“வரிகள் இல்லை எனில் பாடல் இல்லை” - இளையராஜா மேல்முறையீட்டு வழக்கில் ஐகோர்ட் கருத்து 

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: “பாடல் வரிகள், பாடகர்கள் என அனைத்தும் சேர்ந்துதான் ஒரு பாடல் உருவாகிறது. வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை. அப்படி இருக்கும்போது, பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்?” என்று இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு தடை கோரிய மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜாவின் 4,500 பாடல்களை பயன்படுத்த ‘எக்கோ’ மற்றும் ‘அகி’ உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன. ஒப்பந்த காலம் முடிந்த பிறகும், காப்புரிமை பெறாமல் தனது பாடல்களை பயன்படுத்துவதாக கூறி, இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தயாரிப்பாளர்களிடம் உரிமைப் பெற்று, இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது. அதேநேரம், இளையராஜாவுக்கும் இந்தப் பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருக்கிறது என்று கடந்த 2019-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதனிடையே, படத்தின் காப்புரிமை தயாரிப்பாளரிடம் இருப்பதால், அவர்களிடம் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்ததத்தின் அடிப்படையில் பாடல்களைப் பயன்படுத்த தங்களுக்கு அதிகாரம் இருப்பதாகக் கூறி எக்கோ நிறுவனம் சார்பிலும் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எக்கோ நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், “இசை அமைத்ததற்கு இளையராஜாவுக்கு தயாரிப்பாளர் ஊதியம் கொடுத்துவிட்டார். இதனால், அந்த உரிமை தயாரிப்பாளருக்குச் சென்றுவிடும். தயாரிப்பாளரிடம் இருந்து எங்களது நிறுவனம் உரிமை பெற்றுள்ளதால், பாடல்கள் தங்களுக்கு சொந்தமாகிவிட்டது” என்று கூறினார்.

அப்போது இளையராஜா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், “இசையமைப்பு என்பது கிரியேட்டிவ் பணி என்பதால் காப்புரிமை சட்டம் இதற்குப் பொருந்தாது” என கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “அப்படி என்றால் பாடலின் வரிகள், பாடலைப் பாடும் பாடகர் என அனைத்தும் சேர்ந்துதான் ஒரு பாடல் உருவாகிறது. வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை. அப்படி இருக்கும்போது, பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்?” என கேள்வி எழுப்பினர்.

பின்னர், வழக்கின் விசாரணையை ஜூன் இரண்டாவது வாரத்துக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், பாடல்கள் விற்பனை மூலம் இளையராஜா பெற்ற தொகை யாருக்கும் சொந்தம்? என்பது இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இணைப்பிதழ்கள்

4 hours ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

உலகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

6 hours ago

மேலும்