15 துறைகளில் அந்நிய நேரடி முதலீடு: விதிமுறைகளை தளர்த்தியது மத்திய அரசு

By செய்திப்பிரிவு

பிஹார் தேர்தல் முடித்தவுடனே 15 முக்கியமான துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. தற்போது 3,000 கோடி ரூபாய்க்கு மேல் அந்நிய நேரடி முதலீடு வரும் பட்சத்தில் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திடம் (எப்.ஐ.பி.பி) அனுமதி வாங்க வேண்டும் இந்த வரம்பு தற்போது 5,000 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு, கட்டுமான மேம்பாடு, ஒளிபரப்பு, விமான போக்குவரத்து, விவசாயம், மலையக பயிர்கள், உற்பத்தித் துறை, ஒரு பிராண்ட் ரீடெய்ல், தனியார் வங்கிகள் உள்ளிட்ட துறைகளுக்கு அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். அவருக்கு இருக்கும் சிறப்பு அதிகாரத்தின்படி இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இனி, இந்த மாற்றங்கள் அமைச்சரவை குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அமைச்சரவை குழுவில் பிரச்சினை ஏதும் வராது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்,

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய ஏதுவான நாட்டினை தேடி வருகிறார்கள். இதன் மூலம் அந்நிய நேரடி முதலீடு உயரும் என்றார்.

உற்பத்தித் துறை

அந்நிய முதலீடு பெற்று நடத்தப்படும் அனைத்து உற்பத்தி துறை நிறுவனங்களும் இனி நேரடியாக ஆன்லைன் மூலம் தங்களது பொருட்களை மொத்தமாகவோ சில்லரையாகவோ விற்கலாம். இதற்கு மத்திய அரசின் அனுமதி தேவை இல்லை.

செய்தி ஒளிபரப்புத் துறை

ஒளிபரப்புத் துறையில் தற்போதைய நிலையில் இருக்கும் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு 74 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. டிடீஹெச், கேபிள் நெட்வொர்க் மற்றும் மொபைல் டிவி துறைகள் இதனை பயன்படுத்திக் கொள்ளும். இதில் 49 சதவீத முதலீட்டை நேரடி யாக கொண்டு வரலாம். அதற்கு மேலான முதலீட்டை அரசு ஒப்புதலுடன் கொண்டுவர வேண்டும்.

அதேபோல செய்தி சானல்களுக்கு அந்நிய முதலீட்டு வரம்பு 49 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் பத்திரிகை துறையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை.

விமான போக்குவரத்துத் துறை

தற்போது இந்திய விமான போக்குவரத்து நிறுவனங்களில் 49 சதவீத அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுகிறது. ஆனால் மத்திய அரசின் அனுமதியோடு இந்த முதலீடு வரவேண்டும். இப்போது அரசின் அனுமதி இல்லாமல் உள்நாட்டு விமான நிறுவனங்களில் 49 சதவீத பங்கினை வெளிநாட்டு நிறுவனங்கள் வாங்கலாம்.

பாதுகாப்புத் துறை

பாதுகாப்புத் துறை நிறுவனங்களில் தற்போது 49 சதவீத அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுகிறது. ஆனால் முதலீட்டினை கொண்டு வரும் போது அரசாங்கத்தின் அனுமதி தேவை. ஆனால் இப்போது நேரடியாக கொண்டுவரமுடியும்.

மலையக பயிர்கள்

ஐந்து மலையக பயிர்களுக்கு 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது தேயிலைக்கு மட்டும் 100 சதவீத அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுவும் அரசாங்கத்தின் முன் அனுமதியோடு. இப்போது காபி, ரப்பர், ஏலக்காய், பாம் ஆயில் மற்றும் ஆலிவ் எண்ணெய்களுக்கு 100 சதவீத அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அரசாங்கத்தின் முன் அனுமதி தேவை இல்லை.

தனியார் வங்கிகள்

இந்திய தனியார் வங்கிகளில் அந்நிய நேரடி முதலீட்டை 74 சதவீதம் அளவுக்கு உயர்த்த மத்திய அரசு அனுமதித்திருக் கிறது. அந்நிய நேரடி முதலீடு மற்றும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் இருவரும் சேர்ந்து 74 சதவீதம் வரை தனியார் வங்கி பங்குகளை வைத்திருக்கலாம். இது சாதகமான அம்சம் என்று தனியார் வங்கித் தலைவர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார் கள்.

கட்டுமானம்

கடந்த சில வருடங்களாக சிக்கலில் இருந்த கட்டுமானத் துறையை முடுக்கி விடும் நடவடிக்கையாக இந்த துறையில் சில மாறுதல்கள் செய்யப்பட்டிருக் கிறது. இந்த துறையில் இருந்த பெரும்பாலான தடைகள் நீக்கப் பட்டுவிட்டன. டவுன்ஷிப், வீடுகள், கட்டுமானம் ஆகியபிரிவுகளில் 100 சதவீத அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோல குறைந்தபட்ச கட்டுமான பரப்பளவு 50,000 சதுர அடியில் இருந்து 20,000 சதுர அடியாகவும், குறைந்த பட்ச முதலீடு 1 கோடி டாலரில் இருந்து 50 லட்சம் டாலராகவும் குறைக்கப்பட்டிருக்கிறது.

இது தவிர மேலும் சில துறைகளில் முதலீடுகள் வருவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

58 mins ago

விளையாட்டு

49 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

மேலும்