முத்துக் குளிக்க வாரீகளா 9: மிதக்கும் வீடு!

By கவிக்கோ அப்துல் ரகுமான்

ஆதாமுக்கு 146 ஆண்டு களுக்குப் பின்னர் (பைபிள் 126 ஆண்டுகள் என்கிறது) அவருடைய 8-வது தலைமுறை யில் நோவா (குர்ஆனின் படி நூஹ்) என்பவர் தோன்றினார்.

அவர் காலத்து மக்கள் மிகவும் கெட்டுப் போயிருந்தனர். பஞ்சமா பாதகங்களையும் தயங்காமல் செய்தனர். பொதுவாகக் கூறுவ தாக இருந்தால் மனித வடிவில் மிருகங்களாக இருந்தனர்.

இறைவன் நோவாவைத் தூத ராக்கி, அவருடைய சமூக மக்களை அச்சுறுத்தி எச்சரிக்குமாறும், இறைவனுடைய நேர் நெறிக்கு அழைக்குமாறும் ஆணையிட்டான்.

அவரும் அவ்வாறே தம் மக் களுக்கு உபதேசம் செய்யத் தொடங்கினார். ஆனால், அவர் களோ அவரைத் தூற்றியதோடு துன்புறுத்தவும் தொடங்கினர்.

நோவா எவ்வளவோ எடுத் துரைத்தும் அவர்கள் திருந்துவ தாக இல்லை. எனவே, அவர் மனம் நொந்து ‘‘என் அதிபதியே! இந்தப் பாவிகளில் எவரையும் பூமியில் விட்டுவைக்காதே. நீ இவர்களை விட்டுவைத்தால் இவர்கள் உன்னுடைய நல்லடி யார்களையும் கெடுத்துவிடுவார் கள். மேலும், இவர்கள் சந்ததியில் யார் பிறந்தாலும் தீயவர்களாகவே இருப்பார்கள்’’ என்று இறைவ னிடம் முறையிட்டார்.

இறைவன், ‘‘இந்த மனித அழுக்குகளை நான் நீரால் கழுவுவேன். நீரில் பிறப்பித்தேன் நீரால் அழிப்பேன்” என்றான்.

இறைவன் நோவாவை ஒரு கப்பல் கட்டச் சொன்னான். நோவா தச்சர். இறைவனின் அறிவுரைப் படி, தம் புதல்வர்களின் ஒத்துழைப் போடு அவர் ஒரு பெரிய கப்பல் கட்டத் தொடங்கினார்.

அதைப் பார்த்த மக்கள், ‘‘இது என்ன?’’ என்று கேட்டார்கள். ஏனென்றால், அதற்கு முன்பு யாரும் கப்பலைப் பார்த்தது இல்லை. அதுதான் பூமியில் கட்டப்பட்ட முதல் கப்பல்.

நோவா, “இது மிதக்கும் வீடு” என்றார்.

மக்கள், “மிதக்கும் வீடா? இங்கேதான் நீரே இல்லையே” என்றனர்.

நோவா, ‘‘வரும்’’ என்றார்.

கப்பல் கட்டி முடிந் தது.

நோவா இறையாணையின்படி நல்லவர்களையும், எல்லா உயிரினத்தின் இணைகளையும் கப்பலில் ஏற்றிக்கொண்டார்.

அந்தப் பயங்கர நாள் வந்தது. கடல் நீர் கொந்தளித்துப் பூமியின் மேல் பாய்ந்தது. வானம் அசுர மழை பெய்தது. பூமி தன் வயிற்றில் உள்ள நீரையெல்லாம் வாந்தியெடுத்தது.

பூமி பிரளய வெள்ளத்தில் மூழ்கத் தொடங்கியது. உரக்க ஒலித்த மனிதக் கூக்குரல்கள் அடங்கிவிட்டன.

நோவாவின் கப்பல் நீரின் மேல் மிதக்கத் தொடங்கியது.

பூமிப் பிணத்துக்கு நீர் சவக்கோடி உடுத்தியது.

நோவாவுக்கு சாம், ஹாம், யாபூத், யாம் என்ற நான்கு புதல் வர்கள் இருந்தனர். அவர்களுள் யாம் தீயவனாக இருந்ததால், அவன் நீரில் மூழ்கி இறந்தான்.

வெள்ளம் மெதுவாக வடியத் தொடங்கியது. நோவாவின் கப்பல் ஒரு மலை மீதிருந்தது.

கப்பலில் இருந்து இறங்கிய நோவாவும் அவருடைய குடும் பமும் அந்த மலை மீதே வாழத் தொடங்கின.

தமிழ்நாட்டில் கிடைக்கக்கூடிய சான்றுகள், நோவா குமரிக் கண்டத்தில்தான் வாழ்ந்திருக்க வேண்டும் என்று காட்டுகின்றன.

உலகத்தின் பழைய நாகரிகங் கள் அனைத்திலும் பிரளயத் தொன்மம் காணப்படுகிறது.

‘கில்கமெஷ்’ என்ற புரா தனப் பாபிலோனியக் காவியத் தில் ‘உட்னா பிஷ்டிம்’ என்பவர் தெய்விக வழிகாட்டுதலின்படி கப்பல் கட்டிப் பிரளயம் வந்த போது அதில் ஏறித் தப்பித்ததாகக் கூறப்பட்டிருக்கிறது.

மற்றொரு பாபி லோனியக் கதையில் பிரளயத்தில் கப்பல் ஏறித் தப்பித்தவர் ஸிஸோத் ராஸ் (xisouthros) என்று இருக்கிறது.

சுமேரியக் கதை யில் தப்பித்தவர் பெயர் ஸியூ சுத்ரா (Zi-u-Sud-ra) என்று குறிக்கப்பட்டிருக்கிறது. இது மேற் கண்ட பெயரோடு பெரும்பாலும் ஒன்றுபடுகிறது.

நோவானின் இயற்பெயர் ‘ஸாகுப்’ என்றோ ‘ஸகுன்’ என்றோ இருந்ததாக அறிஞர்கள் சிலர் கருதுகின்றனர்.

ஹுர்ரியக் கதையில் தப்பித் தவர் பெயர் ‘நாஹ்- மொலெல்’ என்றிருக்கிறது. இப்பெயர் ‘நூஹ்’ என்பதோடு ஒன்றுபட்டிருப்பது வெளிப்படை.

கப்பலில் ஏறித் தப்பித்தவர் பெயரில் வேறுபாடு இருப்பினும், பிரளயத்தில் கப்பலில் தப்பித்த தொன்மம் ஒன்றாயிருக்கிறது.

பல இடங்களில் வழங்கும் பிரள யத் தொன்மங்களுக்கு மூலம் ஒன்றே என்று ஆய்வறிஞர்கள் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

பிரளயத்தில் தப்பித்தவர்கள் பல்கிப் பெருகிப் பல நாகரிகங் களை உருவாக்கினர். அப்போது பிரளயத் தொன்மத்தையும் தங்க ளோடு எடுத்துச் சென்றனர். பெயர் வேறுபாடு அவ்வந்நாகரிகத்தின் மொழி மரபு காரணமாக ஏற்பட்டிருக்கலாம்.

பிரளயத் தொன்மம் ஒரு பேருண்மையை வெளிப்படுத்து கிறது. கப்பல் ஏறித் தப்பித்த நோவாவின் சந்ததியினரே மிகப் புராதனமான நாகரிகங்களாகக் கருதப்படும் சுமேரிய, பாபி லோனிய நாகரிங்களை ஏற்படுத் தியவர் என்பதே அந்த உண்மை.

கார்வே என்ற அறிஞர் லெமூ ரியாவில் இருந்து தப்பியவரே ‘நைல்’ பள்ளத்தாக்கிலும், செங் கடற்கரையிலும் தங்கி நாகரிகம் வளர்த்தனர். அவர்களிடம் இருந்து உருவானதே எகிப்திய நாகரிகம். பிற்காலத்தில்அவர்களே மெசப டோமியா, அஸீரியா, பாபிலோ னியா ஆகிய இடங்களில் தங்கி நாகரிகம் வளர்த்தனர் என்று கூறு கிறார். (N.Mahalingam, ‘Forgotten lemuria’ pp. 55-57).

கடல் கோளால் லெமூரியா (குமரிக் கண்டம்) அழிந்தபோது அங்கிருந்து தப்பித்தவர்கள் பல்வேறு இடங்களில் குடியேறி வாழ்ந்தனர்.

காலப்போக்கில் பிரளயத் தொன்மம் வாழ்ந்த இடத்தின் வண்ணம் பெற்றதோடு, சிற்சில மாற்றங்களையும் அடைந்தது. இது இயல்பே.

குமரிக் கண்டத்தைக் கடல் கொண்டது பற்றிய குறிப்புகள் தமிழில் ஏராளமாகக் காணப்படு கின்றன.

குமரிக் கண்டத்தில் ஓடிய பஃறுளி ஆறும், குமரி மலையும் கடல் கோளால்அழிந்ததை இளங் கோவடிகள் சிலப்பதிகாரத்தில் பதிவுசெய்திருக்கிறார்.

‘பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள...’

(சிலப் பதிகாரம்- காடுகாண். 18.22)

‘குமரி ஆற்றின் தெற்கு நாற்பத் தொன்பது நாடு sகடல் கொண்டது’ என்று நச்சினார்க்கினியர் தம் தொல்காப்பியப் பாயிர உரையில் கூறுகிறார்.

அடியார்க்கு நல்லார் தம் சிலப்பதிகார உரையில்,

‘அக் காலத்து அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரி என்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத வாறும் இவற்றின் நீர் மலிவா னென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ் முன்பாலை நாடும், ஏழ் பின்பாலை நாடும், ஏழ் குன்ற நாடும், ஏழ் குணகாரை நாடும், ஏழ் குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி, கொல்லம் முதலிய பன்பலை நாடும் காடும் நதியும் பதியும் தடநீர்க் குமரி வடபெருங் கோட்டின் கானும் கடல் கொண் டொழிதலாற் குமரியாகிய பெளவ மென்றார்.’

(சிலப்பதிகாரம் - வேனிற்காதை, 1-2 உரை) என்று கடல் கோளால் குமரிக் கண்டத்தில் அழிந்த பகுதிகளை விவரமாகக் கூறுகிறார்.

இறையனார் அகப்பொருள் உரையில் நக்கீரரும், ‘செங்கோன் தரைச் செலவு’ ஆசிரி யரும் கடல்கோள் பற்றிக் கூறுகின்றனர்.

- இன்னும் முத்துக் குளிக்கலாம்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: kaviko2003@yahoo.com

முந்தைய அத்தியாயம்: >முத்துக் குளிக்க வாரீகளா 8: ஐந்திணையின் அம்சங்கள்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்