'பாகுபலி' வெளியாகி ஐந்து ஆண்டுகள்: இந்திய சினிமாவின் பிரம்மாண்டப் பெருமிதம்

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

இந்திய சினிமாவின் தொடக்க ஆண்டுகளில் சரித்திரப் படங்களும் மன்னர் காலத்துப் படங்களும் மட்டுமே வந்துகொண்டிருந்தன. பிறகுதான் நிகழ்கால சமூகக் கதைகளும் படமாகத் தொடங்கின. இருந்தாலும் ஒரு காலகட்டம்வரை ஆண்டுக்கு ஒரு சில மன்னர் காலப் படங்களாவது வந்துகொண்டுதான் இருந்தன. ஆனால் 1980களில் திரைத் துறையில் நுழைந்த சாதனைப் படைப்பாளிகளின் தாக்கம் மற்றும் ரசனை மாற்றத்தால் மன்னர் காலப் படங்களும் சரித்திரப் படங்களும் குறிஞ்சி மலர்களைக் காட்டிலும் அரிதாகிவிட்டன.

அப்படியே கடந்த கால வரலாற்றையோ கடந்த காலத்தில் நடக்கும் கற்பனைக் கதையையோ திரைப்படமாக்குபவர்கள்கூட மன்னர் காலக் கதைகளை எடுக்கவில்லை. மன்னர் கால வரலாற்றுப் படங்களும் கற்பனைக் கதைகள் சார்ந்த படங்களும் இந்திய சினிமாவில் மிகவும் அரிதாகின. வளர்ந்துவிட்ட தொழில்நுட்ப சாத்தியங்கள், மாறிவரும் ரசனை மற்றும் பொருளாதாரச் செலவுகளின்படி மன்னர் காலப் படங்கள் மிகவும் செலவு பிடிக்கும் விஷயமாகக் கருதப்பட்டது. படம் ஓடவில்லை என்றால் தாங்கிக்கொள்ள முடியாத நஷ்டம் வரும் என்ற அச்சமும் இருந்தது.

இந்தச் சூழலை தலைகீழாகத் திருப்பிப்போட்ட படம் 'பாகுபலி'. ஐந்து ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் (2015 ஜூலை 10) வெளியான 'பாகுபலி' வசூலில் உலக சாதனை புரிந்தது. இந்திய சினிமாவைத் தலை நிமிர வைத்தது. இவ்வளவு பிரம்மாண்டமாக ஒரு படம் எடுக்க முடியுமா என்று இந்திய திரைப்பட ரசிகர்களையும் விமர்சகர்களையும் மட்டுமல்லாமல் திரையுலகினரையே பிரமிப்பில் ஆழ்த்தியது.

ராஜமெளலியின் ராஜபாட்டை

தெலுங்கு சினிமாவில் தொட்டதெல்லாம் பொன்னாக்குபவர் என்று பெயர் பெற்ற இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி. அவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் வெற்றிபெற்றவை. 'மகதீரா' என்ற மன்னர் கால புனைவுப் படத்தை எடுத்தார். அதுவும் தெலுங்கில் மிகப் பெரிய வெற்றிபெற்றதோடு தமிழ் மொழிமாற்று வடிவமாகவும் பெரும் வெற்றிபெற்றது. அதையடுத்து மீண்டும் ஒரு மன்னராட்சி காலத்துக் கதையை எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்குகிறார் என்பதே மிகப் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியது. படத்தில் சத்யராஜ் நாசர், ரம்யா கிருஷ்ணன், ரோகிணி உள்ளிட்ட தமிழ் நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார் என்பது இந்தப் படம் தமிழ் ரசிகர்களுக்காகவும் பிரத்தியேக கவனத்துடன் எடுக்கப்படுகிறது என்ற நம்பிக்கையைக் கொடுத்தது. ஆனாலும் இந்தப் படம் வெளியாகும் நாள் வரை அது அளிக்கப்போகும் வியப்பில் வாயடைத்துப்போகும் திரை அனுபவத்தையும் படத்துக்குக் கிடைக்கப்போகும் உலகளாவிய அங்கீகாரத்தையும் வசூல் சாதனைகளையும் யாரும் ஊகிக்கவில்லை. படக்குழுவினரே ஊகித்திருப்பார்களா என்று தெரியவில்லை.

பாதிக் கதை சொன்ன துணிச்சல்

'மகிழ்மதி' (தெலுங்கில் மகிஷ்மதி) என்ற அரச சாம்ராஜ்யத்தைக் கயவர்களிடமிருந்து மீட்க நடக்கும் போராட்டம்தான் கதை. மகாபாரதம் உட்பட பல இந்திய தொன்மங்களிலும் கதைகளிலும் சினிமாக்களிலும் வந்துவிட்ட கதைதான். ஆனால் அதை சொன்ன விதம் ரசிகர்களைக் கட்டிப்போட்டது. ஒவ்வொரு காட்சியும் பிரம்மாண்டத்துக்கு புதிய பொருள் கொடுத்தது. தொடக்கக் காட்சியில் அத்தனை பெரிய சிவலிங்கத்தை நாயகன் மகேந்திர பாகுபலி (பிரபாஸ்) ஒற்றை ஆளாக தூக்கிவரும் காட்சியிலேயே ரசிகர்கள் லாஜிக்கையெல்லாம் மறந்துவிட்டு திரையில் விரியும் மேஜிக்கை ரசிக்கத் தயாராகிவிட்டனர். அதில் தொடங்கி அருவிகளில் எகிறிக் குதித்து அவந்திகா (தமன்னா)வைக் காண்பது அதைத் தொடர்ந்து மகிழ்மதி சாம்ராஜ்யத்தின் கதையையும் தன் உண்மையான தந்தை மகேந்திர பாகுபலி வீழ்த்தப்பட்டதையும் அவனுக்குப் பிறகு அரியணை ஏறும் உரிமை தன்னுடையதே என்றும் அமரேந்திர பாகுபலி தெரிந்துகொள்வதுதான் கதை.

ஆனால் இந்தக் கதை முழுமையாகச் சொல்லப்படவில்லை. இந்திய சினிமாவில் முதல் முறையாக ஒரு படத்தில் முழுக் கதையைச் சொல்லாமல் விட்டு இரண்டாம் பாகத்தைப் பார்த்தால்தான் முழுக் கதையைத் தெரிந்துகொள்ள முடியும் என்ற வகையில் 'பாகுபலி' படத்தின் இறுதிக் காட்சி அமைந்திருந்தது. இந்த துணிச்சலான முயற்சி வெற்றியும் பெற்றது. பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்ற இந்தப் படம் விடுத்த கேள்விக்கான விடையத் தெரிந்துகொள்ளும் உந்துதலே 'பாகுபலி 2' படத்துக்கான மிகப் பெரிய விளம்பரமாக அமைந்தது.

மலைக்கவைத்த பிரம்மாண்டம்

படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை அசரவைத்தது. குறிப்பாக மகிழ்மதி சாம்ராஜ்யத்தின் கதை சொல்லப்பட்ட விதமும் அதில் இடம்பெற்ற காட்சிகளும் ரசிகர்களை ஆரவாரம் செய்ய வைத்தன. தன் மகனையும் கொல்லப்பட்ட தன் கணவனின் தம்பி மகனையும் தன் இரண்டு கைகளிலும் சுமந்துகொண்டு ராஜமாதா சிவகாமி அறிமுகமாகும் காட்சியிலிருந்தே மகிழ்மதி சாம்ராஜ்யத்தின் கதை பார்வையாளர்களைப் பிரமிக்க வைக்கத் தொடங்கிவிட்டது.

கடைசி அரை மணிநேரம் மகிழ்மதி மீது படையெடுத்துவரும் காலகேயர்களுடனான பிரம்மாண்ட போர்க் காட்சி இந்திய சினிமாவில் அதுவரை நிகழ்ந்திராத அற்புதம் என்று கொண்டாடப்பட்டது. அவ்வளவு நீண்ட போர்க் காட்சியை உண்மைக்கு நிகராகவும் அவ்வளவு பிரம்மாண்டமாகவும் இந்திய சினிமா அதுவரை காட்சிப்படுத்தியதில்லை. படத்தின் மிகப் பெரிய வெற்றிக்கும் இந்திய சினிமாவின் பெருமிதம் என்று தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடப்பட்டதற்கும் இதுவே முக்கியக் காரணம்.

நடிகர்கள் தேர்வு, நடிப்பு. ஆடை அணிகலன்கள், வசனங்கள், ஒளிப்பதிவு, பாடல்கள், பின்னணி இசை, கலை இயக்கம். விஷுவல் எஃபெக்ட்ஸ் என அனைத்தும் வெகு சிறப்பாக அமைந்திருந்தன. குறிப்பாக ராஜமாதாவாக நடித்த ரம்யா கிருஷ்ணன் போர்வீரன் கட்டப்பாவாக நடித்த சத்யராஜ் இருவருக்கும் அவர்களுடைய நெடிய திரைவாழ்வின் சிகரமாக 'பாகுபலி' அமைந்தது.

முன்னுதாரணம் இல்லா சாதனைகள்

'பாகுபலி' இந்தியா முழுவதும் மிகப் பெரிய வசூலைக் குவித்தது. வட இந்தியாவில் அதுவரை அதிக வசூலைக் குவித்த தென்னிந்திய படமாக இருந்த 'எந்திரன்' படத்தின் சாதனையை முறியடித்தது. மற்ற உலக நாடுகளிலும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் உலக அரங்கிலும் திரைப்பட விமர்சகர்கள் இந்தப் படத்தைப் பாராட்டித் தள்ளினார்கள். உலக அரங்கில் இந்தியர்களை பெருமைகொள்ள வைத்த படமாக 'பாகுபலி' அமைந்தது.

'பாகுபலி' பற்றவைத்த தீப்பொறி

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவில் சரித்திரப் படங்களை வெற்றிகரமாக எடுத்துவிட முடியும் என்ற நம்பிக்கையை விதைத்ததே 'பாகுபலி' படத்தின் மிக முக்கியமான வரலாற்றுச் சிறப்பு. இன்னும் பல வரலாறுகளையும் வரலாறு சார்ந்த புனைவுகளையும் தென்னிந்திய திரையுலகில் வரப்போகின்றன. மணி ரத்னம் தன் நீண்ட நாள் கனவான 'பொன்னியின் செல்வன்' படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். நாளை 'சிவகாமியின் சபதம்', 'கடல்புறா' என இன்னும் பல வரலாற்று நாவல்கள் திரைப்படங்களாகலாம். அதற்கான தீப்பொறியை பற்றவைத்த பெருமை 'பாகுபலி'க்குரியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஓடிடி களம்

8 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்