தொழில் துறையின் தீர்க்கதரிசி எம்.வி.முருகப்பன் மறைவு

By செய்திப்பிரிவு

தமிழக தொழில்துறையின் தீர்க்கதரிசி என்று போற்றப்படும் எம்.வி முருகப்பன் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் காலமானார். முருகப்பா குடும்பத்தின் மூத்த உறுப்பினரான இவர், தமிழக தொழில்துறையின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளார். கார்போரண்டம் யுனிவர்ஸல் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றவர். முருகப்பா குழுமத்தை நிறுவிய திவான் பகதூர் ஏம்.எம். முருகப்ப செட்டியாரின் வாரிசான ஏ.எம்.எம். வெள்ளையன் செட்டியாரின் மகன் ஆவார். 81 வயதான இவருக்கு இரண்டு மகள்களும், பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

1936-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி பிறந்தவர். அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தின் பள்ளத்தூர் கிராமத்தில் பிறந்தவர். இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பல்கலைக் கழகத்தில் பிஎஸ்இ சிவில் இன்ஜினீயரிங்கில் பட்டம் பெற்றவர். கல்லூரி காலங்களில் விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வார். டென்னில் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். பல்கலைக் கழக அளவில் பல பரிசுகளை பெற்றவர்.

இங்கிலாந்தில் இருந்து திரும்பிய சில ஆண்டுகள் கட்டுமான துறையில் கவனம் செலுத்தினார். பின்னர் கொரமண்டல் இன்ஜினீயரிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பொறுப்பு ஏற்றார். நிறுவனத்தின் பல முக்கிய முடிவுகளை துணிவாக எடுத்தவர். கொரமண்டல் ப்ரோடரி நிறுவனத்தை உருவாக்கியதுடன், அமில தடுப்பு சிமெண்ட், பிளாஸ்டிக் கெமிக்கல் உதிரிபாகங்களை உற்பத்தி செய்வதில் முக்கிய பங்காற்றினார். இந்த துறையில் இந்தியாவின் முக்கியமான நிறுவனமாக இதை உருவாக்கினார்.

1979-ம் ஆண்டில் கார்போரண்டம் யுனிவர்சல் (குமி) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றார். இவரது தலைமையின் கீழ் நிறுவனம் இந்தியாவின் முக முக்கிய பேரிங் நிறுவனமாக உருவெடுத்தது. தொழில்துறைக்குத் தேவையான செராமிக் பொருட்களைத் தயாரிக்க தொடங்கியது. நீர்மின் உற்பத்தி மற்றும் அனல் மின் உற்பத்திக்கான முதலீடுகளையும் மேற்கொண்டவர். 1995-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டுவரை நிறுவனத்தின் தலைவராக இருந்து சிறப்பாக வழி நடத்தினார். சைக்கிள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள டிஐ நிறுவன வளர்ச்சியிலும் இவரது பங்கு அளப்பரியது.

தொழில்துறை சார்ந்து பல்வேறு முக்கிய குழுக்களில் எம்.வி.முருகப்பன் செயல்பட்டவர். இந்திய தொழில் வர்த்தக சபையின் நிர்வாகக் குழுவில் பல ஆண்டுகள் இருந்தவர். 1987-88ம் ஆண்டில் சென்னை தொழில் மற்றும் வர்த்தக சபையின் தலைவராக பொறுப்பு வகித்தார்.

1978-79-ம் ஆண்டில் சென்னை கிரிக்கெட் கிளப்பின் தலைவராக இருந்தவர். 1976-77-ம் ஆண்டில் சென்னை மிட் டவுன் ரோட்டரி கிளப் தலைவர் பொறுப்பை வகித்தவர். 1992-ம் ஆண்டில் இந்தியா -ஆஸ்திரேலியா இணைந்த தொழில் குழுவின் தலைவராக இருந்தார். இவர் தலைமையேற்ற பின்னர் இந்த குழுவின் சார்பாக ஆறு கூட்டங்களை கூட்டியது குறிப்பிடத்தக்க ஒன்று. இரு நாடுகளுக்குமான வர்த்தக உறவில் இது முக்கிய திருப்புமுனையை உருவாக்கிய நிகழ்வு என்றே இதைக் குறிப்பிடுகின்றனர்.

குழுமத்தின் சார்பாக பல்வேறு சமூக நலத் திட்டங்களையும் முன்னின்று செயல்படுத்தியவர். மிகச் சிறந்த கொடையாளி. ஏஎம்எம் பவுண்டேஷன் நிறுவனத்தின் காப்பாளராகவும், முருகப்பா குழும பள்ளிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் நான்கு மருத்துவமனைகளின் நிர்வாக பொறுப்பையும் வகித்தவர்.

கிராமப்புற மற்றும் நகர்புற ஏழை மக்களின் தொழில்நுட்ப மேம்பாட்டினை தனது கனவாக கொண்டிருந்தவர். இதற்காக இயங்கிவரும் லாப நோக்கமற்ற ஆராய்ச்சி நிறுவனமான ஏஎம்எம் முருகப்ப செட்டியார் ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக குழுவின் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்கு தொழில்துறை கூட்டமைப்புகள் மற்றும் முன்னணி தொழிலதிபர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

இந்தியா

31 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்