‘Leo’ FDFS | ‘திரையரங்குகளில் அப்பட்டமான கட்டணக் கொள்ளை’ - அரசுக்கு கேட்குமா ரசிகர்களின் குமுறல்?

By சல்மான்

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘லியோ’ திரைப்படம் வரும் 19-ஆம் தேதி வெளியாகிறது. ‘மாஸ்டர்’ திரைப்படம் பெற்ற வரவேற்பும், ‘விக்ரம்’ படத்தின் மூலம் லோகேஷ் கனகராஜ் உருவாக்கிய ‘லோகிவெர்ஸ்’ என்ற விஷயமும்தான் இந்த பெரும் எதிர்பார்ப்புக்கு காரணம். ’பீஸ்ட்’ படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களுக்குப் பிறகு ‘வாரிசு’ படம் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வந்தாலும், ரசிகர்கள் எதிர்பார்த்தது என்னவோ ‘லியோ’ குறித்து அப்டேட்களைத்தான். அந்த அளவுக்கு ‘லோகேஷ் - விஜய்’ கூட்டணியின் மீது பெரும் ஹைப் உருவாகியிருந்தது.

அதுமட்டுமின்றி ‘விக்ரம்’ படத்தின்போது முன்கூட்டியே சில சர்ப்ரைஸ்களை படத்தில் பணியாற்றியவர்கள் போட்டு உடைத்துவிட்டதால் இந்த முறை படத்தின் தலைப்பை கூட படு சீக்ரெட்டாக வைத்திருந்தது படக்குழு. பட அறிவிப்பு முதல்முறையாக வந்தபோது தான் ‘லியோ’ என்ற பெயரே ரசிகர்களுக்கு தெரியவந்தது. அந்த அளவுக்கு ஆரம்பம் முதலே ஹைப் ஏற்றப்பட்டு வந்த இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரிலீஸுக்கு இன்னும் மூன்று நாளே உள்ள நிலையில் உச்சத்தை தொட்டுள்ளது.

இதுவரை எந்தப் படத்துக்கும் இல்லாத அளவுக்கு புக்கிங் திறக்கப்பட்ட சில நொடிகளிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விடுகின்றன. படத்தின் மீதான எதிர்பார்ப்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த விரும்பும் திரையரங்க நிர்வாகங்கள் பட தயாரிப்பு நிறுவனத்தின் அப்டேட் பதிவுகளையே மிஞ்சும் விதமாக சமூக வலைதளங்களில் அலப்பறை செய்கின்றன. படத்தின் ட்ரெய்லருக்கு ஒரு டீசர், அந்த டீசருக்கு ஒரு க்ளிம்ப்ஸ், அந்த க்ளிம்ப்ஸுக்கு ஒரு அறிவிப்பு டீசர் என்று தயாரிப்பு நிறுவனங்களின் பாணியை பின்பற்றி, டிக்கெட் புக்கிங் திறப்புக்கு ஒரு அப்டேட், அந்த அப்டேட்டுக்கு ஒரு அப்டேட் என்று திரையரங்க நிர்வாகங்கள் செய்த கூத்தெல்லாம் நடந்ததை காணமுடிந்தது.

இது ஒருபுறமிருக்க, ’லியோ’ படத்தின் முதல் காட்சி 4 மணியா அல்லது 7 மணியா என்று குழப்பம் எழுந்த நிலையில் காலை 9 மணிக்கு முதல் காட்சியை தொடங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டு தெளிப்படுத்தியிருந்தது. ஆனால், கடந்த சனிக்கிழமை (அக்.14) முதல் டிக்கெட் புக்கிங்கை ஆரம்பித்த சில திரையரங்குகள் சொல்லிவைத்தாற்போல் 9 மணி காட்சியை திறக்கவே இல்லை. மற்ற காட்சிகள் அனைத்தும் வேகமாக நிரம்பிக் கொண்டிருந்த நிலையில், முதல் காட்சிக்கான புக்கிங்கை இப்போது திறப்பார்கள், அப்போது திறப்பார்கள் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

சென்னையில் இதுவரை புக்கிங் திறக்கப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும், இன்று (அக்.16) வரை 9 மணி காட்சிக்கான புக்கிங் இல்லை. இன்னும், சில திரையரங்குகள் 9 மணிக்கான புக்கிங்கை திறப்பதற்கு முன்பாகவே சீட்டுகள் நிறைந்துவிட்டதாக காட்டின. இதற்கான காரணத்தை தீவிர விஜய் ரசிகர்களிடம் விசாரித்தபோது, முன்னெப்போதும் இல்லாத வகையில் ‘லியோ’ படத்துக்கு திரையரங்குகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதாக குமுறினர்.

சென்னையில் வழக்கமாக பெரிய நடிகர்களின் படங்களின் முதல் நாள் முதல் காட்சி கொண்டாட்டங்களுக்கு பேர்போன சில முக்கிய திரையரங்குகள் இன்னும் புக்கிங்கை திறக்காத நிலையில், மிக சுமாரான ஒலி-ஒளி தரம் கொண்ட திரையரங்குகளில் கூட ரூ.1200 முதல் ரூ.1500 வரை டிக்கெட் விற்கப்படுவதாகவும், பெரிய திரையரங்குகளில் டிக்கெட் விலை ரூ.2000 முதல் ரூ.4000 வரை போகலாம் என்றும் வேதனையுடன் கூறுகின்றனர்.

நிலைமை இப்படியிருக்க, நேற்று கோவையில் உள்ள ஒரு பிரபல திரையரங்கில், ஒரு டிக்கெட் ரூ.450-க்கு விற்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தது. அதில் டிக்கெட் ரூ.190 ரூபாயா? என்று கேட்கும் ரசிகரிடம், “ரூ.190 கீழ்வரிசைதான் கிடைக்கும். மேல்வரிசை ரூ.450... காம்போவுடன் கவுன்ட்டரில் வாங்கிக்கலாம்” என்று சொல்கிறார் அந்த திரையரங்க ஊழியர். அரசு நிர்ணயித்த டிக்கெட் விலையை விட கூடுதல் விலை டிக்கெட் விற்கக்கூடாது என்று கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கையை மீறியும் கூட இப்படி அப்பட்டமான பகல் கொள்ளையில் திரையரங்குகள் ஈடுபடுவது கண்டனத்துக்குரியது.

இப்படி மனம்போன போக்கில் டிக்கெட் விலையை ஏற்ற முடியாது என்பதால் தான் காலை 9 மணி காட்சிக்கான புக்கிங்கை எந்த திரையரங்கும் திறக்கவில்லை என்பது ரசிகர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு. இந்த சூழலில், 'லியோ' திரைப்படத்தின் சிறப்பு காட்சியை காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கே திரையிட அனுமதிக்குமாறு தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் சார்பில் வழக்கறிஞர் கர்னல் கணேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். இந்த வழக்கை வழக்கை அவசர வழக்காக சென்னை உயர் நீதிமன்றம் நாளை (அக்.16) விசாரிக்க உள்ளது.

நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு தங்களது ஆதர்ச நடிகரின் படத்தை திரையரங்கில் கொண்டாட்ட மனநிலையுடன் பார்க்க ஆசைப்படும் ரசிகர்களின் ஆர்வத்தை பயன்படுத்தி அதிக விலைக்கு டிக்கெட் விற்கும் திரையரங்குகளை தமிழக அரசு கண்காணித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சினிமா ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

5 mins ago

விளையாட்டு

2 mins ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

33 mins ago

உலகம்

44 mins ago

விளையாட்டு

56 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

1 hour ago

மேலும்