திரைப்பட விழா நடத்துவதில் உள்ள சிக்கல்கள், சவால்கள்- தங்கராஜ் நேர்காணல்

By செய்திப்பிரிவு

36 ஆண்டுகாலமாக ரிசர்வ் வங்கி அதிகாரியாகப் பணியாற்றிய தங்கராஜ், திரைப்படங்கள் மேலிருக்கும் ஆர்வத்தினால் பிலிம் சொசைட்டியில் ஈடுபட்டு 17 ஆண்டுகளாக கடின முயற்சியால் வெற்றிகரமாக சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடத்தி வருகிறார். சர்வதேச திரைப்பட விழா குறித்தும் அதற்குக் கிடைத்த வரவேற்பு குறித்தும் அவரிடம் பேசியதில் இருந்து...

கடவுளின் ஆசியோடு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறோம். எத்தனை இடையூறுகள் வந்தாலும் அவற்றை எல்லாம் உடைத்து அனைவரும் ரசித்துப் பாராட்டக்கூடிய வகையில் இந்த ஆண்டு நடத்தியிருக்கிறோம் என்று உறுதியாகச் சொல்வேன்.

CIFF திரையிடலுக்கு படங்கள் தேர்வை எப்போது தொடங்குவீர்கள்?

தைப் பொங்கல் முடிந்ததுமே திரைப்பட விழாவுக்கான வேலைகளைத் தொடங்கி விடுவோம். மே மாதம் பிரான்ஸில் நடக்கும் கான்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்வோம். அங்கு 10 நாட்கள் தங்கி, அங்கிருக்கும் 100-க்கும் மேற்பட்ட ஏஜெண்டுகளைச் சந்திப்போம். அவர்களோடு கலந்து ஆலோசித்து ஒரு பட்டியலை உருவாக்குவோம். அந்தப் பட்டியலில் இருக்கும் படங்களை இங்குள்ள கமிட்டியிடம் திரையிட்டுக் காட்டுவோம். ஜூன், ஜூலை மாதங்களிலிருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மீட்டிங் நடக்கும். இந்தப் படத்தை ஏன் திரையிட வேண்டும் என்று பலரும் அவர்களது கருத்துகளைச் சொல்வார்கள். நான் அந்தப் படத்தைப் பார்த்திருந்தால், என் கருத்தைச் சொல்வேன். அங்கு பேசி முடிவாகி, இருப்பதிலேயே சிறந்த படங்களைக் கொண்டு வர ஒவ்வொரு ஆண்டுமே முயற்சி செய்து வருகிறோம். தனிப்பட்ட ஒருவரின் முடிவால், எந்தவொரு படமும் திரையிடப்படுவதில்லை.

சமீபத்தில் வெளியான படங்கள் என்றால், அந்தப் படத்தை வைத்திருக்கும் ஏஜெண்ட் அதிகமான பணம் கேட்பார். இந்த ஆண்டு 'பாராசைட்' படத்தை 2 முறை ஸ்கிரீன் பண்ண 3 லட்ச ரூபாய் கேட்டார். ஆனால், எங்களால் 70,000 ரூபாய் தான் தர முடியும் என்று கூறிவிட்டேன். 20 நாட்களுக்கு முன்பு தான் 70,000 ரூபாய்க்குத் தருகிறேன் என ஒப்புக் கொண்டு அனுப்பினார்கள்.
அனுபவம், பேரம் பேசுதல், கடவுளின் ஆசியோடு இந்த ஆண்டு மிகச்சிறந்த படங்களைத் திரையிட்டுள்ளோம். சென்னை சர்வதேச திரைப்பட விழா என்றாலே ஏஜெண்டுகள் பலரும் படம் கொடுக்கத் தயாராக இருப்பார்கள். சரியாக பணத்தைக் கொடுத்துவிடுவார்கள், படத்தையும் சரியாக அனுப்பிவிடுவார்கள் என்ற நல்ல பெயர் எடுத்துள்ளோம்.

ஒவ்வொரு ஆண்டுமே திரைப்பட விழா நடத்த, நீங்கள் சந்திக்கும் சிக்கல்கள், சவால்கள் என்ன?

சிக்கல்கள் வருவது இயற்கைதான். உதாரணமாக முதல் நாள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சப் டைட்டில்கள் வரவில்லை. அது நம் கையில் இல்லை. அதே போல் கேரளாவிலிருந்து கூரியரில் வந்து கொண்டிருந்த 7 படங்கள் எங்கோ ஓரிடத்தில் மாட்டிக் கொண்டன. இது போல பல சிக்கல்கள் எழுந்தன. நம்மிடம் ஆட்கள் குறைவு. ஆனாலும் நம்மால் முடிந்தவரை சிறப்பான முறையில் செயல்பட்டோம்.

அடுத்த ஆண்டு திரைப்பட விழாவுக்கு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?

அடுத்த ஆண்டு திரைப்பட விழாவுக்காக அரசாங்கத்திடம் அதிக நிதி கேட்டிருக்கிறோம். அதைப் பரிசீலிக்கிறோம் என்று சொல்லியுள்ளார்கள். பணம் மட்டும் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்துவிடலாம். இன்னும் சிறப்பான முறையில் நடத்த முடியும். கலந்துரையாடல், மாஸ்டர் க்ளாஸ் நடத்த வேண்டும், வெளிநாட்டு இயக்குநர்களை அழைத்து வர வேண்டும் என்றெல்லாம் சொல்கிறார்கள். அது பண்ண முடியும். அதற்குத் தேவை பணம்.

ஒவ்வொரு கல்லூரியையும் தொடர்பு கொண்டு விஸ்காம் மாணவர்களை அழைத்தோம். என்ன காரணமோ தெரியவில்லை. அவர்கள் பெருமளவில் கலந்து கொள்வதில்லை. மும்பை உள்ளிட்ட பிற இடங்களில் திரைப்பட விழாக்களை எடுத்துக் கொண்டால அங்கு திரைப்பட கல்லூரிகள், பெருநிறுவனங்கள் ஆதரவு தருகிறார்கள். இங்கே அரசாங்கம் கொடுக்கும் நிதியில் இவ்வளவுதான் செய்ய முடியும். திரையுலகினர், பெரிய நிறுவனங்கள் நிதியுதவி செய்வதில்லை. இந்த ஆண்டு ரொம்பவே கஷ்டமான நிலைமை. யாரையும் குறைச் சொல்ல முடியாது. இருப்பதை வைத்து என்ன செய்ய முடியுமோ, அதில் சிறப்பாக செய்து வருகிறோம்.

கோவாவில் 1000 இருக்கைகள் கொண்ட பெரிய திரையரங்குகள் கிடையாது. ஆனால் இங்கே 1000 இருக்கைகள் பெரிய அரங்குகள் நிறையும் போது பெருமையாக இருக்கிறது. கோவாவைப் போல பெரிய படங்களை எல்லாம் ஏன் இங்கே திரையிடுவதில்லை என சிலர் கேட்கின்றனர். அங்கே அவர்கள் 190 கோடி ரூபாய் செலவில் நடத்துகின்றனர். ஆனால் நாம் ஏறக்குறைய 1 கோடி ரூபாய் தான் செலவு செய்கிறோம். எனவே இருக்கும் தொகையில் முடிந்த அளவு சிறப்பாக நடத்துகிறோம்.

விஸ்காம் மற்றும் திரைப்பட கல்லூரி மாணவர்கள் உலகப் படங்கள் பார்த்து தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று விரும்புகிறோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

விளையாட்டு

50 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்