சுஷாந்த் மரணம் குறித்து சர்ச்சை கருத்து: சிக்கலில்  'சக்திமான்' ஹீரோ

By ஐஏஎன்எஸ்

மூத்த நடிகரும், சக்திமான் தொடர் மூலம் புகழடைந்தவருமான முகேஷ் கண்ணா, நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் பற்றிய தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் முன்வைத்த கருத்து பெரிய சர்ச்சைக்கு அடித்தளம் போட்டுள்ளது.

இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த், கடந்த ஜூன் மாதம் மும்பையில் தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டாலும் அவர் பாலிவுட்டின் உள் அரசியலால், வாரிசு அரசியலால் பாதிக்கப்பட்டே தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. தொடர்ந்து, சுஷாந்தின் தந்தை, சுஷாந்தின் காதலி ரியா சக்ரபர்த்தியும், அவரது குடும்பத்தினரும் தான் சுஷாந்தை தற்கொலைக்குத் தூண்டினர் என்று குற்றம்சாட்டி வழக்கு பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் சுஷாந்தின் மரணம் குறித்து தொடர்ந்து தேசிய தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள் விவாதித்து வருகின்றன. அப்படி நடிகர் முகேஷ் கண்ணா கலந்து கொண்ட சில விவாதங்களில், பாலிவுட்டில் கடந்த காலத்தில் நடந்த பல தற்கொலைகள் கொலைகளே என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

ஒரு பக்கம் இந்த கருத்தைச் சிலர் ஒதுக்கினாலும், இன்னொரு பக்கம் முகேஷ் கண்ணாவின் வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை துவங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

ஷிவ் சேனா தலைவர் மற்றும் வசந்த்ராவ் நாயக் ஷேதி ஸ்வலம்பன் மிஷன் அமைப்பின் தலைவர் கிஷோர் திவாரி, மும்பை காவல்துறை ஆணையர் பரம் பீர் சிங்குக்குக் கடிதம் எழுதியுள்ளார். இதில், முகேஷ் கண்ணாவின் குற்றச்சாட்டை வைத்து பொது நல வழக்காக இதை விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

"ஆகஸ்ட் 13-ம் தேதி, ரிபப்ளிக் டிவியில் நடந்த விவாதத்தில், அதன் ஆசிரியர் கோஸ்வாமி, வழக்கறிஞர் உஜ்வால் நிகம், பாஜக தலைவர் சம்பித் பாத்ரா மற்றும் எனது முன்னிலையில் முகேஷ் கண்ணா அதிரடியான குற்றச்சாட்டை முன்வைத்தார். யாரும் அது பற்றி அவரிடம் கேள்வி கேட்கவில்லை. மீண்டும் அதே குற்றச்சாட்டை இன்னொரு தொலைக்காட்சியிலும் முன் வைத்தார்" என்று திவாரி பேசியுள்ளார்.

எனவே இதை அடிப்படையாகக் கொண்டு, ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை காவல்துறை ஆணையர் அமைத்து, முகேஷின் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும் என்று திவாரி கூறியுள்ளார். முகேஷ் கண்ணாவின் குற்றச்சாட்டின் தீவிரம் காரணமாகவும், குறைந்தது இரண்டு சேனல்களில் அவர் இதைப் பேசியிருப்பதாலும், விரைவில் மகாராஷ்டிர அரசு காவல்துறை தரப்பிடமிருந்து அறிக்கை கோரும் என்று மகாராஷ்டிர உள்துறை அமைச்சகம் எதிர்பார்க்கிறது.

பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அதிகாரி பேசுகையில், "தொலைக்காட்சி விவாதத்தில் கூறியது போல, தற்கொலைகளாக மாற்றப்பட்ட கொலைகள் குறித்து அவருக்கோ அல்லது வேறு யாருக்காவது விவரங்கள் தெரியும் என்றால் அதைக் கண்டிப்பாக காவல்துறை மற்றும் நீதிமன்றத்தில் அவர்கள் தெரிவிக்க வேண்டும்" என்றார்.

தீவிரமான குற்றங்கள் அல்லது சதி குறித்துத் தெரிந்தும் சொல்லாமல் இருப்பது குற்றம் என்பதால், காவல்துறை முகேஷ் கண்ணா, அர்னாப், பாத்ரா ஆகியோரை விசாரித்து, அவர்களுக்குத் தெரிந்த விஷயங்களை சொல்ல வைத்துக் கிட்டத்தட்ட பாலிவுட்டில் கடந்த 50 ஆண்டுகளில் நடந்திருக்கும் 100-க்கும் மேற்பட்ட அத்தகைய குற்றங்களை மறு விசாரணை செய்ய வேண்டும் என்றும் திவாரி கூறியுள்ளார். அதே நேரம் கண்ணாவின் குற்றச்சாட்டுகள் பொய் என்று நிரூபணமானால் அவர் 100 கோடி ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும் என்றும் திவாரி கூறியுள்ளார்.

"பொதுவில் இது போல வார்த்தைகள் விடுவது பாலிவுட்டைப் பற்றிய தவறான மதிப்பீட்டையும், மகாராஷ்டிரா காவல்துறை மற்றும் இந்திய நீதித்துறையின் நற்பெயருக்குப் பங்கம் விளைவிக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியட்டும்" என்று திவாரி கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

46 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்