மெட்றாஸ் அந்த மெட்ராஸ் 20: மருத்துவமனையாக மாறிய சத்திரம்!

By எஸ்.முத்தையா

மெட்றாஸ் மாநகரில், நவீன மருத்துவம் என்று அழைக் கப்படும் ஆங்கில மருத்துவம் (அலோபதி) தொடங்கிய வரலாற்றை ஒரு விழா மலரில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் ஓர் உண்மை வெளிப்பட்டது. மெட்றாஸில் ஐரோப்பியர்களுக்காகத் தொடங்கப் பட்ட நவீன மருத்துவமனையில் இந்தியர் களுக்கு கிட்டத்தட்ட 175 ஆண்டு கள், சிகிச்சையே அளிக்கப்பட்ட தில்லை.

இந்தியாவின் முதல் அலோபதி மருத்துவமனை கோவாவில்தான் 16-வது நூற்றாண்டின் தொடக்க காலத்தில் திறக்கப்பட்டது. மெட்றாஸ் நகரில் கவர்னர் எட்வர்ட் விண்டர் 1664-ல் அலோபதி மருத்துவமனையை புனித ஜார்ஜ் கோட்டைக்குள் ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்துத் தொடங்கிவைத்தார். அதுதான் நகரின் ஆங்கில மருத்துவமனைகளுக்கான ஆதி பிறப்பிடம். அதற்குப் பிறகு பல்வேறு முயற்சிகளையடுத்தே, அடுத்த 100 ஆண்டுகளில் ‘மெட்றாஸ் பொது மருத்துவமனை’ உருவானது. இப்போது சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரில் இருக்கும் இடத்தில் 1772 அக்டோபர் 15-ல் புதிய கட்டிடம் கட்டப்பட்டு அங்கே மருத்துவமனை தொடங்கப்பட்டது. அங்கே ஐரோப்பியர்களுக்கு மட்டும் தான் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தியர்களுக்கு அதிலும் குறிப்பாக மெட்றாஸ்வாசிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. 1842 வரையில் இந்த நிலைதான் நீடித்தது.

அதற்குப் பிறகும் கூட அரசு வேலையில் இருக்கும் இந்தியர்களுக்கு மட்டும் சிகிச்சை தரப்பட்டது. பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட வில்லை. 1859-க்குப் பிறகுதான் அது பெயருக்கேற்ப அனைவருக்கும் (ஜெனரல் ஆஸ்பிட்டல்) சிகிச்சை தரும் பொது மருத்துவமனையாயிற்று. (அங்கு சிகிச்சை இலவசம் என்பதால் அதற்கு மெட்றாஸ்வாசிகள் சூட்டிய செல்லப் பெயர் ‘தர்மாஸ்பத்திரி’) ஆசியாவிலேயே மிகப்பெரிய மருத் துவமனை என்று இப்போது புகழப்படும் அரசினர் பொதுமருத் துவமனையின் புகழுக்குக் களங்கம் விளைவிப்பதைப்போல இருக்கிறது, இதன் தொடக்க காலத்தில் அனைவருக்கும் சிகிச்சை தரப்பட வில்லை என்ற தகவல்.

இந்தியர்களுக்கு அதிலும் குறிப் பாக மெட்றாஸ்காரர்களுக்கு அரசு மருத்துவமனையில் முதலில் சிகிச்சை தரப்பட்டதற்குக் காரணம் வெள்ளை அரசின் கனிவால் அல்ல; கட்டாயத்தால் தான் என்பது இன்னொரு வேடிக்கை. அந்த சிகிச்சையும் அரசு பொது மருத்துவமனையில் அல்ல; இன்னொரு மருத்துவமனையில்.

1781-ல் மெட்றாஸ் நகரம் மிகப்பெரிய பஞ்சத்தை எதிர்கொண்டது. மக்கள் பசி, பட்டினியால் மட்டுமல்ல; நோயினாலும் வாடினர். நகரின் முதல் தரும காரியம், அரசாலும் புனித மேரி தேவாலயத்தாலும் இணைந்து தொடங்கப்பட்டது. பஞ்ச நிவாரணக் குழுவொன்று 1782-ல் ஏற்படுத்தப்பட்டது. அந்தக் குழு ஏழைகளுக்குச் சோறு அளிக்க ஜார்ஜ் டவுன் சுவருக்கு வடக்கில், இப்போது ராயபுரம் என்று அழைக்கப்படும் இடத் தில் இருந்தக் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து உணவு அளிக்கத் தொடங் கியது. அப்போது அந்த இடம் பூந்தோட்டங்களும் காய்கறித் தோட் டங்களும், பழத்தோப்புகளும் நிறைந்த பசுமையான இடமாகக் காட்சி யளித்தது.

1784-ல் பஞ்ச நிலைமை மாறி மேம்பாடு ஏற்பட்ட பிறகும் கூட, அந்த இடத்தில் தொடர்ந்து அன்னதானமும் மருத்துவச் சிகிச்சையும் தொடர்ந்தது. கிராம மணியக்காரர் அந்த சத்திரத்துக் குப் பொறுப்பாளராக இருந்ததால் அந்த இடத்துக்கு ‘மணியக்காரர் சத்திரம்’ என்ற பெயர் ஏற்பட்டது. அந்த இடத்தைக் ‘கஞ்சித் தொட்டி’ என்றும் கூட அழைத்தார்கள். கிழக்கிந் தியக் கம்பெனியின் சர்ஜன் ஜான் அண்டர்வுட் என்ற டாக்டர் 1799-ல் இந்த இடத்தில் சிறிய மருத்துவமனையைத் தொடங்கினார். ‘உள்நாட்டவருக்கான மருத்துவமனை’ என்று அது அழைக்கப்பட்டது.

அது தருமஸ்தாபனமாகத்தான் நடத் தப்பட்டது. பஞ்ச நிவாரணக் குழுவிடம் இருந்து அரசு அந்தப் பொறுப்பை 1808-ல் ஏற்றது. புரசைவாக்கத்தில் நடைபெற்றுவந்த உள்நாட்டவருக்கான சிறிய மருத்துவமனையும் இந்த இடத்துக்கு மாற்றப்பட்டது. மருத்துவ மனையும் சத்திரமும் சேர்ந்த அந்த இடம் ‘மணிகார் சத்திர மருத்துவமனை’ என்று அழைக்கப்பட்டது.

பிறகு 1910-ல் அந்த மருத் துவமனைக்கு ‘ராயபுரம் மருத் துவமனை’ என்று பெயர் மாற்றப் பட்டது. அங்கிருந்த பழைய கட்டிடங் களுக்குப் பதிலாக புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டன. அவைதான் இப்போதும் நீடிக்கின்றன.

இந்த மருத்துவமனைக்கு ராயபுரம் மருத்துவமனை என்று பெயர் சூட்டு வதற்கு முன்னதாகவே, ராயபுரம் கூடுதல் மருத்துவப் பள்ளி என்ற பெயரில் மருத்துவக் கல்லூரியும் 1877-ல் இங்கே தொடங்கப்பட்டிருந்தது. 1835-ல் தொடங்கப்பட்டிருந்த மெட்றாஸ் மருத்துவப் பள்ளிக்கு உதவியாக இது தொடங்கப்பட்டது. 1835-ல் தொடங்கப்பட்ட மெட்றாஸ் மருத்துவப் பள்ளி 1850-ல் மெட்றாஸ் மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. ராயபுரம் மருத்துவப் பள்ளி 1933-ல் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

லேடி வெலிங்டன் மகளிருக்கான மருத்துவப் பள்ளி 1923-ல் தொடங் கப்பட்டது. அதுவும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியுடன் இணைக்கப் பட்டது. 1938-ல் ராயபுரம் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை இரண்டும் ஜார்ஜ் ஸ்டான்லி என்ற கவர்னரின் பெயரை ஏற்றன. இந்தப் பெயரைக்கூட மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது ஸ்டான்லியில் படித்த பழைய மாணவர்கள் பலர், இதே பெயரே நீடிக்க வேண்டும் என்று போராடி வெற்றி பெற்றனர்.

ஸ்டான்லி மருத்துவமனை இருந்த இடத்தை ராயபுரம் கஞ்சித் தொட்டி ஆஸ்பத்திரி என்றும் அழைக்கும் வழக்கம் பல பெரியவர்களிடம் சில ஆண்டுகளுக்கு முன்னர் வரைகூட இருந்திருக்கிறது.

- சரித்திரம் பேசும்…

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

48 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

தமிழகம்

9 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்