தவறவிடாதீர்: அசுரன் - உழைக்கும் வர்க்கத்தின் வலியும் அரசியலும்!

By சி.காவேரி மாணிக்கம்

14-12-19 | ரஷ்ய கலாச்சார மையம், மாலை 6:00 மணி

தன் நிலத்தையும் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ளப் போராடுகிற உழைக்கும் வர்க்கத்தின் நியாயமான கோபமே ‘அசுரன்’.
தன் மனைவி மஞ்சு வாரியர், மச்சான் பசுபதி மற்றும் 3 பிள்ளைகளுடன் தெக்கூர் கிராமத்தில் வசித்து வருகிறார் தனுஷ். தங்களிடம் இருக்கு சிறிய நிலத்தில் பயிரிட்டு வாழ்ந்துவரும் அவர்களுக்கு, வடக்கூரில் உள்ள ஆடுகளம் நரேன் மூலமாகச் சிக்கல் வருகிறது. சிமெண்ட் ஃபேக்டரி கட்டுவதற்காக அந்த ஊரில் உள்ள நிலங்களை எல்லாம் வாங்கிக் குவிக்கும் 'ஆடுகளம்' நரேனுக்கு, தனுஷிடம் இருந்து மட்டும் நிலத்தை வாங்க முடியவில்லை.

இதனால் ஏற்படும் பிரச்சினையில், ஆடுகளம் நரேன் ஆட்களால் தனுஷின் மூத்த மகன் டீஜே அருணாசலத்தின் தலை தனியாகத் துண்டிக்கப்படுகிறது. இதனால் அதிர்ச்சிக்கு ஆளாகும் தனுஷ் குடும்பம், மகனை இழந்து பரிதவிக்கிறது. தன் மகன் இறக்கவில்லை, என்றாவது ஒருநாள் வந்துவிடுவான் என பித்து பிடித்தவர்போல் ஆகிவிடுகிறார் மஞ்சு வாரியர். தனுஷோ, துக்கம் தாளாமல் எந்நேரமும் குடித்துக்கொண்டே இருக்கிறார்.

16 வயதேயான தனுஷின் இரண்டாவது மகன் கென் கருணாஸ், தாய் - தந்தையை இந்தச் சூழ்நிலையில் இருந்து மீட்க அதிரடி முடிவொன்றை எடுக்கிறார். அந்த முடிவு என்ன? அதனால் தனுஷ் குடும்பம் எந்த மாதிரியான விளைவுகளைச் சந்திக்கிறது? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை மூலக்கதையாகக் கொண்டு 'அசுரன்' படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கதைக்குள் தான் சொல்ல நினைத்த அரசியலையும், தனுஷுக்குத் தேவையான கமர்ஷியல் அம்சங்களையும் உட்செலுத்தியுள்ளார் வெற்றிமாறன். ஆனால், அது கொஞ்சம் கூட உறுத்தாமல், செம்புலப்பெயல் நீர் போல கதையோடு ஒன்றிணைந்து, நாவலைப் படித்து முடித்த திருப்தியைத் தருகிறது.

இளவயது, கல்யாண வயதில் இருக்கும் மூத்த மகன் உள்ளிட்ட மூன்று பிள்ளைகளுக்கு அப்பா என இரண்டுவிதமான தோற்றங்களில் நடித்துள்ளார் தனுஷ். அந்த வயதுக்கே உரிய உடல்மொழியையும் தன்னுடைய நடிப்பால் கொண்டு வந்து விடுகிறார். பொறுத்துப் பொறுத்துப் பொங்கியெழும் தனுஷின் அசுரத்தனமான நடிப்பு, முதல் மகனை இழந்து பரிதவிப்பதாகட்டும், கோபத்தில் வெடிப்பதாகட்டும், இரண்டாவது மகனின் அதிரடி முடிவால் பெருமைப்பட்டாலும் அவனைக் காப்பாற்றப் போராடுவதாகட்டும்... 100 சதவீதம் தன் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார் மஞ்சு வாரியர்.

இளம் வயதுக்கான குறும்புத்தனமும், தனுஷ் மகனுக்கே உரிய கோபம் என மிகக் கச்சிதமாக நடித்துள்ளார் கென் கருணாஸ். டீஜே அருணாசலம், குறைந்த நேரமே படத்தில் வந்தாலும், தன்னுடைய பங்களிப்பை அற்புதமாகத் தந்துள்ளார். ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை வெறித்தனம். படத்தின் தீம் மியூஸிக், தனுஷின் அசுரத்தனத்துக்கு அழகு சேர்க்கிறது. காட்டை, கரடுமுரடான மலையை, நடிகர்களின் முகபாவங்களை இயல்பாக உள்வாங்கியிருக்கிறது வேல்ராஜின் கேமரா.

உழைக்கும் வர்க்கத்திடம் இருந்த நிலங்கள், முதலாளி வர்க்கத்தின் கைகளுக்கு எப்படிப் போனது, செருப்பு கூட அணிய விடாமல் அடிமையாக வைத்திருந்த விதம், உழைப்புச் சுரண்டல், என்னதான் அன்பு காட்டுவது போல் நடித்தாலும், உழைக்கும் வர்க்கத்தை முதலாளி வர்க்கம் எப்படி பாரபட்சத்தோடு நடத்தியது, போராட்டத்தின் மூலமே உரிமைகளைப் பெற முடியும், கல்வியைப் பிடுங்க முடியாது, ஆண்ட பரம்பரை என பல்வேறு அரசியல்களை அப்பட்டமாகப் பேசுகிறது இந்தப் படம்.

வெற்றிமாறனோடு இணைந்து இந்தப் படத்தின் திரைக்கதையை மணிமாறனும், வசனங்களை சுகாவும் எழுதியுள்ளனர். திரைக்கதையைத் தாண்டி இம்மியளவு கூட நம்மை யோசிக்க விடாமல் கட்டிப்போட்டு வைக்கிறது திரைக்கதை. ‘நம்மகிட்ட காடு இருந்தா எடுத்துக்குவானுங்க... ரூவா இருந்தா புடுங்கிக்குவானுங்க... படிப்ப மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துக்கிடவே முடியாது’ என்ற வசனம், உழைக்கும் வர்க்கம் படிப்பால் மட்டுமே இன்று உயர்ந்து வருகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

பழிக்குப் பழிவாங்கும் கதைதானே என இந்தப் படத்தைச் சாதாரணமாகக் கடந்துவிட முடியாது. காரணம், உழைக்கும் வர்க்கத்தின் வலியும் அரசியலும் இந்தப் படத்தில் அழுத்தமாகப் பேசப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்