வணிக நூலகம்: மனமிருந்தால் மகிழ்ச்சியுண்டு!

By பி.கிருஷ்ணகுமார்

மகிழ்ச்சி நமக்கு எப்படி கிடைக் கின்றது? நாம் செய்யும் செயல் பாடுகளில் இருந்தா அல்லது நமக்கு ஏற்படும் விளைவுகளினாலா? நம்முடைய வெளிப்புற சூழ்நிலைகளைச் சார்ந்தே நமது மகிழ்ச்சி அமைகின்றது என்பதே நம்மில் பெரும்பாலானோர் நம்பும் விஷயமாக இருக்கின்றது. நமது பிரச்சினைகள் தீரும்போதோ அல்லது உறவுகள் மேம்படும்போதோ அல்லது நமது செயல்களில் வெற்றி பெறும்போதோ நமக்கான மகிழ்ச்சி கிடைப்பதாக நம்புகின்றோம் அல்லவா!. ஆனால், நமது கட்டுப்பாட்டில் இல்லாத வெளிப்புற காரணிகளைப் பொருத்து நமக்கான மகிழ்ச்சி அமையாது என்கிறார் “யு கேன் பி ஹேப்பி நோ மேட்டர் வாட்” என்ற இந்த புத்தகத்தின் ஆசிரியர் “ரிச்சர்ட் கார்ல்சன்”. உண்மை யில், மகிழ்ச்சியானது நம்முடைய இயற்கையான நிலைப்பாடு என்பதே ஆசிரியரின் வாதம்.

சிந்தனைத் திறன்!

சிந்தனை என்பது நமக்கான ஒரு தனிப்பட்ட திறன். மனிதர்கள் சிந்தனை களை உருவாக்கும் படைப்பாளிகள் என்கிறார் ஆசிரியர். சிந்தனை எங்கிருந்து வருகின்றது என்பது பெரும்பாலும் அறிய முடியாத ஒன்றாகவே உள்ளது. ஆனால், நம்முடைய அனைத்து செயல்பாடுகளும் நமது சிந்தனையின் வாயிலாகவே செயல் வடிவம் பெறுகின்றன. செயல்களுக்கு மட்டுமல்ல நமது அனைத்து வகை யான உணர்வுகளுக்கும் அடிப்படை சிந்தனையே. நமக்கு தோன்றும் ஒவ் வொரு நேர்மறை அல்லது எதிர்மறை எண்ணங்களானது நம்முடைய சிந்தனையின் நேரடி விளைவே.

உதாரணமாக, மற்றொருவரின் மீது நமக்கு ஏற்படும் பொறாமையின் அடிப்படையானது நமது சிந்தனையில் தோன்றும் பொறாமையின் வெளிப் பாடே. வருத்தமான சிந்தனை நமக்கு ஏற்படாமல், வருத்தமான உணர்வு ஏற்படுவதற்கு எவ்வித சாத்தியக்கூறும் இல்லை. கோபமான எண்ணங்கள் ஏற்படாதவரை கோபமான உணர்வுகள் நமக்கு தோன்ற வாய்பில்லை. மன அழுத்தம் குறித்த சிந்தனையின் அடுத்த கட்டமே நமக்கு ஏற்படும் மன அழுத் தம். நமக்கு ஏற்படப்போகும் விளைவு களை நமது சிந்தனையின் வாயிலாக மாற்றியமைக்கும் ஆற்றல் சிந்தனைக்கு உண்டு என்கிறார் ரிச்சர்ட் கார்ல்சன். இதனை சரியாக புரிந்து செயல்படும் போது நாமும் மகிழ்ச்சியான வாழ்வினை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

சிந்தனையின் அம்சங்கள்!

பொதுவாக சிந்தனையானது இரண்டு வகையான அம்சங்களைக் கொண்டுள்ளது என்றும் இதனைப் பற்றிய தெளிவான புரிதல் நமக்கு மிகவும் முக்கியம் என்றும் சொல்கிறார் ஆசிரியர். முதலாவது அம்சம், தானாக நமக்கு ஏற்படும் சிந்தனை. அதாவது, இந்த சிந்தனையானது எதைப்பற்றி என்றில்லாமல் அதன் போக்கில் நமக்கு ஏற்படும் பல சிந்தனைகளைக் குறிக்கின்றது. இது முழுக்கமுழுக்க நமது கட்டுப்பாட்டில் வராத ஒன்று. இரண்டாவது, நமது மனம் எதைப்பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறதோ அதைப்பற்றி தோன்றும் சிந்தனை. இது நமது கட்டுப்பாட்டில் வரக்கூடிய அம்சமாக பார்க்கப்படுகின்றது. இந்த வகை சிந்தனைகளை நேர்மறை எண்ணங்களாக நமக்குள் தொடர்ந்து ஏற்படுத்திக்கொள்ளும்போது, தானாக தோன்றும் சிந்தனைகளையோ அல்லது எதிர்மறை சிந்தனைகளையோ தவிர்க்கலாம்.

மாறும் மனநிலை!

நமது மனநிலையானது நமக்குள் ஏற்படும் சிந்தனையின் அடுத்தகட்ட நிகழ்வே. எப்படி நமது சிந்தனை அடிக்கடி மாறிக்கொண்டே இருக் கின்றதோ அதுபோலவே நமது மனநிலையும் ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நாளும் மேலும் கீழுமாக பயணித்துக்கொண்டே இருக்கின்றது. சிலர் லேசான மனநிலையுடனும், மற்ற சிலரோ தீவிரமான மனநிலையுடனும் இருப்பதை காண்கிறோம் அல்லவா!

உயர்ந்த மனநிலையுடன் இருக்கும் ஒருவருக்கு வாழ்க்கை நல்லவிதமாக இருப்பதாகவே தோன்றும். மேலும், வாழ்க்கை முன்னேற்றபாதையில் செல்வதாகவும் அறிவார். உயர்ந்த மன நிலையானது நமக்கான விஷயங்களை எளிதாக காட்டும். அதுபோல, பிரச்சினைகள் குறைந்த வல்லமை உடையதாகவும், எளிதில் அவை தீர்க்கக் கூடியதாகவும் இருக்கும். மேலும், நமக்கான உறவுமுறை மற்றும் அடுத்தவர் களுடனான தொடர்பு ஆகியவை வசீகரமாகும் என்கிறார் ஆசிரியர்.

அதுவே தாழ்வான மனநிலையானது, வாழ்வை சகித்துக்கொள்ள முடியாத தாகவும், கடினமானதாகவும் காட்டும். மேலும், வாழ்க்கையின் முன்னேற்றத் தில் தடங்கல்களையும், பிரச்சனை களை பெரிதாக எண்ணி பயப்படும் உணர்வையும், அவற்றை தீர்க்க முடியாத நிலையையும் கொண்டிருக்கும். நமக்கான மனநிலையை தவிர்க்கவோ அல்லது நம்முடைய மனநிலையிலிருந்து நம்மால் தப்பித்துக்கொள்ள ஒரு போதும் முடியாது. மாறுபட்ட மன நிலையிலிருந்தே, நம்மால் வாழ்க்கை யின் பல்வேறு பரிணாமங்களை அறிந்துக்கொள்ள முடிகின்றது.

உறவுமுறைகள்!

மற்றவர்களுடனான நமது உறவு முறையானது பெரும்பாலானோருக்கு சிறிது கடினமான விஷயமாக இருப்பதாகவே உள்ளது. நம்முடைய மனதை வெளிப்படையாகவும், பரஸ்பர நம்பிக்கையினை ஏற்றுக்கொள்ளும் விதமாகவும் மற்றும் உண்மையான அன்புடனும் இருக்கும்போது, எளிதில் உறவுகள் நம்மிடம் வந்து சேருவதாக சொல்கிறார் ஆசிரியர். இதற்கு நமது தனிப்பட்ட வாழ்க்கை முறையினை சிறிது மாற்றியமைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

நம் ஒவ்வொருவருக்கும் என தனிப்பட்ட மனநிலையும், உணர்வுகளும் உண்டு. நமது சக பணியாளர், நண்பர்கள், குழந்தைகள் மற்றும் உறவினர்கள் என அனைவருக்கும் இது பொருந்தும் அல்லவா!. ஒருவரின் கருத்தோ அல்லது அவரின் செயல்பாடோ நமக்கு உடன்படாததாக இருந்தாலும், அதனை தவறு என புறந்தள்ளாமல், அது ஒரு மாறுபட்ட பார்வை என ஏற்றுக்கொள்ளவேண்டியது அவசியம். அடுத்தவர்களின் மனநிலையினை புரிந்து, அதற்கேற்ப நமது செயல் பாட்டினை அமைத்துக்கொள்ளும் போது, உறவுகள் நம் வசமாகி வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை என்கிறார் ஆசிரியர்.

மன அழுத்தம்!

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில், மன அழுத்தத்தினால் பாதிக்கப்படாதவர்கள் மிக குறைவு என்றாகிவிட்டது. வேலை, தொழில், குடும்பம் என எதோ ஒரு வகையில் நாமும் இந்த மன அழுத்தத்தினால் தொடர்புடையவர்களாகவே இருக்கின் றோம் அல்லவா! நமது சிந்தனை, மனம், சூழ்நிலை மற்றும் உணர்வு என அனைத்திலும், மன அழுத்தம் தன் வேலையை காட்டிவிடுகின்றது. இப்படிப்பட்ட மன அழுத்தத்திடம் நாம் ஒருபோதும் சரணடைந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

மன அழுத்தமானது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வகை மன நோயின் வடிவமே தவிர வேறொன்றுமில்லை. மேலும், இது நமக்கு ஏற்படக்கூடிய ஒரு விஷயமல்ல, மாறாக நமது சொந்த சிந்தனையின் வாயிலாக நம்மால் வளரச்செய்யப்படும் ஒரு விஷயம். நம்முடைய மனதிலிருந்து உருவாகும் மன அழுத்தத்தின் அடிப்படை மற்றும் நமது சிந்தனைக்கும் மன அழுத்தத்திற்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றை அறிந்து, அதனை அகற்ற வேண்டிய செயல்பாடுகளை தொடங்கவேண்டியது கட்டாயம்.

சிக்கல்களை சிதறடிப்போம்!

பொதுவாக, நமக்கு ஏற்படும் சிக்கல்களை தீர்க்கக்கூடிய விஷயமாக நாம் பார்ப்பது என்னவென்றால், சூழ் நிலையினை மாற்றி அமைப்பது அல்லது மாறுபட்ட சிந்தனையின் மூலம் சிக்கல்களை அணுகுவது போன்றவையே. இதற்கு மாற்றுவழி ஒன்றும் உள்ளதாக சொல்கிறார் ஆசிரி யர். அதாவது, சிக்கலின் வழியிலேயே சென்று அதன் அடிப்படையினை ஆராய்ந்து அதன்மூலம் தீர்வை எட்டுவது. மேலும், ஒரு சிக்கலை தீர்ப் பதற்கு நமக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் இருக்கும்போது, பயனுள்ள, எளிதான மற்றும் விரைவான வழி முறை எதுவோ அதைக்கொண்டு செயல் பட வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல்கள் இதற்குமுன் ஏற்பட்டுள் ளனவா? அப்படி ஏற்பட்டிருந்தால், அது எவ்வாறு சரிசெய்யப்பட்டது, இதன் தீர்வு எதிர்காலத்தில் எந்தவிதமான தாக் கத்தை ஏற்படுத்தும், இதன் பக்கவிளை வுகள் என்ன? ஆகியவற்றையும் கருத் தில்கொள்ள வேண்டியது அவசியம்.

மகிழ்ச்சி என்பது நாம் வெளியில் தேடி அலையும் விஷயமல்ல என்பதை முதலில் உணரவேண்டும். உண்மையில், மகிழ்ச்சியானது தேடி பெறக்கூடியதும் அல்ல. அது நம்மால் உருவாக்கப்பட வேண்டிய ஒரு உணர்வு. எவ்வளவு அற்புதமான சூழ்நிலையினை நாம் பெற்றிருந்தாலும், நம்முடைய சொந்த உளவியல் செயல்பாட்டினை நாம் புரிந்துக்கொள்ளும்போது மட்டுமே நம்மால் சிறந்த மகிழ்ச்சியான வாழ் வினை அமைத்துக்கொள்ளமுடியும்.

p.krishnakumar@jsb.ac.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

50 mins ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

51 mins ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்