வணிக நூலகம்: வெற்றிக்கு அடித்தளமிடும் சிறிய செயல்பாடுகள்!

By டாக்டர் பி.கிருஷ்ணகுமார்

சிறு சிறு ஓடைகளே ஒவ்வொன்றாய் ஒன்றிணைந்து பெரும் வெள்ள மாய் பெருக்கெடுத்து ஓடுகிறது. சின்ன சின்ன இலைகளையும் குச்சிகளையும் கொண்டே பறவைகள் தனக்கான வலிமையான கூட்டை வடிவமைக்கின்றன. எதிர்காலத்திற்காக சேமித்தல் என்பது மிகவும் கடினமான பணி. ஆனால் இதையே சிறுக சிறுக செயல்படுத்தும்போது, எளிதானதாக மாறிவிடுகின்றது. இந்த சிறிய செயல்பாடுகள், செயல்படுத்துவதற்கு உகந்ததாக இருப்பதோடு, நேர்மறை தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியதாக வும் உள்ளன.

பெரிய பெரிய செயல்பாடுகளை விட, சிறிய விஷயங்களே மாபெரும் மாற்றங்களுக்கு காரணமாகவும், அப்பெரிய மாற்றங்களை உருவாக்கு வதாகவும் உள்ளன என்பதை அடிப்படையாகக்கொண்டு “லிண்டா கப்ளான் தாலெர்” மற்றும் “ராபின் கோவல்” ஆகியோரால் எழுதப்பட்டதே “தி பவர் ஆப் ஸ்மால்” என்னும் இந்தப் புத்தகம். சிறியதாய் சிந்தித்து பெரியதாய் சாதிக்க தேவையான வழிமுறைகளைச் சொல்வதாய் அமைந்துள்ளது இது.

சிறிய மாற்றங்கள்!

ரெடிமேட் ஆடைகள் விற்பனை செய்யப்படும் ஒரு நிறுவனத்தின் சேல்ஸ் டிபார்ட்மெண்ட்டின் கம்ப்யூட்டர் பிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்தார் ஒருவர். அப்பிரிவின் கணினி சார்ந்த பிரச்சினைகளை சரிசெய்வது அவரது அன்றாட பணி. அதே சேல்ஸ் டிபார்ட்மெண்ட்டின் மற்ற ஆண் மற்றும் பெண் பணியாளர்களை தொடர்ந்து கூர்ந்து கவனிக்கும் பழக்கம் இவருக்கு உண்டு. அவர்களின் எளிமையான உரையாடும் திறன், இயல்பான பழக்கங்கள் மற்றும் ஸ்டைலான தோற்றம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு, தானும் அவ்வாறு மாற வேண்டும் என்ற எண்ணத்தை தனக்குள் வளர்த்துக்கொண்டார். ஆனால் அதை எவ்வாறு அடைவது, தனது வாழ்க்கைப் பாதையை எப்படி மாற்றிக்கொள்வது மற்றும் எங்கிருந்து தொடங்குவது போன்ற எந்த திட்டமும் அவரிடம் இல்லை.

இந்நிலையில், ஒருநாள் அவர் பிரபலமான முடி திருத்தகம் ஒன்றிற்கு செல்கிறார். ஒவ்வொருவருக்குமான தனிப்பட்ட சிறப்பான சிகை அலங்காரத்திற்கு பெயர்பெற்றது அக்கடை. அரைமணி நேரத்திற்கு பின், புதிய தோற்றத்துடன் வெளியே வருகிறார் அவர். அடுத்தநாள் அவரது புதிய ஹேர்ஸ்டைல் சிறப்பானதாக வும், அழகானதாகவும், வித்தியாசமான தாகவும் இருப்பதாக அனைவராலும் பாராட்டப்படுகிறார். இந்த பாராட்டுகள், அவரது சுய மதிப்பீட்டின் மீதான மாற்றத்திற்கான வழியை அவருக்குள் உருவாக்குகின்றது. ஹேர்கட் போன்ற சிறிய செயல்கள் கூட உண்மையான தாக்கத்தை வாழ்வில் ஏற்படுத்துகின்றது என்பதை உணர்கிறார் அவர்.

இதன் தொடர்ச்சியாக, புதிய உடை கள் சிலவற்றை வாங்குகிறார். உடற் பயிற்சிக் கூடம் செல்வதை தொடர்ந்து அதிகப்படுத்துகிறார். தனது தோற்றம் மட்டுமின்றி, மற்றவர்களுடனான அணுகுமுறையிலும் மாற்றங்களை கொண்டுவருகிறார். தனது பிரிவிலுள்ள விற்பனை மேலாளர்களிடம் நட்பான போக்கினை கடைபிடிக்கத் தொடங்குகிறார். தனது பணி மாற்றத்துக்கான விருப்பத்தின் மீது நம்பிக்கை வைத்து செயல்படுகிறார். விரைவிலேயே அப்பிரிவில் தனது விருப்பமான பணியை பெறுகிறார். எடுத்துவைக்கப்படும் முதல் சிறிய அடி, இறுதியாக நமது வாழ்க்கையின் பெரிய மாற்றத்திற்கு வழிவகுக்கும். இதுவே நமது சிறிய செயல்பாடுகளின் வியக்கத்தக்க ஆற்றல் என்கிறார்கள் ஆசிரியர்கள்.

சிறிய உண்மைகள்!

சில ஆண்டுகளுக்கு முன்பு, பிரபல மான சங்கிலித்தொடர் உணவகங்களை நடத்தி வந்தது ஒரு நிறுவனம். ஒரே மாதிரியான உட்கட்டமைப்பு வசதி களைக் கொண்டது அந்த உணவகங் கள். அனைத்திலும் உள்ள கண்ணாடிப் பொருட்கள் சீரான இடைவெளியில், தொடர்ச்சியாக உடைந்து, நிறுவனத் திற்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தின. இதற்கான காரணங்களைக் கண்டறிய, நிறுவனத்தின் பிராந்திய மேலாளர் களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப் பட்டது. நிறுவன உணவகம் ஒன்றிலேயே இந்த கூட்டம் நடைபெற்றது. உணவகப் பணியாளர்களுக்கான புதிய பயிற்சி திட்டம் மற்றும் உடைந்த கண்ணாடிப் பொருட்களுக்குப் பதிலாக வேறொரு தரமான நிறுவனப் பொருட்களை மாற் றம் செய்வது போன்ற ஆலோசனைகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த உணவகத் தூய்மைப் பணியாளர் ஒருவர், அக்கூட்டத்தில் உள்ள நிர்வாகிகளில் ஒருவரை தனியே சமையலறையை நோக்கி அழைத்துக்கொண்டுச் செல்கிறார். அங்கு நிறுவப்பட்டுள்ள, பாத்திரங்களை கழுவி சுத்தப்படுத்தும் இயந்திரமே இதற்கான காரணம் என்பதை விளக்குகிறார் அந்த பணியாளர். அந்த இயந்திரத்திலிருந்து வரும் தொடர்ச்சியான அதிர்வுகளே, கண்ணாடிப் பொருட்களை தொடர்ந்து பலவீனமாக்கி, இறுதியில் அவற்றை உடையச்செய்கிறது என்ற உண்மையை புரியவைக்கிறார். பிறகு அந்த இயந்திரம் இடமாற்றம் செய்யப்பட்டு, கண்ணாடிப் பொருட்கள் உடைவது முற்றிலும் நிறுத்தப்படுகிறது. இதன் மூலம் நிறுவனத்தின் தேவையற்ற செலவும் தடுக்கப்பட்டது. இதுபோன்ற சிறிய உண்மைகள், பெரிய மாற்றத்திற்கு காரணமாகவோ அல்லது பெரிய சிக்கல்களுக்கு தீர்வாகவோ அமைவதை கவனத்தில் கொள்வோம்.

சிறிய பணிகள்!

செய்யவேண்டிய பணிகளை எதிர்வரும் நாட்களில் செய்வதற்காக பட்டியலாக குறிப்பெடுத்துக் கொள்ளும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. செய்துமுடிக்க முடியாமல் அதனை தொடர்ந்து பட்டியலில் வைத்திருக்கும் பழக்கமும் உண்டு என்பதே உண்மை. இதற்கான தீர்வாக வழிமுறை ஒன்றைக் கொடுத்துள்ளார்கள் ஆசிரி யர்கள். அதாவது வெறுமனே ஒட்டு மொத்த பணியையும் குறித்துவைத்துக் கொள்வது பெரும் மலைப்பினை ஏற்ப டுத்தி, செயலில் சுணக்கத்தை தோற்று விக்கும். அதற்குப்பதிலாக செய்ய வேண்டிய ஒட்டுமொத்த பணியை, சிறு சிறு வேலைகளாகப் பிரித்து சிறிய செயல்பாட்டுப் பட்டியல் ஒன்றை தயா ரித்துக்கொள்ள வேண்டும். அவை ஒவ் வொரு நாளிலும் நிறைவேற்ற முடிந்த செயல்களாக இருக்க வேண்டும்.

உதாரணமாக, பழுதடைந்த உங்களது வீட்டை விற்பதாக திட்டமிட் டுள்ளீர்கள் என்று வைத்துக்கொள் ளுங்கள். பழுதுபார்க்கும் பணியை மேற்கொள்வது, சரியான தரகரை தேடிப்பிடிப்பது, நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் தெரியப்படுத்துவது, விற்பனைக்கான விளம்பரங்களை மேற்கொள்வது என அதை தொடர்ச்சி யான சிறு சிறு செயல்களாக பிரித்துக் கொள்ளலாம். இவற்றை ஒவ்வொன் றாக நிறைவேற்றிக்கொண்டே வரும் போது, உங்களது பெரிய இலக்கான வீட்டை விற்பது எளிதான செயலாக மாறிவிடும். இந்த ஒவ்வொரு சிறிய விஷயங்களையும் எளிதாக முடிக்கும்போது ஏற்படும் மன நிறைவானது, ஒட்டுமொத்த இலக்கினை அடைவதற்கு வழிவகுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

சிறிய கேள்விகள்!

கேள்வி கேட்பதன் மூலமே, நமது அன்றாட வாழ்க்கையில் நம்மால் பெரும் பாலான விஷயங்களை அறிந்து கொள்ள முடிகின்றது அல்லவா! உண்மையில் கேள்வி கேட்கும் பண் பானது மற்ற பண்புகளை விடவும் தனித்துவமானதும் சிறந்ததும் ஆகும். தொடர்ச்சியான சிறிய சிறிய கேள்வி களின் மூலமாக பெரிய பலன்களை அறுவடை செய்யலாம் என்கிறார்கள் ஆசிரியர்கள். அதிலும் முக்கியமாக, ஏன்? மற்றும் ஏன் இல்லை? போன்ற கேள்விகளை கேட்பதில் எவ்வித பயமோ அல்லது தயக்கமோ இருக்கக்கூடாது. அடுத்ததாக எப்படி? என்ற கேள்வி. ஒருவருடைய வெற்றியை பார்த்து பரவசப்படுகிறீர்களா? அப்படியானால் பொறாமைப்படுவதற்குப் பதிலாக, எப்படி அவர் அதை அடைந்தார் என்பதை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுங்கள். இதன்மூலம், அவர் கையாண்ட திட்டம் மற்றும் செயல்பாட்டு முறைகளை தெரிந்துகொள்ளுங்கள்.

எவ்வளவு பெரிய மரமாக இருந்தாலும், அதன் வளர்ச்சியின் முதல் அடி தொடங்கியது ஒரு சிறு விதையிலேயே. வெற்றிக்காக நீங்கள் எடுத்துவைக்கப்போகும் உங்களது சிறிய முதல் அடி இந்த புத்தகத்தை படிப்பதிலிருந்தும் கூட தொடங்கலாம்.

p.krishnakumar@jsb.ac.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

சினிமா

16 mins ago

விளையாட்டு

22 mins ago

சினிமா

28 mins ago

தமிழகம்

49 mins ago

இந்தியா

34 mins ago

சினிமா

58 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

20 mins ago

மேலும்