, அசைவு, ஆர்வம், முயற்சி, பயிற்சி எல்லாமே நடனம் தான். இந்திய அளவில் மாபெரும் நடனப் போட்டி நடக்க இருப்பதை டிவி மூலம் அறிந்து கொள்ளும் ல‌ஷ்மி, அதில் கலந்துகொள்ளும் ஆவலில் சென்னை டான்ஸ் அகாடமியில் சேர நினைக்கிறாள். பெற்றோருடன் வந்தால் தான் அனுமதி என்று அங்கு நிபந்தனை விதிக்கப்படுகிறது. இதற்கிடையே, காபி ஷாப் உரிமையாளர் பிரபுதேவா அறிமுகமாகிறார். அவரிடம் தன் ஆசையை சொல்லி, அப்பா வாக நடிக்கச் சொல்கிறாள். டான்ஸ் அகாடமி யிலும் சேர்கிறாள். ஆனால், போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை இழக்கிறாள். கலங்கி நிற்கும் ல‌ஷ்மியை தேற்றும் பிரபு தேவா, அவளை போட்டிக்கு தேர்வு செய்யப் பரிந்துரைக்கிறார். பிரபுதேவா யார்? அவர் சொன்னவுடன் லஷ்மியை எப்படி தேர்வு செய்கிறார்கள்? இதனால் பிரபுதேவா எதிர்கொள்ளும் சிக்கல் என்ன? நடனத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் வெறுப்பது ஏன்? அதையும் மீறி லஷ்மி நடனம் ஆட விரும்புவது ஏன் என்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் சொல்கிறது திரைக்கதை.

நடனத்தை மையமாகக் கொண்டு ஒரு முழுப் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஏ.எல்.விஜய். அதில் சில தருணங்களை உணர்வுபூர்வமாக்கி நெகிழவும் வைக்கிறார். லஷ்மியாக நடிக்கும் தித்யா, மொத்த படத்தையும் தாங்கி நிற்கிறார். துறுதுறுப்பு, வளரிளம் பருவத்து சேட்டைகள், எனர்ஜி கொப்பளிக்கும் நடனம் என வெகுவாக கவர்கிறார். பக்கத் துணையாய் நிற்கிறார் பிரபுதேவா.

ஆனால் காட்சிப்படுத்துதலில் இருந்த தெளிவு, கதையிலும், திரைக்கதையிலும் இல்லாதது இயக்குநருக்கு பெரும் சறுக்கல். மேலோட்டமான கதை, சுவாரசியம் இல்லாத நகர்வுகள் என தொடக்கம் முதல் இறுதிவரை இனம்புரியாத வெறுமை.

வழக்கமாக, நடனத்தைத் தாண்டியும் பிரபுதேவாவிடம் ஒரு துறுதுறுப்பு ஒட்டிக் கொண்டிருக்கும். அந்த உடல்மொழி நமக்குள்ளும் பரவி உற்சாகப்படுத்தும். இந்தக் கதையின் தாக்கமோ, என்னமோ.. அப்படி அவரிடம் இருந்து எதுவும் வரவில்லை. ஆனால், நடனங்களில் அவரது அதே 'ஃபயர்'! ‘‘நீங்க இதை நடனம்னு சொல்றீங்க. நான் இதை மூச்சுன்னு சொல்வேன்’’ என கவிதையை நடனமாகக் காட்சிரீதியாக வெளிப்படுத்தும் விதத்தில் அசத்துகிறார். தன் மாணவர்களுக்கு மூச்சுப் பயிற்சியின் அவசியத்தை உணர்த்தி, அவர்களின் ஆற்றலை வெளிக் கொணர்ந்து பெஸ்ட் பெர்பாமன்ஸை கொண்டுவரச் செய்வதில் சிறந்த மாஸ்டர் என்பதை நிரூபிக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இல்லை. கிடைத்த இடங்களில் தன்னை தக்கவைத்துக் கொள்கிறார். கருணாகரனை வீணடித்துள்ளனர். கோவை சரளாவின் கதாபாத்திரம் சரியாகக் கட்டமைக்கப்படவில்லை. ஆனாலும், தன் பாவனைகளால் அப்பாத்திரத்துக்கு நியாயம் செய்கிறார்.

சென்னை, மும்பையின் அழகை கண் களுக்கு கடத்துகிறது நீரவ்ஷாவின் ஒளிப் பதிவு. சாம் சி.எஸ். இசையில் பாடல்கள் ரசிக்கவைக்கின்றன. பின்னணி இசையும் உயிரோட்டமாக இருக்கிறது. ஆன்டனியின் எடிட்டிங் நேர்த்தி.

ஆனால், காட்சிகளில் நம்பகத்தன்மை இல்லாமல் நாடக பாணி மேலோங்கி இருப்பது உறுத்தல். தித்யா - பிரபுதேவா இடையே நல்ல நட்பு மலர்வதில் இருக்கும் செயற்கைத்தனம், பிரபுதேவா - ஐஸ்வர்யா பிரிவை மிக மேம்போக்காக காட்டுவது, பெயளரவுக்கு ஒரு வில்லனாக சல்மானை காட்சிப்படுத்தியது என வரிசையாக பலவீனங்கள். தித்யாவின் தந்தை யார் என்பதற்கும் படத்தில் பதில் இல்லை. பிரபுதேவாவின் கடந்தகால வாழ்க்கையும் போதிய அளவுக்கு சொல்லப்படவில்லை. மிக முக்கியமான பிரிவுக்கான காரணத்தை வசனங்களிலேயே கடந்துபோவது ஏற்புடை யதாக இல்லை. இவற்றைத் தாண்டி, கடைசி அரைமணி நேர உணர்வுபூர்வ தருணங்கள் ல‌ஷ்மியுடன் ஒரு ஒட்டுதலை ஏற்படுத்திவிடுகின்றன. நடன விரும்பிகள் தாராளமாக ரசிக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

உலகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்