வணிக நூலகம்: வெறும் கை மட்டும் போதுமே, முழம் போட...

By பி.கிருஷ்ணகுமார்

பையில் காசு இல்லை, பட்ஜெட் ரொம்பவுமே டைட், இடையில் பசிவேறு அவ்வப்போது வாட்டுகின்றது. இந்த மூன்றும் சேர்ந்தால் உங்களால் வெற்றி பெற முடியுமா? நிச்சயமாய் முடியும் என்கின்றார் “டேமண்ட் ஜான்” எனும் “தி பவர் ஆப் ப்ரோக்” புத்தகத்தை எழுதிய ஆசிரியர். கையில் நாற்பதே டாலர்களுடன் (இன்றைய மதிப்பில் கிட்டத்தட்ட ரூபாய் இரண்டாயிரத்து எழுநூறு) வீட்டில் பின்னிய தொப்பி களை விற்க ஆரம்பித்த இவர் தன்னுடைய நூதனமான விற்பனை உத்திகளால் வியாபாரத்தை பெரிய அளவில் உருவாக்கியவராவார். எல் லாவற்றையும் இழந்து நிற்பதும் ஒரு சக்தியே என்கின்றார் இவர்.

இழப்பு என்பது ஒரு மனநிலை. பண மானாலும் சரி, வாய்ப்புகள் ஆனாலும் சரி, நாம் விரும்புகின்ற ஒரு செயலைச் செய்வதற்கான அனுகூலங்களானாலும் சரி இந்த வித இழப்பு மனநிலை என்பது நம் அனைவரிடமும் நிறையவே இருக்கின்றது. நாம் புரிந்துகொள்ளத் தவறுவது என்னவென்றால், இந்த மன நிலையிலும் கூட நமக்கு கிடைக்கும் ஒரு வித சக்தியைத்தான். அதிலும் இந்த இழப்பு மனநிலை நம்மை பல விஷயங்களிலும் உறுதிப்பாடுடை யவர்களாக இல்லாமல் மாற்றுகின்ற போதிலும் நம்முடைய படைப்பாற் றலைப் பொறுத்தவரை அது தேவை யான பங்களிப்பை தரவே செய்கின்றது என்கின்றார் ஆசிரியர்.

புதுமைகளை தோற்றுவிக்கும் பண நெருக்கடி!

என்னதான் பணம் இருந்தாலும் தொடர்ந்து நஷ்டம் என்று வந்தால் அது கையை விட்டு ஒட்டுமொத்தமாக வெளியேறிவிடும் வாய்ப்பு இருக்கவே செய்கின்றது. பணத்தை தொலைக்கும் காலம் என்று ஒன்று அனைவரின் வாழ்க்கையிலும் வரத்தான் செய் கின்றது. மலை அளவு பணம் இருந்தாலும் அது தொடர்ந்து உங்கள் தொழில் ரீதியான தவறான செயல் களுக்கெல்லாம் கைகொடுக்கும் என்பதற்கு உத்தரவாதம் எதுவும் இல்லை எனும் பட்சத்தில் நம் கண் முன்னே இருக்கும் பணத்தை நாம் எண்ணிப்பார்த்துக் கொள்ள மட்டுமே முடியுமே தவிர வேறெந்த ஒரு ஆறு தலையும் அது நமக்கு தராது.

நம்முடைய தொழில் ரீதியான செயல்பாட்டுக்கும், தேவைக்கும் ஏற்ற பணம் எவ்வளவு என்பதுதான் கேள்வியே தவிர நம்மிடம் எவ்வளவு பணம் இருக்கின்றது என்பது ஒரு பொருட்டே இல்லை என்கின்றார் ஆசிரியர். நீங்கள் இழக்க ஒன்றும் இல்லை என்ற சூழலில் இருக்கும் போது நீங்கள் சேர்க்க மட்டுமே நிறைய வாய்ப்புகள் இருக்கின்றது. கடுமை யான கஷ்டமான சூழ்நிலையில் எப்படி யாவது பிழைத்துக் கிடக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் அநேக மனிதர்கள் சாதனைகளை செய்து விடுவார்கள். அதிக அளவில் புதுமைகள் தோன்றுவது கஷ்டத்தின் எல்லையிலேயே அன்றி வளமையின் உச்சியில் இல்லை என்பதை புரிந்து கொண்டு செயல்படுங்கள் என்கின்றார் ஆசிரியர்.

உண்மையாக இருக்கவேண்டும்!

ஒரு உதாரணத்தை பார்ப்போம். நீங்கள் ஒரு சோடா பிசினஸில் இருக்கின்றீர்கள். உலகத்தின் நம்பர் ஒன் சோடா உங்கள் சோடா பிராண்டுதான் என்று வைத்துக்கொள்வோம். அடுத்த ஐந்து வருடத்திற்கான விற்பனை திட்டங்கள் எல்லாம் கனஜோராக இருக்கின்றது. திடீரென உங்களுக்கு உங்கள் சோடாவில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் மண்டைக்குள் ஏறிவிடுகின்றது. மாத் துங்கப்பா டேஸ்ட்டை என்று உலகின் சிறந்த கெமிஸ்ட்களை வைத்து டேஸ்ட்டை மாற்ற முயற்சிகளை எடுக்கின்றீர்கள். புதிய சுவையில் தயாரித்த சோடாவிற்கு மார்க்கெட்டிங், பிராண்டிங், விளம்பரங்கள் மற்றும் லோகோ என பல கோடிகள் செலவழிக் கின்றீர்கள். பணம் படுத்தும் பாடு. எல்லாவற்றிலும் சிறந்தவற்றை உங்கள் பணத்தை கொண்டு பெற முடியும். உங்கள் தயாரிப்பும் சிறப் பாகவே இருந் தாலும் அந்த புதிய சுவை வாடிக்கை யாளர்களைக் கவர வேண்டுமே? அப்படி கவராவிட்டால் என்ன செய்வது. இங்கேதான் உண்மைத் தன்மையின் தேவை வருகின்றது.

வியாபாரம் என்பது நான் இதைத் தருகின்றேன். நீங்கள் அதைத்தாருங் கள் என பண்டமாற்று அல்ல. நாங்கள் (பிசினஸ்) உங்களுக்காக இருக்கின் றோம். நீங்கள் (வாடிக்கையாளர்கள்) எங்களுக்காக இருக்கின்றீர்கள் என்ற எண்ணத்துடனேயே செயல்பட வேண் டும். அப்படி செயல்பட்டிருந்தால் சோடா வியாபாரத்தில் சுவையை மாற்ற நினைக் கும்போது முதலில் வாடிக்கையாளரின் எண்ணத்தையல்லவா கேட்டிருக்க வேண்டும். எதை விற்றாலும் வாடிக்கை யாளார் அதை வாங்கும் வண்ணம் இருக்கவேண்டும். ஒரு உண்மைத்தன் மையுடன் செயல்படுத்தப்படும் ஒரு ஐடியா எவ்வளவு பணத்துடன் அது களமி றக்கப்படுகின்றது என்பதைப் பொறுத்து வெற்றி கொள்வதில்லை. சிறிய பணமோ, பெரும் பணமோ ஐடியா சிறந்ததாகவும் உண்மைத் தன்மையுடனும் இருக்கும் போது வெற்றிமீது வெற்றி வந்து அங்கே சேர்கின்றது என்கின்றார் ஆசிரியர்.

இங்கேதான் இழப்பின் தாக்கம் அதிகம் இருக்கின்றது. இழப்பில் இருக்கும் நீங்கள் செய்யும் எந்தக்காரிய மும் உங்களுக்கும் உங்களை நம்பி இருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் உண்மையாய் பயன்படுவதாய் இருக் கும். உண்மைத்தன்மை இந்த இழப்புச் சூழலிலேயே அதிகமாக இருக்கும் என்பது எதனால் என்கின்றீர்களா? இழப்பின் எல்லையில் இருக்கும் நீங்கள் வாழ்வா? சாவா? என்ற கேள்வியுடன் செயல்படுவீர்கள். வாழவே நீங்கள் பிரியப்படுவீர்கள். அதனால் உங்க ளுக்கு நீங்கள் மிகமிக உண்மை யாக இருப்பீர்கள். அதனாலேயே வாடிக் கையாளர்களுக்கும் நீங்கள் மிகமிக உண்மையாக இருந்துவிடும் வாய்ப் புகள் அதிகம் என்கின்றார் ஆசிரியர்.

பணம் எல்லாவற்றையும் அழிக்க வல்லது!

ஏன் பல தொழில்கள் நொடித்துப் போகின்றது என்று தெரியுமா? பணமின்மை என்று நினைக்கின்றீர்களா? அதுதான் இல்லை. தொழிலில் இருக்கும் அல்லது தொழிலுக்கு கிடைக்கும் அதிக அளவிலான பணமே பல தொழில்கள் நொடித்துப்போவதற்கான வாய்ப்பை வாரி வழங்குகின்றது. அதிகப்பணம் என்பது அதிக அளவி லான பிரச்சினையையே தொழிலுக்கு தரவல்லது என்கின்றார் ஆசிரியர். தனி மனிதனானாலும் சரி, தொழிலானாலும் சரி தேவைக்கு மீறிய அதிகப்பணம் என்பது அழிவிற்கே வழிவகுக்கும் என்கின்றார் ஆசிரியர். அமெரிக்காவில் கடந்த காலத்தில் லாட்டரியில் பணம் விழுந்தவர்களில் எழுபது சதவிகிதம் பேர் அந்தப் பணத்தை ஒரேயடி யாக தொலைத்து மஞ்சள் கடுதாசி கொடுத்துள்ளனர் என்ற உதாரணத்தை யும் ஆசிரியர் கூறியுள்ளர்.

துணைக்கு சரியான ஆளை வைத்துக்கொள்ளுங்கள்!

ஸ்டீபன் கிங் எனும் வெற்றிகரமான அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் அவரு டைய முதல் புத்தகம் வெளிவரு வதற்கு முன்னால் எழுத்துத்தொழி லையே விட்டுவிடலாம் என்று நினைக்கு மளவிற்கு நொந்துபோயிருந்தாராம். முப்பது தடவை அவருடைய கதைகள் திரும்பிவந்தபின்னர் அவர் அவருடைய கதை ஒன்றை (பின்னர் முதலாவதாக வெளிவந்த நாவலை) குப்பையில் தூக்கிப் போட்டுவிட்டாராம். அவரு டைய மனைவி மிகுந்த சிரத்தையுடன் அந்தப் புத்தகத்தினை குப்பையில் இருந்து மீட்டெடுத்து தொடர்ந்து மனந்தளராமல் முயலுங்கள் என ஊக்குவித்தாராம். பின்னர் அவருடைய புத்தகங்கள் 35 கோடி பிரதிகள் விற்றது என்பது வேறு கதை என்று சொல்லும் ஆசிரியர் அதனால் கூடவே ஒரு தளராது நம்பிக்கையூட்டும் நபரை வைத்துக்கொண்டு செயல்பட வேண்டியதன் அவசியத்தை நமக்கு உணர்த்துகின்றார்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வுப்படி நூற்றில் எண்பத்து மூன்று சதவிகித நபர்கள் குறிக்கோள்கள் எதுவும் வைத்துக்கொள்வதில்லை. பதினான்கு சதவிகித நபர்கள் மனதில் மட்டுமே குறிக்கோள்களை வைத்துக் கொண்டுள்ளார்கள். அதனை எழுதிக் கூட வைப்பதில்லை. மீதமிருக்கும் மூன்று சதவிகித நபர்களே தங்களுடைய குறிக்கோள் மற்றும் இலக்குதனை காகிதத்தில் எழுதிவைத்துக்கொண்டு அதற்காக பாடுபடவும் செய்கின்றார்கள் என்பது ஒரு புள்ளிவிவரம். சரி. அதனால் என்ன என்கின்றீர்களா? குறிக்கோள் இல்லாமல் இருப்பவர்களை விட குறிக் கோளை மனதில் வைத்திருப்பவர்கள் பத்து மடங்கு அதிக அளவில் வெற்றிகளை குவிக்கின்றனராம். இல்லாமை என்ற நிலைவரும் போது கூட குறிக்கோள்தனை எழுதிவைத்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம் வீடுதேடி வரும் என்கின்றார் ஆசிரியர்.

p.krishnakumar@jsb.ac.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்