தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மீதான உச்ச நீதிமன்ற உத்தரவு: மொபைல் வாடிக்கையாளர்களையும் பாதிக்கும்- எப்படி?

By செய்திப்பிரிவு

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய்களை அபராதத்துடன் செலுத்தியாக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இட்ட உத்தரவினால் வோடபோன் ஐடியா மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்கள் தாங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்தன.

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய உரிமக் கட்டணங்கள் மற்றும் அலைக்கற்றைப் பயன்பாட்டுத் தொகைகளை உடனடியாகச் செலுத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது முதற்கொண்டே வோடபோன், ஏர்டெல் நிறுவனங்கள் தங்களால் இந்த நிலையில் வர்த்தகத்தைத் தொடர முடியாது என்றும் அரசு நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து புலம்பிக்கொண்டே இருக்கின்றன.

வோடபோன் ஐடியா நிறுவனம் இந்த நிலையில் தங்களால் இந்தியாவில் வர்த்தகத்தைத் தொடர முடியாது என்று கூறியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வாடிக்கையாளர்களையும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு டெலிகாம் நிறுவனங்கள் வழங்கும் இலவச டாக் டைம் உட்பட பல்வேறு சலுகைகளை இனி இந்நிறுவனங்கள் ரத்து செய்ய வாய்ப்புள்ளது.

புதிய வருவாய்க் கணக்கீட்டின் படி வருவாயிலிருந்து குறிப்பிட்ட சதவீதம் அரசுக்குச் செலுத்த வேண்டும் என்ற முறைக்குப் பதிலாக ஆண்டுதோறும் ஒரே கட்டணமாக செலுத்தும் முறையை நிறுவனங்கள் விரும்புகின்றன. நிறுவனங்களின் இந்த விருப்பம்தான் தற்போது அதனை சிக்கல்களுக்குள் தள்ளியுள்ளது.

மேலும் டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் வருவாய் கணக்கிலிருந்து எந்த வருவாயையும் ஒதுக்கி விட முடியாது. உதாரணமாக 10 நிமிட டாக் டைமிற்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கிறது என்றால் கூடுதல் 2 நிமிட டாக் டைமிற்கு கட்டணம் எதுவும் இல்லை. இதுவரை இந்த ரூ.10 என்ற வருவாய்க்கு மட்டும்தான் டெலிகாம் நிறுவனங்கள் அரசுக்க்குக் கட்டணம் செலுத்தி வந்தது, ஆனால் இனி அந்த கூடுதல் 2 நிமிடங்களையும் சேர்த்து ரூ.12 என்ற வருவாய்க்கு அரசுக்கு கட்டணம் செலுத்த நேரிடும். இதனால் கூடுதல் டாக் டைம், இலவச டாக் டைம் சலுகைகளை டெலிகாம் நிறுவனங்கள் ரத்து செய்ய நேரிடலாம்.

இது குறித்து இந்தத் துறை சார்ந்த நிபுணர் ஒருவர் தி இந்து பிசினஸ் லைன் ஊடகத்துக்குத் தெரிவிக்கும் போது, “உச்ச நீதிமன்ற உத்தரவு தொலைத் தொடர்பு நிறுவனங்களை மட்டும் பாதிக்காது. அட்ஜஸ்ட் செய்யப்பட்ட மொத்த வருவாய் என்பதன் மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மொபைல் வாடிக்கையாளர்களையும் பாதிக்கவே செய்யும். டெலிகாம் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் பல்வேறு சலுகைகளை நிறுத்தி விடலாம் அல்லது கட்டண சேவையாக மாற்றி விடலாம்.” என்றார்.

உரிமக்கட்டணங்கள்:

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வருவாயிலிருந்து 8% தொகையை அரசுக்கு உரிமக்கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதுவரை வாடிக்கையாளர்களுக்கு அளித்த சேவை மூலம் பெறப்படும் வருவாய்க்கு மட்டும்தான் டெலிகாம் நிறுவனங்கள் அரசுக்கு கட்டணம் செலுத்தி வந்தன. ஆனால் இப்போது அனைத்து வருவாய் மீதும் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதுதான் உச்ச நீதிமன்ற தீர்ப்பு. இந்த வகையில் அன்னியச் செலாவணி வருவாய், பங்குகள் மற்றும் இயந்திரங்கள் விற்பனை, என்று சிலபல வருவாயினங்களையும் கணக்கீட்டுக்குச் சேர்த்துள்ளது. இதன் படி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் கழிவுகள், சலுகைகள் ஆகியவையும் சேர்க்கப்படும். அதாவது வர்த்தக விநியோகஸ்தர்கள், சில்லரை விற்பனையாளர்கள் ஆகியோருக்கு டெலிகாம் நிறுவனங்கள் அளிக்கும் கழிவுகள், கமிஷன்களும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில் சேர்க்கப்படும்.

அதாவது நிறுவனங்கள் தாங்கள் வர்த்தகத்தைப் பெருக்க அறிவிக்கும் பல்வேறு சலுகைகளினால் பெறும் உத்தேச வருவாயும் ஒட்டுமொத்த வருவாயில் சேர்க்கப்பட்டு கணக்கிடப்படும். இதனால் டெலிகாம் நிறுவனங்களுக்கு சலுகைகள், கமிஷன்களில் கைவைப்பதைத் தவிர வேறு வழியில்லை. மேலும் வாடிக்கையாளர்களுக்கான கட்டணங்களையும் தொலைபேசி நிறுவனங்கள் அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

எனவே வருவாய் என்பதை மறு சீராய்வு செய்ய வேண்டும் என்று டெலிகாம் நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. அரசு செவிசாய்க்கவில்லை எனில், உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவும் வாடிக்கையாளர்கள் தலையில்தான் விடியும் என்பது தவிர்க்க முடியாததே.

-கட்டுரை ஆசிரியர்: தாமஸ் கே.தாமஸ், தி இந்து பிசினஸ்லைன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

8 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஆன்மிகம்

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்