முத்துக் குளிக்க வாரீகளா 16: பாரதியும் பாரதிதாசனும்!

By கவிக்கோ அப்துல் ரகுமான்

‘கூத்தடித்துக் கொண்டிருக்கும்

புராண நூலின்

கொட்டத்தை அடக்கி வரும்

கவிஞன்; நல்ல

நாத்தீகன், நற்றமிழன்

இந்நூற் றாண்டு

நமக்காக உவந்தளித்த

எழுத்துச் செல்வம்

ஆத்திகர்க்கு வேப்பங்காய்;

நமக்கு மாங்காய்

அகத்தியர்போல் உடல் மரணம்

மட்டும் உள்ளோன்

சூத்திரனே என்பானை

உதைக்கச் சொல்லும்

சுப்புரத்தி னக்கவிஞன்

எதிர்ப்பில் வாழ்வோன்’

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனை இப்படி அறிமுகப்படுத்துகிறார் அவருடைய தாசன் சுரதா - அதாவது சுப்பு ரத்தின தாசன்.

அந்தப்புரத்தில் ஆடிக் கொண்டிருந்த கவிதைப் பெண்ணை ஆணாக்கியவர் பாரதி. அதன் கையில் ஆயுதங்களைத் தந்து போர்க்களத்துக்கு அனுப்பியவர் பாரதிதாசன்.

‘எங்கெங்குக் காணினும்

சக்தியடா - தம்பி

ஏழு கடல் அவள்

வண்ணமடா - அங்குத்

தங்கும் வெளியினில்

கோடி யண்டம் - அந்தத்

தாயின் கைப் பந்தென

ஓடுமடா ஒரு

கங்குலில் ஏழு

முகிலினமும் வந்து

கர்ச்சனை செய்வது

கண்டதுண்டோ - எனில்

மங்கை நகைத்த

ஒலியெனலாம் அவள்

மந்த நகையங்கு

மின்னுதடா’

இது பாரதிதாசன் பாரதியாருக்கு முன்னா லேயே பாடிய கவிதை; அவரால் பாராட்டப்பட்ட கவிதை.

பாரதியார் கைகளாலேயே ‘சுப்பிரமணிய பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனகசுப்புரத்தினம் எழுதியது’ என்றெழுதப்பட்டு ‘சுதேசமித்திரன்’ இதழுக்கு இக்கவிதை அனுப்பப்பட்டதாம்.

பாரதியார் கவிதைத் தொகுப்பில் இக்கவிதை யைச் சேர்த்து வைத்தால், இது பாரதி பாடியதல்ல; வேறு யாரோ பாடியது என்று சந்தேகப்படவே மாட்டார்கள்.

பாரதி சக்தி உபாசகர். இந்தக் கவிதையும் சக்தியைப் புகழ்ந்து பாடுகிறது. பாரதியினுடைய அதே பார்வை, அதே கவிதா ஆவேசம் இந்தக் கவிதையில் அப்படியே எதிரொலிக்கிறது.

விடுதலைப் போராட்டத்தின் படைப் பாட்டாக முழங்கியவர் பாரதி. காந்திய இயக்கத்தின் எக்காளமாக ஒலித்தவர் நாமக்கல் கவிஞர். திராவிட எழுச்சியின் போர் முரசாக ஓசை செய்தவர் பாரதிதாசன்.

இந்தப் புதுவைக் கவிஞர் தமிழில் இதுவரை யாரும் செய்யாத புதுமைகளைச் செய்திருக் கிறார்.

புலவர்கள் அரசர்களையும், செல்வர்களையும் தாம் பாடியிருக்கிறார்கள். காரணம் உங்களுக்குத் தெரியும்.

பாரதிதாசன் யாரைப் புகழ்ந்து பாடியிருக் கிறார் தெரியுமா? வண்டி ஓட்டுபவன், மாடு மேய்ப்பவன், நெசவாளி, உழவன், ஆலைத் தொழிலாளி, மரம் வெட்டுவோர், கூடை முறம் பின்னுவோர், பூ விற்போர், ஓவியர், சுண்ணாம்பு இடிப்போர் - ஆம் இவர்கள்தாம் பாரதிதாசனின் பாட்டுடைத் தலைவர்கள், கவிதா நாயகர்கள்.

பாரதிதாசன் தொடக்கத்தில் பழுத்த ஆத்திகராக இருந்தவர். பின்னர் பெரியாரு டைய ஈர்ப்பால் நாத்திகராக மாறினார். ‘சுப்பிரமணியர் துதியமுது’ பாடிய பாரதிதாசன்,

‘கடவுள் இல்லை கடவுள் இல்லை

கடவுளென்ப தில்லையே’

என்று பாடினார். இது தமிழ்க் கவிதையில் ஒலித்த முதல் நாத்திகக் குரல்.

பாரதிதாசன் பாடல்களில் பகுத்தறிவுப் பிரச்சாரம் உரத்து ஒலித்தது.

‘உள்ள பகுத்தறிவுக்கு

ஒவ்வாத ஏடுகளால்

என்னை அசைக்க

இயலாது’

என்று அவர் பாடினார். இதுவும் தமிழுக்குப் புதுமை.

மதம் அகன்ற

சாதி மறைந்த

அரசு கடந்த ஓர்

வாழ்க்கை

அமைப்பது

அவர் இலட்சியக் கனவாக இருந்தது.

‘இருட்டறையில் உள்ளதடா

உலகம்; சாதி

இருக்கின்ற தென்பானும்

இருக்கின் றானே

மருட்டுகின்ற மதத் தலைவர்

வாழ்கின் றாரே

வாயடியும் கையடியும்

மறைவ தெந்நாள்

சுருட்டுகின்றார் தம்கையில்

கிடைத்தவற்றை!

சொத் தெல்லாம் தமக்கென்று

சொல்வார் தம்மை

வெருட்டுவது பகுத்தறிவே!

இல்லை யாயின்

விடுதலையும் கெடுதலையும்

ஒன்றே யாகும்’

என்பது அவருடைய கொள்கைப் பிரகடனமாக இருக்கிறது.

சாதி என்ற வியாதிக்குக் கலப்பு மணமே மருந்து என்று பாரதிதாசன் பரிந்துரைக்கிறார். விதவை மணத்தை ஆதரித்துப் பாடுகிறார். குழந்தை மணத்தைக் கண்டிக்கிறார். இவையெல்லாம் தமிழில் முன்பு இல்லா தவை; பாரதியாரே பாடாதவை.

‘காதலுக்கு வழிவைத்துக்

கருப்பாதை சாத்தக்

கதவொன்று கண்டறிவோம்

இதிலென்ன குற்றம்’

என்று அவர் கவிதை கருத்தடைப் பிரச்சாரமும் செய்கிறது.

பொதுவுடைமைக் கருத்துகளையும் வீரா வேசமாகப் பாடியவர் பாரதிதாசன்.

‘ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர்

உதையப்பராகிவிட்டால் ஓர் நொடிக்குள்

ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி

ஒப்பப்பர் ஆய்விடுவர் உணரப் பாநீ’

என்ற பாடல் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் புகழ்பெற்ற பாடல்.

‘வலியோர் சிலர் எளியோர் தமை

வதையே புரிகுவதா

கொலை வாளினை எடடா; மிகு

கொடியோர் செயலறவே’

என்பதும் அவருடைய நெற்றிக்கண் நெருப்புப் பொறிகளில் ஒன்றே.

‘மண்மீதில் உழைப்பா ரெல்லாம்

வறியராம்; உரிமை கேட்டால்

புண்மீதில் அம்பு பாய்ச்சும்

புலையர்செல் வராம் இதைத் தன்

கண்மீதில் பகலி லெல்லாம்

கண்டுகண்டு அந்திக்குப் பின்

விண்மீனாய்க் கொப்ப ளித்த

விரிவானம் பாராய் தம்பி’

என்ற பாட்டில் பாரதிதாசன் விண்மீன் களை உழைப்பவர்கள் கொடுமைப்படுத்தப் படுவதைக் கண்டு வானத்துக்கு ஏற்பட்ட கொப்புளங்கள் என்கிறார். இது உழைப் பவர் மீது அவர் கொண்ட பரிவைக் காட்டுகிறது.

‘எல்லார்க்கும் எல்லாம் என்

றிருப்ப தான

இடம் நோக்கி நகர்கின்ற

திந்த வையம்’

என்று அவர் பாடிய பாட்டில் பொதுவுடைமை இலட்சியத்தை நோக்கி உலகம் இயற்கையாகவே நடந்து கொண்டிருக்கிறது என்பதை ‘நகர்கின்றது’ என்ற சொல்லால் உணர்த்திவிடுகிறார். ஆனால், அதே நேரத்தில் அது மெதுவாக நடக்கிறது என்பதையும் சொல்லிவிடுகிறார்.

தமிழ் உணர்வை எழுப்ப அவர் பாடிய பாடல்கள் புகழ்பெற்றவை.

‘எங்கள் வாழ்வும்

எங்கள் வளமும்

அகத்தியர்போல் உடல் மரணம்

மங்காத தமிழென்று

சங்கே முழங்கு’

என்ற பாடல் ஒலிக்காத மேடையில்லை. இத்த கைய பாடல்களால், திராவிட இயக்கம் வளர்ந்தது; திராவிட இயக்கத்தால் பாரதிதாசனுடைய புகழ் வளர்ந்தது.

‘வெங்கொடுமைச் சாக்காட்டில்

விளையாடும் தோளெங்கள்

வெற்றித் தோள்கள்

கங்கையைப் போல்

காவிரி போல்

கருத்துக்கள் ஊறுமுள்ளம்

எங்கள் உள்ளம்

மட்டும் உள்ளோன்

வெங்குருதி தனிற் கமழ்ந்து

வீரஞ்செய் கின்றதமிழ்

எங்கள் மூச்சாம்’

என்ற பாட்டில் அவருடைய உணர்வுகள் வெடித்துச் சிதறும் எரிமலையின் அக்கினிக் குழம்பாகப் பாய்கின்றன சொற்கள்.

கவிதை என்பது சக்திமிக்க உணர்ச்சி களின் தன்னெழுச்சிப் பிரவாகம் (Poetry is spontaneous overflow of powerful feelings) என்று சொன்னாரே வேர்ட்ஸ் வொர்த். அதை இங்கே காணலாம்.

அக்கினி மேடையில் சொற்களின் இந்த ருத்ர தாண்டவம் தமிழ்க் கவிதைக்குப் புதிது.

இதுதான் பாரதிதாசன்!

- இன்னும் முத்துக் குளிக்கலாம்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: kaviko2013@gmail.com

> முந்தைய அத்தியாயம்: முத்துக் குளிக்க வாரீகளா 15: இல்லையென்பது இல்லை!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

20 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்