’Blossoming Into a Family’: ஜப்பானிய கலை பண்பாட்டுத் திறவுகோல்

By ஆதி வள்ளியப்பன்

|15-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் டிசம்பர் 18-ம் தேதி, அண்ணா திரையரங்கில் பிற்பகல் 2:30 மணிக்கு திரையிடப்படவுள்ள ’Blossoming Into a Family’ படத்தின் விமர்சனம்|

ஜப்பானின் முக்கிய சிகரங்களுள் ஒன்றான ஃபியூஜிக்குப் பக்கத்தில் இருக்கும் ஊரைச் சேர்ந்த வசதிமிக்க இஷிகாவா குடும்பத்தைச் சேர்ந்தவர் எய்சிரோ. முதல் தலைமுறை மாணவர்களுக்கு தனிப்பயிற்சி மையம் ஒன்றை அவர் நடத்துகிறார். திருமணம் செய்துகொள்ளாத அவர், அங்கு படிக்கும் கிராமத்து மாணவன் ஷிஷெரோவால் கவரப்பட்டு, அவனை மகனாகத் தத்தெடுத்துக்கொள்கிறார். வெளிநாட்டில் வேலை பார்க்கும்போது வளர்ப்புத் தந்தை இறந்துவிட, ஊர் திரும்பி அவர் நடத்திய தனிப்பயிற்சி மையத்தை தந்தையைப் போலவே கருத்தாக நடத்த ஆரம்பிக்கிறான் ஷிஷெரோ.

இடையில் ஷிஷெரோவுடன் வந்து சேர்கிறார் வீட்டு வேலை செய்யும் பணிப்பெண் இதோ (Ito). தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும்போது "என் வாழ்வில் வசதி வாய்ப்புகளை அனுபவித்ததில்லை. அதேநேரம், வாழ்க்கையில் இனிமையான நினைவுகளை சொத்தாக எனது குடும்பம் தந்திருக்கிறது" என்கிறார் இதோ. ஒரு எளிய, கல்வியற்ற பணிப்பெண்ணின் பார்வையில் வாழ்க்கையின் அர்த்தம் குறித்த அணுகுமுறை இது. அதுவே படத்தின் ஆதாரமாக மாறுகிறது. வாழ்க்கை தரும் இனிய நினைவுகள் எவை, அவற்றை ஷிஷெரோ எப்படிக் கண்டடைகிறார் என்பதாகப் படம் விரிகிறது.

இக்கட்டான ஒரு தருணத்தில் இதோவை ஷிஷெரோ மணந்துகொள்கிறார். இரண்டு பெண் குழந்தைகள். திடீரென ஒரு நாள் ஷிஷெரோவும் இறந்துவிட கதையின் முடிச்சு இன்னும் சிக்கலாகிறது. ஷிஷெரோ தத்தெடுக்கப்பட்டவர். அவர் மணந்துகொண்டதோ ஒரு பணிப்பெண். இதனால் தாயையும் மகள்களையும் பாரம்பரியமிக்க வீட்டிலிருந்து வெளியேற்றிவிட இஷிகாவா குடும்பம் முடிவு செய்கிறது. ஊரில் வழங்கப்படும் மதிப்பு, அந்தஸ்து போன்றவையே அந்தக் குடும்பத்துக்கு முக்கியமாக இருக்கின்றன.

அதேநேரம் தன் வீட்டோடு இணைந்த பயிற்சி மையம், தத்துத் தந்தை மீது கொண்ட ஆழமான பிடிப்பால் தனது மகள்களுக்கு அந்த வீட்டில்தான் திருமணம் நடைபெற வேண்டு்ம் என்பது இறந்த ஷிஷெரோவின் விருப்பம். ஜப்பானியர்கள் தங்கள் ஊர், வீடு, அங்கு உலவும் மனிதர்களாலேயே தங்கள் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். பாரம்பரிய வீட்டில்தான் திருமணம் நடைபெற வேண்டும், முதல் வாரிசு அங்கே வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பதெல்லாம் முக்கியமானதாகக் கருதப்பட்டிருக்கிறது.

"பாசம் மிகுந்த குடும்பம் தரும் கதகதப்பை தான் எப்போதும் அனுபவித்ததில்லை" என்கிறார் ஷிஷெரோ. அவருடைய வாரிசுகளுக்கு அதிலிருந்து மாறுபட்ட ஒரு வாழ்க்கை கிடைத்ததா என்று இந்தப் படம் பரிசீலனை செய்கிறது. வாழ்க்கை குறித்த நமது புரிதல் சார்ந்து இந்தப் படம் முக்கியக் கேள்விகளை எழுப்புகிறது.

அதிரடியான படங்களின் படத்தொகுப்பு மட்டுமே 'நான் லீனிய'ராக இருக்கும் என்று நம்பத் தேவையில்லை என்பதை இந்தப் படம் உணர்த்துகிறது. படத்தின் இயக்குநர் ஹிரோகி ஹயாஷி, 'கிகுஜிரோ' புகழ் டகேஷி கிடானோவிடம் உதவியாளராக இருந்தவர். இது ஹிரோகியின் ஏழாவது படம்.

1980-களுக்குப் பிறகு அதிவேகத் தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்தால் ஜப்பானியர்கள் பிடித்தாட்டப்பட்டாலும், மண்ணில் வேர்விட்டிருக்கும் மரபை நோக்கி அவர்கள் திரும்ப வேண்டியதன் அவசியத்தை இதுபோன்ற படங்கள் மீண்டும் நினைவுபடுத்துகின்றன. ஜப்பானின் ஃபியூஜி மலை அடிவாரத்தில் உள்ள ஊர் மக்களின் வாழ்க்கை, உள்ளூர் பண்பாடு, கலை போன்றவற்றை அறிவதற்கு இந்தப் படம் சிறந்த திறவுகோல்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்