ஊரடங்கு நேரத்திலும் அயராது உழைக்கும் 'லூசியா', 'யு-டர்ன்' இயக்குநர் பவன்

By செய்திப்பிரிவு

இந்த ஊரடங்கு நேரத்தில் தான் செய்து வரும் விஷயங்கள் குறித்துப் பகிர்ந்துள்ளார் 'லூசியா', 'யு-டர்ன்' கன்னடத் திரைப்படங்களின் இயக்குநர் பவன் குமார்.

2013-ம் ஆண்டு, க்ரவுட் ஃபண்டிங் முறையில் கன்னட சினிமாவில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் 'லூசியா'. கன்னடத்தில் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து தமிழில் சித்தார்த் நடிப்பில் 'எனக்குள் ஒருவன்' என்ற பெயரில் வெளியானது. 2016-ம் ஆண்டு பவன் குமார் எடுத்த 'யு-டர்ன்' திரைப்படமும் வெற்றியடைய, இரண்டு வருடங்கள் கழித்து தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இவற்றையும் பவன் குமாரே இயக்கியிருந்தார். தற்போது தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் இருக்கும் பவன் குமார், ஊரடங்கு சமயத்தில் தான் செய்து வரும் பணிகள் குறித்து 'தி இந்து' ஆங்கிலத்துக்கு அளித்துள்ள பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

"ஊரடங்குக்கு முன் உழைத்ததை விட இப்போது அதிகமாக உழைப்பதாக உணர்கிறேன். சில நாட்கள் நான் காலை 5 மணிக்கே எழுந்து விடுகிறேன். எனது மூளை மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்கிறது. ஆனால் இந்த ஊரடங்கு எனக்குப் புதிதல்ல. நான் இப்படி வாழவே பழக்கப்பட்டவன். தனிமையில் தான் திரைக்கதை எழுதுவேன். பொறியியல் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு வீட்டில் உட்கார்ந்து மற்றவர்களின் வாழ்க்கையைத் தான் கவனிப்பேன்.

எனக்கு எல்லாவற்றையும் சரி செய்ய வேண்டும் என்று நினைக்கும் பிரச்சினை இருக்கிறது. சில நேரங்களில் பிரச்சினையில் இருக்கும் என் நண்பர்களை நானே அழைத்து உதவி செய்ய விரும்புவேன். தற்போதைய சூழலில் உலகத்தில் இருக்கும் பிரச்சினையையே தீர்க்க வேண்டும். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது நான் எனது சமூக ஊடக செயலிகளை மீண்டும் எனது மொபைலில் இன்ஸ்டால் செய்தேன். வீட்டில் உட்கார்ந்தபடியே நிறைய செய்ய முடியும் என்பதை காட்ட வேண்டும் என்று நினைத்தேன்" என்கிறார் பவன்.

ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் கன்னடத் திரைத்துறையின் தினக்கூலி பணியாளர்களுக்காக நிவாரண நிதி திரட்ட ஆரம்பித்துள்ளார் பவன்.

"பல பேருக்கு ஒரே நேரத்தில் பணம் அனுப்புவதில் சில சிக்கல்கள் இருந்தன. தங்களின் நிதி பணியாளர்களைப் போய்ச் சேர்ந்ததா என்பதையும் சிலர் தெரிந்துகொள்ள நினைத்தனர். எனவே நானே ஒரு தளத்தை உருவாக்கினேன். அதில் பணியாளரின் பெயர், வயது, வேலை அனுபவம், எந்த சங்கத்தைச் சேர்ந்தவர் என்பதோடு அவரது யுபிஐ முகவரியும் இருக்கும்.

கன்னட திரைத்துறை எப்படி இயங்குகிறது என்பது பலருக்குத் தெரியாது. சினிமா சம்பந்தப்பட்ட எல்லோரிடமுமே நிறைய பணம் இருக்கும் என்று பலர் நினைக்கின்றனர். அதனால் தான் பைரசியைப் பெரிய பிரச்சினையாக அவர்கள் பார்ப்பதில்லை. எனவே கன்னட திரைத்துறையில் சினிமா தயாரிப்பு பற்றி நான் பேச விரும்பினேன். 10 நாட்களில் 7 பகுதிகள் அடங்கிய யூடியூப் வீடியோ தொடரை முடித்தேன். இது வளர்ந்துவரும் இயக்குநர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும்.

இதோடு இரண்டு குறும்படங்களுக்கான யோசனையும் இருக்கிறது. அதை வீட்டிலிருந்தே, நான், என் மகள், என் மனைவியை வைத்து எடுக்கலாம். ஆனால் கேமராவைக் கையாள ஒருவர் தேவை. எனது ஒளிப்பதிவாளரால் இந்த சூழலில் பயணப்பட முடியாது. ஊரடங்கு முடிந்து இந்த யோசனைகளைச் செயல்படுத்துவோம் என நினைக்கிறேன்.

தற்போதைய ஊரடங்கில் பல சராசரி ரசிகர்களும் கூட சர்வதேச படைப்புகளை ஓடிடி தளங்களில் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். எனவே மீண்டும் எல்லாம் சகஜ நிலைக்குத் திரும்பும்போது நமது படங்களில் கதை சொல்லும் தரம் மேம்பட வேண்டும்" என்கிறார் பவன் குமார்.

- ப்ரவீன் (தி இந்து, ஆங்கிலம்), தமிழில்: கார்த்திக் கிருஷ்ணா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்