120BPM- தன்பாலின உறவாளர்களின் போராட்டம்!

By சா.ஜெ.முகில் தங்கம்

தற்போதைய எலெக்ட்ரானிக் யுகத்தில் கூட எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு பரவலாக இல்லாத நிலையில் 90களின் தொடக்கத்திலேயே எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்தும் எய்ட்ஸ் நோயாளிகளுக்காகவும் போராடிய ஆக்ட் அப் (ACTUP) அமைப்பு பற்றியும் அதில் செயல்படும் நபர்களின் வாழ்க்கையையும் 120 பீட்ஸ் பெர் மினுட் சொல்கிறது.

உலகையே அச்சுறுத்தக்கூடிய நோயாக கருதப்படும் எய்ட்ஸ் குறித்த புரிதலையும் அதன்பின் இருக்கும் மருத்துவச் செய்திகளையும் அதனூடே சமூகத்தில் ஒதுக்கப்பட்டிருக்கும் தன்பாலின உறவாளர்கள், பாலியல் தொழிலாளிகள் இவர்களின் உரிமையையும் நமக்கு அழுத்தமாகச் சொல்கிறது திரைப்படம்.

படத்தின் மையக்கரு ஆக்ட் அப் என்ற அமைப்பும் அதற்குள் செயல்படும் நபர்கள் என்பதால் அந்த அமைப்பின் செயல்பாடுகளினூடே கதையைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ரொபின் கம்பில்லோ. ஆக்ட் அப் அமைப்பு விழிப்புணர்வு முகாம்கள், நோயாளிக்கான போராட்டங்கள், அவர்களுக்கு இடையேயான விவாதங்கள் என கதை நகர்கிறது. திரையில் தன்பாலின உறவாளர்களின் கதையை சொல்வதே அரிது அதிலும் தன்பாலின உறவாளர்களாக இருக்கும் ஆண்களின் கதையைச் சொல்வது இன்னும் அரிது. அப்படி ஒரு கதையைத்தான் 120 பீட்ஸ் பெர் மினுட்டாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ரொபின் கம்பில்லோ.

ஆண்கள் தன்பாலின உறவாளர்கள் என்று தெரியவரும்போது அவனுக்கான கிண்டல்களும், கேலிகளும் பெண்களை விட அதிகம். உடல் குறித்தான புரிதல் இல்லாமையே இவற்றுக்கெல்லாம் அடிப்படை. படம் பார்க்கும்பொழுது நாம் செய்த கிண்டல்களும் கேலிகளும் நமக்கே உறுத்தலாய் இருக்கும்.

ஆக்ட் அப் அமைப்பின் பாரிஸ் கிளையின் செயல்பாடுகள்தான் 120 பீட்ஸ் பெர் மினுட்டாக திரையேறியுள்ளது. ஆக்ட் அப் அமைப்பில் இயங்கும் அனைவருக்கும் முழு நேர வேலை வேறாக இருந்தாலும் அமைப்பில் அதிகமாக இயங்குகிறார்கள். அந்த அமைப்பில் இருக்கும் பெரும்பாலனோர்க்கு HIV பாதிப்பு இருக்கிறது. ஒவ்வொருக்கும் ஒவ்வொரு கதை இருக்கிறது. விழிப்புணர்வு இல்லாமல் தாங்கள் செய்த தவறை அடுத்து வரும் தலைமுறை செய்யக்கூடாது என்று சிலரும் தங்களைப் போல் வலியும் வேதனையும் உலகமெங்கும் இருக்கும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு அதனை கட்டுப்படுத்தவாவது மருந்து கிடைக்க வேண்டும் என்ற உந்துதலும்தான் அந்த அமைப்பில் தொடர்ந்து செயல்படுகின்றனர்.

ஆக்ட் அப் அமைப்பில் இயங்கும் சீன், நாதன் இருவருக்கும் இடையே உருவாகும் அன்பின் உறவுநிலையை இதனூடே சொல்கிறார்கள். இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் தன்பாலின உறவாளர்களின் மனநிலையைப் புரியச் செய்கின்றன. அன்பைத் தவிர அவர்களுக்கு பெரிதாக வேறொன்றும் தேவையாக இருப்பதில்லை. அதற்கு முன் அவர்களுக்கு இருந்த உறவுநிலையையும் அதனால் ஏற்பட்ட நிகழ்வுகளையும் சொல்லும்போதுதான் நமது சமூகம் அவர்களின் உடலையும் உணர்வுகளையும் எவ்வளவு சுரண்டியிருக்கிறது என்பது முகத்தில் அறைகிறது.

ஆக்ட் அப் அமைப்பின் செயல்பாடுகளை காட்சிப்படுத்தியிருப்பதால் பெரும்பாலான காட்சிகள் வசனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. ஆக்ட் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்துரையாடும் காட்சிகளே அதிகம் இருந்தாலும் சீன், நாதன் இருவருக்கும் இடையேயான காட்சிகள் படத்தை வேறு தளத்திற்கு எடுத்துச் செல்கின்றது. அமைப்பின் செயல்பாடுகளினூடே எய்ட்ஸுக்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியை அறிந்துகொள்ள முடிகிறது. ஆக்ட் அப் அமைப்பின் ஒவ்வொரு செயல்பாடுகளும் மிக காட்டமாக அரசையும் மருத்துவச் சந்தையையும் விமர்சிக்கின்றன. பாலியல் கல்வி குறித்தான புரிதலையும் ஏற்படுத்துகின்றன.

பள்ளிக்குச் சென்று காண்டம் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்துவது, அந்தப் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் பேசுவது, சீன் குறித்து நாதன் பேசுவது, முக்கியமாக அமைப்பின் உரையாடல்கள், சீனின் அம்மாவின் வசனங்கள் என படம் முழுக்க நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் இடங்கள் ஏராளம். கொஞ்சம் பிசகினாலும் ஆவணப்படம் தன்மைக்குப் போயிருக்க வேண்டிய படத்தை அழகாக கவனமாக கையாண்டிருக்கிறார்கள்.

நமது வாழ்க்கையிலும் தன்பாலின உறவாளர்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்போம். படம் பார்க்கும்போது பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தெருக்களிலும் கிண்டல்களையும் கேலிகளையும் சுமந்துகொண்டு இருந்த உங்களது நண்பர்கள் நினைவுக்கு வரலாம். அதுமட்டுமில்லாமல் எய்ட்ஸ் நோயாளிகள் குறித்தான கேள்விகளும் எழாமல் இருக்காது. ஆரம்பத்தில் வெறும் 4% இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை 90களின் தொடக்கத்தில் 30% ஆக அதிகரித்துள்ளது என ஒருவர் கத்தும் வசனம் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வையும் நோயாளிக்கான பாதுகாப்பையும் அரசு செய்யத் தவறியுள்ளதோ என எண்ண வைக்கிறது. ஏற்கெனவே நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு வலியைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் கூட உரிய நேரத்தில் கிடைப்பதில்லை என்ற கோர உண்மையைப் படம் பதிவு செய்கிறது.

தன்பாலின உறவாளர்களின் வலி, வேதனை அதனூடே இணைந்து கொல்லும் எய்ட்ஸ் எனும் கொடிய நோய் இதனைத்தாண்டி சமூகத்தை எதிர்கொண்டு நடத்தப்படும் வாழ்க்கையை நாம் புரிந்துகொண்டோம் என்றால் எய்ட்ஸ் குறித்தான விழிப்புணர்வையும் அதில் இருக்கும் கேள்விகளையும் பெற்றுவிடும் என்பதைக் காட்சிகளில் சொல்லியுள்ளார் இயக்குநர்.

பிரெஞ்ச் திரைப்படமான 120பீட்ஸ் பெர் மினுட் 2017-ன் கான்ஸ் திரைப்பட விழாவில் கிராண்ட் ப்ரிக்ஸ் விருதை வென்றுள்ளது. மேலும் தற்போது கோவாவில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தங்க மயில் விருதையும் வென்றுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

22 mins ago

விளையாட்டு

44 mins ago

தமிழகம்

52 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்