கர்நாடகாவில் ‘காலா’வைத் திரையிடுவது குறித்து இன்று முடிவு - விஷால்

By செய்திப்பிரிவு

கர்நாடகாவில் ‘காலா’ படத்தைத் திரையிடுவது குறித்து இன்று முடிவு எடுக்கப்படும் என விஷால் தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரத்தில் தமிழர்களுக்கு ஆதரவாகவும், கன்னடர்களுக்கு எதிராகவும் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார். இதனால், அவர் நடித்துள்ள ‘காலா’ படத்தைத் திரையிடவிட மாட்டோம் என கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளார். அத்துடன், கர்நாடக வர்த்தக சபையும் ‘காலா’ படத்தைத் திரையிட மாட்டோம் எனத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்துப் பேசிய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரான விஷால், “ரஜினி நடித்துள்ள ‘காலா’ படத்தை கர்நாடகாவில் வெளியிடக்கூடாது, தடைசெய்ய வேண்டும் என சில அமைப்புகள் கூறுகின்றன. கர்நாடக வர்த்தக சபையைச் சேர்ந்தவர்களிடம் பேசியிருக்கிறோம். நேற்று மாலை ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இன்று முடிவு எடுக்கப்படும் எனக் கூறியிருக்கிறார்கள். சினிமா வேறு, அரசியல் வேறு. ‘காலா’ படம் ஒருவரால் தயாரிக்கப்பட்டு, அதில் ரஜினி நடித்திருக்கிறார்.

இது திரைப்படம். அவர் அரசியலுக்கு வருவது வேறு. இன்று கர்நாடக வர்த்த சபை என்ன முடிவு எடுக்கப் போகிறது எனத் தெரியவில்லை. கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை, இதுதொடர்பாக நிச்சயம் சந்திப்போம். ‘காலா’ படம் எல்லா இடங்களிலும் நல்லபடியாக வெளியாக வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். காவிரிப் பிரச்சினை பற்றி ரஜினி சார், கமல் சார், சிம்பு மற்றும் நான் கூடப் பேசியிருக்கிறேன். அது தனிப்பட்ட கருத்து. அது ஒரு படத்தைப் பாதிக்கக்கூடாது.

சினிமாவையும் அரசியலையும் ஒன்று சேர்க்கக்கூடாது என்பதே எங்கள் நோக்கம். ஒவ்வொருவருக்கும் தனித்தனி கருத்து இருக்கும். என்னைப் பார்த்து, ‘நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?’ என்று கேட்டால், நான் ஒரு பதில் சொல்வேன்; மற்ற நடிகர்கள் வேறொரு பதில் சொல்வார்கள். ஐ.பி.எல். விளையாட்டின்போது ஏற்பட்ட பிரச்சினை பற்றி நீங்கள் பாரதிராஜா சாரிடம்தான் கேட்க வேண்டும்.

ரஜினி அரசியலுக்கு வருவதில் தவறு கிடையாது. புதுமுகங்கள் அரசியலுக்கு வரவேண்டும். அந்த அடிப்படையில்தான் ரஜினி சார் வருகிறார். படம் வெளிவரும்போது, அதையும் அரசியலையும் ஒன்று சேர்ப்பது தவறு. நாம் அனைவரும் இந்தியர்களே... மாநிலங்கள் ஒரு எல்லைக்கோடு, அவ்வளவுதான்.

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடந்தது. அதில், 13 பேர் இறந்துள்ளனர். கணக்கில் வராதவர்கள் எத்தனை பேர் இறந்துள்ளனர் என எனக்குத் தெரியும். நானும் ஓட்டு போட்டவன்தான். யார் சுடச் சொன்னது? என்று கேட்டதற்கு, துணை வட்டாட்சியர் என்று சொல்கிறார்கள். எஸ்.பி, கலெக்டரையும் இடமாற்றம் செய்துவிட்டார்கள். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், கணக்கில் வந்த 13 பேர் இறந்ததற்கு அந்த ஆலை மூடப்பட்டுவிட்டது. இறந்தவர்கள் பெயர் வரலாற்றில் எழுதப்பட வேண்டும்.

144 தடை போட்டால் முட்டிக்கு கீழேதான் சுட வேண்டும். அது எல்லாருக்குமே தெரிந்தது. ஜல்லிக்கட்டு பிரச்சினையாக இருக்கட்டும், நெடுவாசல், ஸ்டெர்லைட் பிரச்சினையா இருக்கட்டும்... அவர்களுக்குத் தேவையானதைக் கொடுப்பதே உணர்வுபூர்வமான விஷயமாக இருக்கும். இரவு நேரத்தில் 4 பேர் கூடினாலே போலீஸ் வந்து கேட்பார்கள். இங்கு லட்சக்கணக்கானோர் கூடியும் தெரியவில்லை என்று கூறுவது முட்டாள்தனம். பிரதமர் வெளிநாடு போகாமல், உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தாலே சந்தோஷம்தான்.

தமிழ் சினிமாவுக்காகவும் நாங்கள் போராடிக்கொண்டு தான் இருக்கிறோம். பிரதமரை வேண்டி கேட்டுக் கொள்கிறேன். உள்நாட்டுப் பிரச்சினைகளைக் கவனியுங்கள். நல்லது செய்தால், நான் அவருக்குத்தானே ஓட்டு போடுவேன், நல்லது செய்யாமல் எப்படி ஓட்டு போட முடியும்.

 13 பேர் குடும்பத்திற்கும், தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஒரு தொகையை நாங்கள் கொடுக்க வேண்டும் என நினைக்கிறோம். 13 போராளிகளின் குடும்பத்திற்கும் பெரிய இழப்புதான். அவர்களை மறக்கக்கூடாது. வாக்களித்தவனாக பாரதப் பிரதமரை வேண்டி கேட்டுக் கொள்கிறேன், நம் நாட்டுப் பிரச்சினையைக் கவனியுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்