சென்னை சர்வதேச பட விழா | உட்லண்ஸ் | 23.12.2014 படங்களின் அறிமுகப் பார்வை

By செய்திப்பிரிவு

சென்னை 12-வது சர்வதேச பட விழாவில் செவ்வாய்க்கிழமை உட்லண்ஸ் திரையரங்கில் திரையிடப்படும் படங்களின் அறிமுகக் குறிப்புகள் இவை:

காலை 10 மணி

Kidon/France/Israel/Emmanuel Naccache/81’/2013

இஸ்ரேலின் மூத்த ராணுவ தலைமை அதிகாரி மெஹ்மத் அல் மாஃபா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் படமாக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் 2010-ல் துபாயில் ஓர் ஓட்டலில் நடைபெற்றது. இதை செய்தது மொசாத் ஏஜென்சிகள்தான் என ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. இப்படத்தில், துபாயின் ஓட்டல் அறையில் ராணுவ அதிகாரி கொல்லப்பட்டு கிடக்க மீடியாக்களும் போலீசும் பரபரக்கிறது.

முதல்முறையாக இச்சம்பவம் ஒரு ரகசிய கேமராவில் பதிவாகிறது. சந்தேகத்திற்கு இடமின்றி இதைச் செய்தது மொசாத் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் என்பது நிரூபணமாகிறது. அதே ஓட்டலில் மூன்று இளைஞர்களும் ஒரு இளம்பெண்ணும் தங்கியிருந்து கொலையை நடத்தியுள்ளனர்.

சம்பவம் நடந்த சில மணித்துளிகளில் இஸ்ரேலுக்குத் தப்பிச் சென்றுவிடுகின்றனர். அவர்கள் யார்யார் என்பதையும் கேமராவில் பதிவாகியிருக்கிறது. இதன் பின்னணியில் அணுசக்தி ரகசியங்களைத் திருட முனைந்து பல அரசுகள் தலையிட்டுள்ளதை விறுவிறுப்பான திரைக்கதையில் கூறியுள்ளனர்.



மதியம் 12 மணி

Winter Sleep / Kis uykusu / Nuri Bilge Ceylan / Turkey / 2014 / 196'

ஒரு முன்னாள் நடிகர் தனது இளம் மனைவி நிஹால் என்பவருடன் அனடோலியா நகரில் சிறிய உணவு விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். உடன் அவரது சகோதரி நெக்லா என்பவரும் இருந்து வருகிறார். சகோதரி கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட துயரத்தில் இருப்பவர். ஏற்கெனவே கணவனுக்கும் மனைவி நிஹாலுக்குமான உறவில் ஏகப்பட்ட மோதல்கள்.

இந்நிலையில் விவாகரத்து செய்யப்பட்ட சகோதரி வீட்டுடன் இருக்கத் தொடங்குகிறார். குளிர்காலத்தில்... பனி விழத் தொடங்கிய அந்தப் பருவம் தொடங்கியபோது உணவு விடுதி தங்குவதற்கான பாதுகாப்பிடமாகவும் மாறுகிறது. ஆனால் பாதுகாப்பிடம் அவர்களிடையேயான பகைமைத் தீயை எப்படி மூட்டிவிடுகிறது!

கேன்ஸ் திரைப்பட விழாவில் உயரிய விருதைப் பெற்ற படம் இது. உலக சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த படைப்பு.



மதியம் 3.30 மணி

Moebius/korea/Kim ki Duk/89’/2013

ஒரு கணவன், மனைவி, அவர்களது மகன் ஆகியோரைச் சுற்றி நடக்கும் கதை. பனிக்குளிருக்கு நடுவே அமைந்துள்ள வீடு. கணவனுக்கு வேறொரு இளம் பெண்ணோடு தொடர்பு ஏற்படுகிறது. கணவனின் தவறான நடத்தையினால் மனைவிக்கு உள்ளமும் உடலும் கெடுகிறது. பதின்ம வயது மகனுக்கு இதெல்லாம் தெரியாமல் இல்லை.

கடும் ஆத்திரத்தோடு கணவனின் உறுப்பைத் துடித்துவிடுகிறாள். இதன்மூலம் அவன் திசைமாறிச் செல்லும் ஆசைகளை முறியடித்துவிடுகிறாள். மகனும் வீட்டை வீட்டு வெளியேறிவிடுகிறான். கணவன் மருத்துவமனையில் மிகவும் கலக்கத்துடன் குற்ற உணர்ச்சியோடும் இருக்கிறான். குடும்ப ஒற்றுமையையும், மகனின் சந்தோஷத்தையும் மீட்டெடுக்க முடியுமா எனவும் யோசிக்கிறான்.

2014 அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில், ஸ்டான்லி திரைப்படவிழாவில் திரையிடப்பட்டது. 2014 லண்டனில் நடைபெற்ற கொரியன் திரைப்படவிழாவில் திரையிடப்பட்டது.



மாலை 4.30 மணி

The Lesson /Bulgaria/Kristina Grozeva, Petar Valchanov/105’/2014

பல்கேரிய சிறு நகரமொன்றில் பணியாற்றும் இளம் பள்ளி ஆசிரியை நாடெஷ்டா குழந்தைகளுக்கு நல்லது கெட்டதுகளை பகுத்தறியும் ஆற்றலைப் பற்றி அடிக்கடி போதிப்பாள். குறிப்பாக சிறுதுன்பத்திற்கும் கூட மனிதன் பைத்தியநிலைக்கு போய்விடுகிறான் என்றுகூறும் சார்லஸ் புகோவ்ஸ்கியின் கவிதையை விளக்கி பாடம் நடத்துகிறாள். அப்போது நல்ல ஆரோக்கியமான மனநிலையில் உள்ளவர்கள் சிறுதுன்பத்தைப் பொருட்படுத்தவே கூடாது என வலியுறுத்துகிறாள்.

ஆனால் வகுப்பறையில் அவளது பணம் திருடுபோகிறது. அதைக் கண்டுபிடிக்க முடியாமலும் திணறுகிறாள். வீட்டில் குடிகாரக் கணவன். திறனற்றவன். காரை அடமானம் வைத்து குடும்பப் பிரச்சினைகளைத் தீர்க்க முயல்கிறாள். பொருளாதாரப் பிரச்சினைகள் அவளை அழுத்த விரக்தியின் உச்சத்திற்குச் சென்ற நாடெஷ்டா எப்படி மீள்கிறாள் என்பது இறுதிகட்ட சுவாரஸ்யம். டொராண்டோ உலகப் படவிழாவில் திரையிடப்பட்டது.



மாலை 7.15 மணி

Oblivion/Ethiopia/Zeresenay Mehari/99’/2014

அபேரேஷ் பெகெலே எனும் 14 வயதுப் பெண்ணை பற்றிய கதை. அவள் மீது ஒரு கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு குற்றவாளியாக சிறையில் இருக்கிறாள். பள்ளியிலிருந்து திரும்பிய தன்னை கடத்திச்சென்று, அடித்து, பாலியல் வன்புணர்ச்சி செய்த 29 வயது மனிதனை அவள் கொன்றுவிட்டதாகத்தான் அந்தக் குற்றச்சாட்டு.

உண்மையில் அந்தக்குற்றச்சாட்டு உண்மைதான். ஆனால் தன்னைக் காத்துக்கொள்ளவே அவள் அவ்வாறு செய்ய நேர்ந்தது. ஆனால் எத்தியோப்பாவில் வழக்கத்தில் உள்ள டெலஃபா எனப்படும் திருமணத்திற்கு பெண்ணைத் தூக்கிச்சென்று பாலியல் வன்முறை செய்வது அவர்கள் குல வழக்கமாம். ஆனால் அது சட்டவிரோதமானது என்பது மட்டுமல்லாமல், பள்ளிக்கூட பெண்ணை துன்புறுத்திய கொடுமைக்காகவும் அதை எதிர்த்து பெண் வழக்குரைஞர் மீஸா அஷனெஃபி நீதிமன்றத்தில் வழக்காடுகிறார்.

இந்த வழக்கு சமூக விரோதிகளை எதிர்த்து 2 வருடங்களுக்கு மேலாக நடந்துவருகிறது. ஆனால் பெண் வழக்குரைஞர் தொடர்ந்து சலிக்காமல் போராடுகிறார். அங்கு நடைபெற்றுவரும் உண்மை வழக்கு ஒன்றின் அடிப்படையிலே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

41 mins ago

விளையாட்டு

32 mins ago

தமிழகம்

56 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்