கலாபவன் மணி இறப்பில் மர்மம்: போலீஸ் விசாரணையில் திருப்பம்

By செய்திப்பிரிவு

நடிகர் கலாபவன் மணி கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தார். அவரது உடலில் மீதைல் ஆல்கஹால் கலந்திருப்பது தெரியவந்ததை அடுத்து போலீஸார் இயற்கைக்கு மாறான மரணம் எனக் குறிப்பிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மலையாளம், தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் குணச்சித்திர நடிகர், வில்லன் உள்ளிட்ட ஏராளமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர் கலாபவன் மணி(45). தமிழில் ஜெமினி, பாபநாசம் உள்ளிட்டவை இவரின் குறிப்பிடத்தகுந்த படங்கள்.

கடந்த 1971-ம் ஆண்டு பிறந்த மணி, ஆட்டோ டிரைவராக பணிபுரிந்தவர். நிகழ்த்துக் கலை பயிற்சி மையமான கொச்சின் கலாபவன் அரங்கில் மிமிக்ரி கலைஞராக பிரபலமாகி பின்னர் திரைத்துறையில் நுழைந்தார்.

கடந்த சனிக்கிழமை திருச்சூர் சாலக்குடியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் சுயநினைவற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட கலாபவண் மணி உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரின் நிலைமை மோசமடைந்ததை அடுத்து கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு நடந்த பரிசோதனையில், கலாபவன் மணியின் உடலில் மீதைல் ஆல்கஹால் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். உடனடியாக இதுதொடர்பாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், மணியின் மிக மோசமான உடல்நிலை காரணமாக அவரின் வாக்குமூலத்தை காவல் துறையால் பதிவு செய்யமுடியவில்லை. இந்நிலையில் அவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

இதனிடையே, மணி தங்கியிருந்த வீட்டில் காவல் துறையினர் சோதனை நடத்தினர். அவர் அங்கு மூன்று நண்பர்களுடன் தங்கியிருந்துள்ளார். அவர்களிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

உடல் தகனம்

இதனிடையே திங்கட்கிழமை காலை முளங்குன்னத்துக்காவு அரசு மருத்துவமனையில் மணியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

பின்னர், திருச்சூரில் உள்ள சங்கீத நாடக அகாடமி அரங்கில் கலாபவன் மணியின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. அங்கு ஜெயராம் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

அவரது மறைவையொட்டி, சாலக்குடியில் நேற்று மாலை 6 மணி வரை கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. சாலக்குடியில் அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

மீதைல் கலந்த மதுவை குடித்தால் மரணம்

மீதைல் அதிகமாக கலந்த மதுவை குடித்தால் உயிரிழப்பு ஏற்படும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

கலாபவன் மணி உடலில் மீதைல் கலந்த மது இருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த மீதைல் மது பற்றி டாக்டர்களிடம் கேட்ட போது, “மீதைல் என்பது விஷத்தை போன்றது. சாராயத்தில் போதைக்காக மீதைல் கலக்கப்படுகிறது. இவை தவிர வார்னிஷ், விரல் நகத்தில் பூசும் சாயம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களிலும் மீதைலை சேர்க்கின்றனர். அளவுக்கு அதிகமாக மீதைல் சேர்க்கப்பட்ட சாராயத்தைக் குடிப்பவர்களுக்கு கண் பார்வை பறிபோகும். சுவாசப் பிரச்சினை ஏற்படும். ரத்த ஓட்டம் தடைப்படும். கோமா நிலைக்கு செல்லக்கூடும். உயிரிழப்பு ஏற்படவும் அதிகம் வாய்ப்புள்ளது” என்றனர்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

க்ரைம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்