மாமிசக் காதல் - ‘ஆமிஸ்’

By செய்திப்பிரிவு

உணவை விரும்பாதவர் யாரேனும் இவ்வுலகில் இருக்கமுடியுமா? அதிலும் தினமும் மூன்று வேளையும் ஒரே மாதிரியான உணவை சுழற்சி முறையில் சாப்பிட்டு சலித்த ஒருவருக்கு தினமும் வெவ்வேறு முறையில் அதுவும் இயற்கையான முறையில் சமைக்கப்பட்ட உணவுவகைகள் கிடைப்பது வரம். ஒருவரது உணவுத் தேடல் ஒருவரை எந்த எல்லை வரை கொண்டு செல்லும்? அதற்கான விடைதான் ஆமிஸ்.

அஸ்ஸாமில் இருக்கும் சிறிய நகரத்தில் வசிப்பவன் சுமோன். வடகிழக்கு பகுதிகளின் மாமிச உணவுமுறை குறித்த ஆராய்ச்சி செய்யும் பிஎச்டி மாணவன். அதே ஊரை சேர்ந்து குழந்தைகள் மருத்துவர் நிர்மலி. திருமணமானவள். சுமோனின் நண்பனின் வயிற்றுவலியின் மூலம் அறிமுகமாகிறார்கள் இருவரும். உணவுமுறைகள் குறித்த தன்னுடைய ஆராய்ச்சி பற்றியும் இயற்கைக்கு மாறான எந்த விஷயத்தையும் தான் சமைப்பதில்லை எனவும் நிர்மலியிடம் கூறுகிறான் சுமோன்.

தனக்கும் ஒருநாள் சமைத்துக் கொண்டு வருமாறு நிர்மலி கூறுகிறாள். இப்படியாக அவர்களுக்குள் முளைக்கும் நட்பில் விதவிதமான மாமிச உணவுகளை நிர்மலிக்கு அறிமுகம் செய்துவைக்கிறான் சுமோன். ப்ராய்லர் கோழிகளையும், உறையவைக்கப்பட்ட மாமிசங்களையும் உண்டு சலிப்பில் இருக்கும் நிர்மலிக்கும் சுமோன் கொண்டு வரும் முயல் கறியும், ஆற்றில் பிடித்த கெளுத்தி மீனும், புத்தம் புது கிழங்குகளும் அவளது உணவுத்தேடலுக்கு புத்துயிர் அளிக்கின்றன. விநோதமான உணவு அதைத் தொடர்ந்து நிகழும் உரையாடல் மூலம் இருவருக்கும் அவர்களை அறியாமலேயே இயல்பான ஈர்ப்பு ஏற்படுகிறது. ஆனால் சமூகக் கட்டமைப்புகளுக்கு அஞ்சி இருவரும் தங்கள் காதலை அவர்களுக்குள்ளே வைத்திருக்கின்றனர்.

சுமோன் தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்துவதில்லை. வெளியூரிலிருந்து நீண்டநாட்கள் கழித்துவரும் தன் கணவனை சட்டை செய்யாமல் இருக்கிறாள் நிர்மலி. சீக்கிரமே வீட்டில் சமைக்கப்படும் சராசரி சைவ உணவுகள் அவளுக்கு வெறுத்துப் போகிறது. புதிதாக ஏதாவது சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் எப்போதும் நிர்மலிக்குள் குடிகொண்டிருக்கிறது. அவளை தொடமலேயே அவளது இதயத்துக்குள் நுழைய விரும்புகிறான் சுமோன். நிர்மலியின் பெரும்பசிக்காக கற்பனைகெட்டாத அதிர்ச்சிகரமான ஒரு காரியத்தை செய்கிறான். அதுவரை இதமான காதல் இழையோடு பயணித்துக் கொண்டிருந்த கதை இருவரது இருண்டபக்கங்களை நமக்கு காட்சிப்படுத்துகிறது.

ஆராய்ச்சி மாணவனாக வரும் சுமோனின் கதாபாத்திரம் நம் தற்கால உணவுப் பழக்கத்தை கேள்வி கேட்கிறது. அதிலும் பலவகையான உணவுப் பழக்கவழக்கங்களைக் கொண்ட மக்கள் வாழும் இந்தியா போன்ற நாட்டில் உணவுமுறை எப்படி படிப்படியாக மாறிக் கொண்டிருக்கிறது என்பது காட்சிகள் வழியாகவும், உரையாடல்கள் மூலமாகவும் படத்தில் ஆங்காங்கே சொல்லப்படுகிறது.

படத்தின் ஆரம்பகாட்சியில் தனது தோழியுடன் சூப்பர்மார்கெட்டுக்கு செல்லும் நிர்மலி குளிர்சாதனப்பெட்டியின் பதப்படுத்தப்பட்ட கோழியை வெறுப்புடன் பார்க்கிறாள். அதே போல இன்னொரு காட்சியில் தனது கணவன் சமைத்துக் கொடுக்கும் சைவ உணவுகளை சாப்பிட பிடிக்காமல் அசைவ உணவை தேடி எடுத்து சாப்பிடுகிறாள். இந்த காட்சிகளுக்கு படத்தின் பிற்பாதியில் அதிர்ச்சிகரமான பதிலை வைத்திருக்கிறார் இயக்குநர்.

இயக்குநர் பாஸ்கர் ஹஸாரிகாவின் இரண்டாவது படம் இது. தயாரிப்பு அனுராக் காஷ்யப். படத்தில் மையக் கதாபாத்திரங்கள் இருவரும் புதுமுக நடிகர்கள். ஆனால் புதுமுகம் என்று சொல்லவே முடியாத அளவுக்கு இயல்பான சிறப்பான நடிப்பு.

இப்படம் காதலுக்கு ஒரு புதிய இலக்கணத்தை உருவாக்க முயல்கிறது. ஒரு பெண்ணின் மீது கொண்ட மையலுக்காக ஒருவன் எந்த உச்சத்துக்கும் செல்லமுடியும் என்பதை நமக்கு காட்சிகளின் வழியே விவரிக்கிறது. படம் முடிந்து சில நாட்களுக்கு ’ஆமிஸ்’ நம் நினைவிலேயே நிழலாடியபடி இருக்கும்.

இதுவரை உணவை மையமாக வைத்து பல படங்கள் இந்தியாவில் வெளியாகியிருந்தாலும் யாரும் இதுவரை தொடாத ஒரு கதைக்களத்தைக் கொண்ட பாஸ்கர் ஹஸாரிகாவின் ‘ஆமிஸ்’ தனித்து நிற்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

39 mins ago

ஓடிடி களம்

51 mins ago

இந்தியா

29 mins ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

மேலும்