இன்னும் செல்லாத ரூபாய் நோட்டுகளை எண்ணுகிறோம்: தகவல் அறியும் மனுவில் ரிசர்வ் வங்கி பதில்

By பிடிஐ

 

ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாததாக அறிவித்து பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு கொண்டு வந்து 15 மாதங்கள் ஆகியும், இன்னும் ரூபாய் நோட்டுகளை கணக்கிடும் பணி நடக்கிறது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பிடிஐ செய்தியாளர் தாக்கல் செய்த தகவல் அறியும் மனுவில் இந்த பதிலை ரிசர்வ் தெரிவித்துள்ளது.

நாட்டில் கறுப்புப் பணம், கள்ளநோட்டு, ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில், நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி கடந்த 2016 நவம்பர் 8-ம் தேதி அறிவித்தார்.

புழக்கத்தில் இருந்த ரூ.15.5 லட்சம் கோடி செல்லாததாக அறிவிக்கப்பட்டு வங்கிகளில் கொடுத்து மாற்ற மக்களிடம் அறிவுறுத்தப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு பின் அடுத்த 50 நாட்களும் மக்கள் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளானார்கள்.

ஆனால், வங்கிக்கு வந்துள்ள செல்லாத ரூபாய் நோட்டுகள் எவ்வளவு, கள்ள நோட்டுகள் எவ்வளவு என்பது குறித்து ரிசர்வ் வங்கி இன்னும் அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.

இது குறித்து அறிய பிடிஐ செய்தி நிறுவனத்தின் நிருபர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கிக்கு மனு செய்தார்.

ரிசர்வ் வங்கி அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

''பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் வங்கிக்கு வந்துள்ள செல்லாத ரூ.1000, ரூ.500 நோட்டுகளை கணக்கிடும் பணி தொடர்ந்து வேகமாக நடந்து வருகிறது. பணத்தை மதிப்பிடும் பணியும், அதன் உண்மைத் தன்மையும் கண்டறியும் ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் வேகமாக நடத்தி முடிக்கப்பட்டுவிடும்.

இந்த இரு பணிகளும் ஒரே நேரத்தில் நடந்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி ரூ.15.28 லட்சம் கோடி செல்லாத ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டுள்ளன. இப்போது நடந்து வரும் பணிகள் முடிந்தபின், ரூபாய் நோட்டின் எண்ணிக்கையிலும், மதிப்பிலும் மாற்றம் இருக்கும்.

ரூபாய் நோட்டுகளை எண்ணுவதற்காகவும், உண்மைத்தன்மையை ஆய்வு செய்யவும் 59 சிவிபிஎஸ் எந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. மேலும், 7 எந்திரங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு ரூபாய் நோட்டுகள் கணக்கிடப்பட்டு வருகின்றன.''

இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், ரூ.15.28 லட்சம் கோடி செல்லாத நோட்டுகள் அதாவது 99 சதவீத நோட்டுகள் வங்கிக்கு வந்துள்ளதாகத் தெரிவித்தது. ரூ.16 ஆயிரத்து 50 கோடி செல்லாத நோட்டுகள் மட்டுமே வங்கிக்கு வரவில்லை எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்