எல்லிஸ் ஆர்.டங்கன் 10

By செய்திப்பிரிவு

தமிழ் படங்களை இயக்கிய அமெரிக்கர்

தமிழில் பல வெற்றிப் படங்களை தந்த அமெரிக்க இயக்குநர் எல்லிஸ் ஆர்.டங்கன் (Ellis R.Dungan) பிறந்த தினம் இன்று (மே 11). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l அமெரிக்காவின் ஓஹியோ மாகாணம் பார்ட்டன் நகரில் நடுத்தர குடும்பத்தில் (1909) பிறந்தார். செயின்ட் க்ளையர்ஸ்வில் உயர் நிலைப் பள்ளியில் பயின்றார். சிறு வயது முதலே புகைப்படக் கலை யில் ஆர்வம் கொண்டிருந்தார்.

l புதிதாக வாங்கிய கேமராவைக் கொண்டு, பள்ளி ஆண்டு இதழுக்காக புகைப்படங்கள் எடுத்தார். அந்த இதழின் பொறுப்பாசிரியராகவும் செயல்பட்டார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டிருந்த திரைப்படத் துறையில் ஒளிப்பதிவு பிரிவில் சேர்ந்தார்.

l திரைக்கதை, இயக்கம், படத்தொகுப்பு, படத்தயாரிப்பு நிர்வாகம் என அனைத்துக் களங்களிலும் புகுந்து அவற்றையும் ஆர்வத்தோடு கற்றார். பின்னாளில் புகழ்பெற்ற இயக்குநராக ஜொலித்த மாணிக் லால் டாண்டன் என்ற இந்திய மாணவரும் அங்கு படித்தார். படிப்பு முடிந்ததும், இந்தியா திரும்பி திரைப்படம் தயாரிக்கத் தொடங்கிய அவர், உதவிக்கு தனது கல்லூரி நண்பர் டங்கனை அழைத்தார்.

l இந்தியா வந்த டங்கன், ‘நந்தனார்’ திரைப்படத்தில் நண்பருக்கு உதவியாளராக சேர்ந்தார். அதில் சில காட்சிகளையும் இயக்கினார். அப்போது ஏ.என்.மருதாச்சலம் தனது அடுத்த படத்தை இயக்குமாறு டாண்டனிடம் கேட்டார். அவர் நண்பனை சிபாரிசு செய்ய, 1936-ல் ‘சதி லீலாவதி’ திரைப்படம் மூலம் தமிழ் திரைப்பட இயக்குநரானார் டங்கன்.

l தமிழில் ஒரு வார்த்தைகூட தெரியாவிட்டாலும் ஆங்கிலம் தெரிந்த தமிழ் உதவியாளர்களைக் கொண்டே தமிழ் சினிமா உலகில் தனித் தன்மை கொண்ட, வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தார். சினிமாவில் நாடக பாணி எதிரொலிப்பதை மாற்றி, நடிகர்களின் முகபாவனை, உடல்மொழிகளில் மாற்றத்தைக் கொண்டுவந்தார்.

l எம்.எஸ்.சுப்புலட்சுமியை நடிக்க வைத்த பெருமை இவரையே சாரும். எம்ஜிஆர், எம்.கே.ராதா, டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரை அறிமுகம் செய்தவரும் இவரே. ‘இரு சகோதரர்கள்’, ‘அம்பிகாபதி’, ‘சூர்யபுத்திரி’, ‘சகுந்தலா’, ‘மீரா’ உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கினார்.

l முதன்முதலாக வெளிநாடு சென்று படப்பிடிப்பு நடத்தினார். கேமரா கோணம், ஒளியமைப்பு ஆகியவற்றில் பல புதுமைகளைக் கையாண்டார். சிம்பாலிக் ஷாட்களை அறிமுகப்படுத்தினார். காதல் காட்சிகளில் எல்லை மீறாத நெருக்கத்தை துணிந்து காட்சிப்படுத்தினார். தமிழ் மட்டுமல்லாது இந்தி, ஆங்கிலப் படங்களையும் இயக்கி முத்திரை பதித்தார். பல ஆங்கில திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கினார்.

l ‘சதி லீலாவதி’யில் தொடங்கிய இவரது சாதனைப் பயணம் 1950 வரை தொடர்ந்தது. பிறகு அமெரிக்கா திரும்பியவர், ‘எல்லிஸ் டங்கன் புரொடக் ஷன்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். பல அமெரிக்கத் திரைப்படங்களுக்கு ஆலோசகராகப் பணியாற்றி னார்.

l தனது திரையுலக அனுபவங்களைத் தொகுத்து ‘எ கைடு டு அட்வெஞ்சர்’ என்ற பெயரில் சுயசரிதை வெளியிட்டார். 90-களின் தொடக்கத்தில் தமிழகம் வந்த இவருக்கு தமிழ் திரையுலகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

l அந்நிய நாட்டின் மொழி, கலாச்சாரம், மக்களின் ரசனை, எதிர்பார்ப்பு குறித்து தெரிந்துகொண்டு, தனது தன்னிகரற்ற திறனால் சாதனை இயக்குநராக முத்திரை பதித்த எல்லிஸ் ஆர்.டங்கன் 92-வது வயதில் (2001) மறைந்தார்.

- ராஜலட்சுமி சிவலிங்கம்



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

6 mins ago

விளையாட்டு

15 mins ago

சினிமா

16 mins ago

இந்தியா

53 mins ago

தமிழகம்

50 mins ago

சினிமா

56 mins ago

இந்தியா

37 mins ago

கருத்துப் பேழை

46 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்