ரூ.5,000-த்திற்கும் மேலான பழைய நோட்டு டெபாசிட்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

By பிடிஐ

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்காக இனி ரூ.5,000-த்திற்கும் மேலான தொகைக்கான பழைய நோட்டுகள் டெபாசிட்களுக்கு சில புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.

பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு இம்மாதம் 30-ம் தேதி வரையே காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.

நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை பணமதிப்பு நீக்கம் செய்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8-ம் தேதி இரவு அறிவித்தார். பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள், அஞ்சலகங்களில் டிசம்பர் 30-ம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

பழைய ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்படும்போது, ரூ.2.5 லட்சத்துக்கும் அதிகமான தொகையை செலுத்தினால், வரிவிதிப்பு முறை பின்பற்றப்படுவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

ஆனால், கெடு காலம் முடிவடைய 10 நாள்களே உள்ள நிலையில் வங்கிக் கணக்கில் ரூ. 5 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்ய முடியாது என்ற புதிய உத்தரவை ஆர்பிஐ பிறப்பித்துள்ளது.

புதிய அறிவிப்பு சொல்வது என்ன?

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், "பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளில் அதிகபட்சம் ரூ. 5 ஆயிரத்தை மட்டுமே டிசம்பர் 30-ம் தேதிக்குள் வங்கிக் கணக்கில் செலுத்த முடியும்.

வங்கிக் கணக்கில் ரூ.5000 த்திற்கும் மேலாக டெபாசிட் செய்வது ஒருமுறை டெபாசிட்டாக இருப்பது அவசியம். அப்படியிருந்தாலும் இதற்கு முன்னர் ஏன் இந்தத் தொகைக்கான நோட்டுகளை முன்னரே டெபாசிட் செய்யவில்லை என்ற கேள்விக்கு வங்கியின் இரண்டு அதிகாரிகளிடத்தில் திருப்திகரமாக விளக்க வேண்டும்.

நீங்கள் அளிக்கும் விளக்கம் ரகசியமாக வைக்கப்படும். தேவைப்பட்டால் தணிக்கைக்கு உட்படுத்தப்படும். மேலும் இதற்குப் பிறகு நீங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் கூடுதல் தொகையை உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்த முடியாது.

அரசின் வருமானத்தை தாங்களாகவே தெரிவிக்கும் பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனாவின் கீழ் டெபாசிட் செய்யப்படும் தொகைகளுக்கு இந்தக் கட்டுப்பாடு கிடையாது.

ரூ. 5 ஆயிரத்துக்கு மேல் நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்வதாயிருந்தால் அந்த வங்கிக் கணக்கானது வாடிக்கையாளரைப் பற்றிய அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய (கேஒய்சி) வங்கிக் கணக்காக இருக்க வேண்டும். அந்த கணக்கில் அதிகபட்சம் ரூ. 50 ஆயிரத்துக்கும் மேல் டெபாசிட் செய்ய முடியாது. இருப்பினும் இதுபோல போடப்படும் தொகை விசாரணைக்கு உள்ளாகும்.

இவ்விதம் கூடுதலாகப் போடப்படும் தொகை பிஎம்ஜிகேஒய் திட்டத்தின் கீழ் வரி விதிப்புக்கு உள்ளாகும். வங்கிகளில் செலுத்தப்படும் தொகை, உரிய அடையாள அட்டை நகல் தாக்கல் செய்ய பிறகே பெறப்படும்.

இதேபோல மற்றவர் வங்கிக் கணக்கில் பணம் போடப்பட்டாலும் அது குறித்த விவரம் அளிக்க வேண்டும். அவ்விதம் டெபாசிட் செய்யும் மூன்றாம் நபர் அதற்குரிய வங்கி நடைமுறைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி கணக்குகளில் கறுப்பு பணம் டெபாசிட் ஆகாமல் தடுப்பதற்காக இந்தப் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா (பிஎம்ஜிகேஒய்) திட்டத்தை முறையாக செயல்படுத்துவதற்கு ஏதுவாகவும் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிஎம்ஜிகேஒய் திட்டம் என்ன?

கணக்கில் காட்டப்படாத பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு மத்திய அரசு மேலும் ஒரு வாய்ப்புதான் பிஎம்ஜிகேஒய் திட்டம். அதன்படி, கணக்கில் வராத தொகையை ஏப்ரல் 1-ம் தேதிக்கு முன்பாக வங்கியில் டெபாசிட் செய்து 50 சதவீதம் வரி மற்றும் அபராதம் செலுத்தி அந்த தொகையை வெள்ளையாக்கிக்கொள்ளலாம்.

மொத்த தொகையில் 25 சதவீத தொகையை நான்கு ஆண்டுகளுக்கு வட்டி இல்லாத டெபாசிட்டாக வைத்திருக்க வேண்டும். இந்த தொகை பாசனம், வீடு, கட்டுமானம், ஆரம்பகல்வி மற்றும் ஆரம்ப சுகாதாரத்துக்கு பயன்படுத்தப்படும்.

வரி ஏய்ப்பு செய்து பதுக்கிய கறுப்புப் பணத்துக்கு மட்டுமே இந்த விதிமுறை பொருந்தும். அந்நிய செலாவணி மோசடி வழக்கு, போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டத்துக்கு புறம்பான வழிகளில் கிடைத்த பணத்துக்கு இந்த சட்டத்தின் மூலம் நிவாரணம் பெற முடியாது.

இந்த திட்டத்தின் கீழ் இன்று முதல் வரும் மார்ச் 31 வரை தங்கள் வசம் உள்ள கறுப்புப் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து வரி செலுத்தி வெள்ளையாக்கிக் கொள்ளலாம் என்பது கவனிக்கத்தக்கது.

மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் உத்தரவால் பணப்புழக்கத்தில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வாரத்துக்கு ரூ. 24 ஆயிரம் வரை வங்கிக் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என அரசு அறிவித்தாலும், பெரும்பாலான வங்கிகளால் இந்தத் தொகையை கொடுக்கமுடியாத சூழல் நிலவுகிறது. திருப்பப் பெறப்பட்ட உயர் மதிப்பு கரன்சிகளுக்கு இணையாக 86 சதவீத புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு விடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிஎம்ஜிகேஒய் 2016 திட்டத்தில் வங்கிக் கணக்கில் பழைய நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கு எவ்வித கட்டுப்பாடும் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

45 mins ago

கல்வி

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

தமிழகம்

9 hours ago

சுற்றுலா

10 hours ago

வாழ்வியல்

10 hours ago

வாழ்வியல்

10 hours ago

மேலும்