முதல் பார்வை: டிஸ்கோ ராஜா

By செய்திப்பிரிவு

கொலை செய்யப்பட்ட ஒருவன் மீண்டும் உயிருடன் வந்து பழிவாங்குவதே 'டிஸ்கோ ராஜா'

லடாக் பனி மலைகளுக்கு நடுவே ரவிதேவ்-ஐ வில்லன் ஆட்கள் அடித்துப் போடுகிறார்கள். அவர் இறந்துவிட்டாலும், அங்குள்ள பனியில் அவருடைய உடல் அப்படியே உறைந்துவிடுகிறது. அந்த உடலை ஒரு மருத்துவ லேப்புக்கு கொண்டு வந்து, மீண்டும் உயிரைக் கொண்டு வரும் ஆராய்ச்சியில் ஈடுபடுத்துகிறார்கள். அதில் அவருக்கு மீண்டும் உயிர் வருகிறது. ஆனால், தான் யார் என்பதை மறந்துவிடுகிறார்.

இதற்கிடையே, ரவிதேஜாவின் குடும்பத்தினரை இன்னொரு குழு துன்புறுத்துகிறது. அந்தக் குடும்பத்தினர் அவர் மீண்டும் வருவார் என்று நம்புகிறார்கள். அப்போது தான் மீண்டும் உயிர்பெற்ற ரவிதேவை சந்திக்கிறார்கள். உண்மையில் ரவிதேஜா யார், அவருக்கு என்ன பிரச்சினை, அவரை ஏன் கொல்லத் துரத்துகிறார்கள் என்பதற்கு மிக பொறுமையாக விடைச் சொல்லியிருக்கிறார்கள்.

1980-களில் வரும் கேங்க்ஸ்டராக தன் நக்கலான நடிப்பால் கவர்கிறார் ரவிதேஜா. சமகாலத்தில் மிகவும் அமைதியாக வந்துச் செல்கிறார். இரண்டு விதமாகவும் ஒரே படத்தில் மனிதர் அசத்தியிருக்கிறார். வில்லனாக பாபி சிம்ஹா. சில காட்சிகளில் தனது வில்லத்தனத்தைப் பார்வையிலே கடத்தி அற்புதமாக நடத்தியிருக்கிறார். ரவிதேஜா - பாபி சிம்ஹா இருவருக்குமான காட்சிகளில் ரவி தேஜாவை விட பாபி சிம்ஹாவுக்குத் தான் நடிக்க ரொம்பவே ஸ்கோப்.

படத்தில் பாயல் ராஜ்புட், தான்யா ஹோப் மற்றும் நபா நடேஷ் என மூன்று நாயகிகள். இதில் பாயல் ராஜ்புட்டுக்கு மட்டுமே கொஞ்சம் நடிக்க வாய்ப்பு. அதிலுமே ஒரு சில காட்சியில் மட்டுமே நடித்துள்ளார். மீதமுள்ள 2 நாயகிகளுக்கு எந்தவொரு முக்கியத்துவமுமே இல்லை. அதே போல் வென்னிலா கிஷோர், சுனில், அஜய், சத்யம் ராஜேஷ், ராம்கி, ரகு பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. இதில் சுனிலுக்கு மட்டுமே ஒரு முக்கியமான ரோல்.

தமனின் இசையில் பாடல்கள் பெரிய ஹிட். ஆனால், பாடல்களைக் காட்சிப்படுத்திய விதத்தில் இன்னும் சுவாரசியப்படுத்தியிருக்கலாம். எதுவுமே மனதில் ஒட்டவில்லை. பின்னணி இசை கச்சிதம். அதிலும் ரவி தேவாவுக்கு 1980-களின் பின்னணி கிடார் இசையையே மறுபடியும் மறுபடியும் வாசித்து, ஒரு கட்டத்தில் எரிச்சலையுடைய வைக்கிறார்கள். கார்த்திக்கின் ஒளிப்பதிவு சில காட்சிகளில் அப்ளாஸ் பெறுகிறது. ஷர்வான் சில காட்சிகளை இன்னும் கத்திரிப் போட்டிருக்கலாம்.

படத்தின் ஒட்டுமொத்த கதைக்களம், ஆரம்ப காட்சிகள், இடைவெளியில் இருக்கும் சின்ன ட்விஸ்ட் என நன்றாக இருக்கிறது. ஆனால், இரண்டரை மணி நேர படத்தில் இவை மட்டுமே ஆறுதலாக இருப்பது தான் குறை. நிறைய விஷயங்களைச் சொல்லியிருப்பதால் ஒட்டுமொத்தமாக நாலு படம் பார்த்த அனுபவத்தைத் தருகிறது. காட்சிகளில் எந்தவொரு சுவாரசியமுமே இல்லை. அதில் இயக்குநர் வி.ஐ.ஆனந்த் மெனக்கிட்டு இருக்கலாம்.

ரவிதேஜாவைத் தேடுற குடும்பம், அவர் யாரென்று தெரியாமல் அவரை வைத்து பரிசோதனைச் செய்யும் மருத்துவர்கள், ரவிதேஜாவைத் தேடுற மர்மக் கும்பல் என முதல் பாதியில் நாயகன் யார் என்பதற்கான சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார்கள். ஆனால், அதை முழுமையாக உபயோகிக்காமல் இரண்டாம் பாதி அப்படியே பூச்சாண்டி காட்டுவது மாதிரி எடுத்துள்ளனர். ஒரு கட்டத்தில் இந்தப் படம் எதைப் பின்னணியாகக் கொண்டது என்பது தெரியாமலேயே திரைக்கதை அலைபாய்கிறது.

1980-களில் நடக்கும் ப்ளாஷ்பேக் காட்சிகளுக்காக ரொம்பவே மெனக்கிட்டு இருக்கிறார்கள். ஆனால், அதில் சொல்லப்பட்ட விஷயங்கள் சுவாரசியம் இல்லாததால் பெரிதாக எடுபடவில்லை. ரவிதேஜா யார் என்கிற உண்மை தெரிந்தவுடன், கதை இனிமேல் இப்படித் தான் நகரும் என நினைப்பீர்கள். அப்படியே தான் நகர்கிறது. இப்படித்தானே நினைக்கிறீர்கள், இதோ உங்களுக்கு ஒரு ட்விஸ்ட் என்று க்ளைமாக்ஸில் ஒரு ட்விஸ்ட் வைக்கிறார்கள். அது சுத்தமாக எடுபடவில்லை.

படம் முடிவடைந்தவுடன் 2-ம் பாகத்துக்காக ஒரு சின்ன காட்சி வைத்திருக்கிறார்கள். அதுக்கு இந்தப் படம் நன்றாக இருக்க வேண்டுமே. நல்ல கதையில் திரைக்கதை சுவாரசியத்தைக் கூட்டியிருந்தால் 2-ம் பாகம் கண்டிப்பாக வந்திருக்கும். மொத்தத்தில் இந்த டிஸ்கோ ராஜா ரொம்பவே தடுமாறியிருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

11 mins ago

உலகம்

34 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

53 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

மேலும்