முத்துக் குளிக்க வாரீகளா 20: தராசு ஏந்தி வந்த குரங்கு!

By கவிக்கோ அப்துல் ரகுமான்

ஒரு சின்னஞ்சிறு தீவிலிருந்து புறப்பட்டு வந்த ஆங்கிலேயர் பெரிய துணைக் கண்டமான இந்தியாவை எப்படிப் பிடித்து ஆண்டார்கள்?

பிரித்தாளும் சூழ்ச்சி!

இந்தியாவில் வாழும் இந்துக் களும் முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்துவிட்டால் ஆங்கிலேயர் ஆள முடியாது.

ஆகவே, அவர்கள் இந்துக்களையும் முஸ்லிம் களையும் ஒன்றுசேரவிடாமல் சூழ்ச்சிகள் செய்த னர். அவர்கள் இருவருக்கிடையே பகைமையை உண்டாக்கினர்; மோதலை ஏற்படுத்தினர்.

இரண்டு பூனைகளுக்குரிய அப்பத்தை தராசு ஏந்தி வந்த குரங்கு இப்படித்தான் தானே உண்டு ஏப்பம்விட்டது.

இந்தியாவின் பன்முகத் தன்மை ஒரு வரப்பிரசாதம். இந்து மதமும் இஸ்லாமும் ஒன்றையொன்று பாதித்தன. அதன் விளைவாக இந்து மதத்தில் ‘பக்தி இயக்கமும்’ இஸ்லாத்தில் பிற சமயவாதிகளையும் நேசிக்கும் புதிய தத்துவப் பார்வையும் தோன்றின.

இரு மதங்களின் திருமணத்தில் சீக்கிய மதம் என்றதோர் புதிய மதமே பிறந்தது. கலை இலக்கியங்களில் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டன.

அனைத்தையும் விடப் பிற சமய சகிப்புத் தன்மை என்ற உயர்ந்த பண்பாடு மலர்ந்து மணம் வீசி வந்தது.

அவ்வளவும் குரங்கு கையில் சிக்கிய பூமாலையாய்ச் சிதைக்கப்பட்டன.

ஆங்கிலேயர்கள் தங்கள் சுயநலத்தால் பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டனர். இதற்காக அவர்கள் எடுத்துக்கொண்ட பயங்கர ஆயுதம் வரலாற்று ஏடுகளைத் திரித்து எழுதுதல்.

இதை நிரூபிக்கப் பல ஆவணங்கள் கிடைக்கின்றன.

வைஸ்ராயாக இருந்த எல்கின் பிரபுவுக்குப் பிரித்தானிய அரசுச் செயலர் வுட் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

அதில், ‘ஒரு பிரிவினருக்கு எதிராக அடுத்த பிரிவினரைத் தூண்டிவிடும் உத்தி மூலம் இந்தியாவில் நமது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளோம். இதை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். அனைவருக்குமிடையே பொதுவான உணர்வு ஏதும் ஏற்பட்டுவிடாமல் இருக்க உங்களால் இயன்ற அனைத்தையும் செய்யுங்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைப் போலவே வைஸ்ராய் கர்ஸன் பிரபுவுக்கு அரசுச் செயலர் ஜார்ஜ் பிரான்சிஸ் ஹாமில்டன் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

அதில் அவர், ‘இந்தியா மீது நமது ஆளுமைக்கு உண்மையான ஆபத்து இப்போது இருப்பதாக நான் நினைக்கவில்லை. இன்னும் 50 ஆண்டுகள் கழித்து, படிப்படியாக மேற்கத்தியக் கிளர்ச்சி உத்திகள் அங்கே பரவி, அவற்றை அவர்கள் கையாளுகிற நேரத்தில்தான் உண்மையான ஆபத்து உண்டாகும் என எண்ணுகிறேன். படித்த இந்தியர்களை இரு கூறுகளாகப் பிரித்தால், பரவி வரும் கல்வி அறிவு காரணமாக நமது அரசுமுறை மீது ஏற்படவிருக்கும் நுட்பமான தாக்குதல்களில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும். எனவே, இனங்களுக்கிடையே பிளவை அதிகப்படுத்தும் வகையில் பாடப் புத்தகங்கள் அமையும்படி நாம் திட்டமிட வேண்டும்’ என்று எழுதியிருக்கிறார்.

கவர்னர் ஜெனரல் டஃப்ரினுக்கு அரசு அதிகாரி கிராஸ் எழுதிய கடிதத்தில், ‘மத உணர்வுகளால் ஏற்படும் பிளவுகள் நமக்கு பெருத்த சாதகமாக உள்ளன. இந்தியாவுக்கான கல்விமுறை பற்றி ஆராயத் தாங்கள் நியமித்துள்ள ஆய்வுக் குழு மேலும் பல நல்ல விளைவுகளை நமக்கு ஏற்படுத்தித் தரும் என்று எதிர்பார்க்கிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தக் கொள்கையின் அடிப்படையில் இந்திய வரலாற்றுப் புத்தகங்கள் திட்டமிட்டுத் திரித்து எழுதப்பட்டன.

முஸ்லிம் மன்னர்கள் இந்துக்களைக் கட்டாய மதமாற்றம் செய்தார்கள். அவர்களைக் கொன்றார்கள். அவர்களுடைய கோயில்கள் இடிக்கப்பட்டன என்று எந்தவித ஆதாரமும் இல்லாமல் எழுதினார்கள். முஸ்லிம் அரசர்கள் இந்த நாட்டுக்குச் செய்த நன்மைகள் மறைக்கப்பட்டன.

வரலாற்றறிஞர் பேராசிரியர் ஹபீப், ‘இந்திய அரியணையில் வீற்றிருந்த முஸ்லிம் மன்னர்கள் பெரும்பாலும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களே. அவர்கள் ஆறு அல்லது ஏழு நூற்றாண்டுகள் ஆட்சி புரிந்தார்கள் என்றால் அவர்களது ஆட்சி, மத ஆட்சியாக இல்லாமலிருந்ததுதான் காரணம். இல்லாவிடில் அவர்களுடைய ஆட்சி இரு தலைமுறையைக் கூடத் தாண்டியிருக்காது’ என்று எழுதுகிறார்.

ஜியாவுத்தீன் பர்னி என்ற வரலாற்று ஆசிரியர் தமது, ‘ஃபதாவா ஃபண்டாரி’யில் ‘முஸ்லிம் அரசர்கள் இஸ்லாமிய ஷரீயத் முறைப்படி ஆட்சி செய்யவில்லை. ஈரானிய மன்னர்களின் குறிப்பாக நவ்ஷேர்வானே ஆதில் என்று அழைக்கப்பட்ட குஸ்ரோ பர்வேஸின் ஆட்சிமுறைகளைப் பின்பற்றியே ஆண்டார்கள்’ என்று குறிப்பிடுகிறார்.

இந்த ஆட்சிமுறை இஸ்லாமிய ஷரீயத் ஆட்சி முறைக்கு முரணானது.

மிகவும் அநியாயமாகத் திரித்துக் கூறப்பட்ட வரலாற்றிற்குத் திப்பு சுல்தானை உதாரணமாகக் காட்டலாம்.

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் திப்பு சுல்தானுக்கு மிக முக்கிய இடம் உண்டு. தங்களை எதிர்த்துப் போராடியவர்களில் திப்பு சுல்தானுக்குத்தான் ஆங்கிலேயர்கள் அதிகமாக அஞ்சினர்.

வில், அம்பு, வாள் இவைதாம் இந்திய மன்னர்களின் பெரிய ஆயுதங்கள் என்று எண்ணியிருந்த ஆங்கிலேயர்களை ராக்கெட் குண்டுகளால் தாக்கி அதிர்ச்சி ஏற்படுத்தியவர் திப்பு சுல்தான்.

‘‘ஆட்டைப் போல் 100 ஆண்டுகள் வாழ்வதை விடப் புலியைப் போல் சில நாட்கள் வாழ்வதே பெருமை’’ என்று முழங்கியவர்.

அக்காலத்தில் பெண்கள் மேலாடை அணியாதிருந்தனர். திப்புதான் அதைத் தடுத்து பெண்கள் மேலாடை அணிய வேண்டும் என்று சட்டம் இயற்றினார். மதுவிலக்கை செயல்படுத்தினார். அனைத்துச் சமயத்தினரும் தங்கள் வழிபாடு மற்றும் வாழ்வுரிமைகளைப் பெறச் சட்டம் இயற்றினார்.

செங்கோலாட்சி செய்த இந்த மாவீரரைத்தான் வரலாற்றுப் புரட்டர்கள் மதத் தீவிரவாதியாகச் சித்திரித்து வைத்துள்ளனர்.

திப்பு சுல்தான் இஸ்லாத்தைத் தழுவும்படி 3 ஆயிரம் பிராமணர்களைக் கட்டாயப்படுத்தினார்; அவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் தற்கொலை செய்துகொண்டனர் என்று வரலாற்றுப் புத்தகத்தில் எழுதி வைத்தனர்.

இந்த நூல் வங்காளம், அசாம், பிஹார், ஒடிஷா, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வரலாற்றுப் பாட நூலாக வைக்கப்பட்டிருந்தது.

இவ்வாறாகப் பிஞ்சு நெஞ்சுகளிலேயே நஞ்சு ஊட்டப்பட்டது.

- இதன் தொடர்ச்சி வரும் வாரம் வரும்...

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: kavikko2003@yahoo.com .

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

விளையாட்டு

6 mins ago

இந்தியா

9 mins ago

இந்தியா

15 mins ago

க்ரைம்

13 mins ago

இந்தியா

28 mins ago

இணைப்பிதழ்கள்

4 hours ago

இணைப்பிதழ்கள்

4 hours ago

இந்தியா

49 mins ago

இணைப்பிதழ்கள்

4 hours ago

கருத்துப் பேழை

43 mins ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்