டனிஷ்க் விளம்பரப் பட சர்ச்சை: இணையத்தில் எழுந்த ஆதரவும், எதிர்ப்பும்

By கார்த்திக் கிருஷ்ணா சி.எஸ்

உணர்வுகளைப் புண்படுத்தியதாலும், தங்களின் ஊழியர்கள், கூட்டாளிகள் மற்றும் கடை பணியாளர்களின் நலன் கருதியும், தங்களது சமீபத்திய விளம்பரப் படத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக டனிஷ்க் நிறுவனம் அறிவித்துள்ளது.

டாடா குழுமத்தின் டைட்டன் நிறுவனத்தில் ஒரு பிரிவான டனிஷ்க், நகைகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. பண்டிகை காலத்தையொட்டி புதிய விளம்பரப் படம் ஒன்றை டனிஷ்க் வெளியிட்டது. இதில், இஸ்லாமியக் குடும்பம் ஒன்று தங்களது இந்து மருமகளுக்காக, இந்து முறைப்படி வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்துகிறது. மருமகள் தனது மாமியாரிடம், இது உங்கள் வீட்டில் வழக்கம் இல்லையே என்று கேட்க, அதற்கு அந்த மாமியார், "எல்லா வீட்டிலும் மகள்களைச் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்பது வழக்கம் தானே" என்று பதில் கூறுகிறார்.

மத நல்லிணக்கம், சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தியே இந்த விளம்பரம் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டாலும், இணையத்தில் ஒரு தரப்பு, இந்த விளம்பரம் லவ் ஜிகாதை விளம்பரப்படுத்துகிறது எனக் கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தது. டனிஷ்க்கை புறக்கணிக்க வேண்டும் என்று கூறி #BoycottTanishq என்கிற ஹாஷ்டேக்கும் திங்கட்கிழமை முதல் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்தது. கடுமையான எதிர்ப்புகளைப் பார்த்த டனிஷ்க் நிறுவனம், இந்த விளம்பரத்தைத் திரும்பப் பெறுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

"ஏகாத்வம் பிரச்சாரத்தின் நோக்கமே, இந்த இக்கட்டான காலகட்டத்தில், பல்வேறு பின்புலங்களிலிருந்து, உள்ளூர் சமூகங்களிலிருந்து, குடும்பங்களிலிருந்து வரும் மக்கள் ஒன்றாக ஒற்றுமையுடன் இணைவதைக் கொண்டாடுவதும், ஒருமையைக் கொண்டாடுவதும் தான்.

ஆனால் தற்செயலாக பலரது உணர்ச்சிகளைக் கிளறி விட்டிருப்பதில் நாங்கள் ஆழ்ந்த வருத்தமடைகிறோம். காயப்பட்ட உணர்வுகள், எங்களது ஊழியர்கள், கூட்டாளிகள் மற்றும் கடை பணியாளர்களின் நலன் கருதி இந்த விளம்பரப் படத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறோம்" என டனிஷ்க்கின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சர்ச்சைக்கு நடுவில், டைட்டன் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2.18 சதவீதம் குறைந்தன. ஒரு பங்கின் விலை ரூ.27.35 வரை குறைந்தது.

எப்போதும் போல டனிஷ்க்கின் விளம்பரப் படத்துக்கும் சரி, தற்போது திரும்பப் பெறப்பட்டதற்கும் சரி இரண்டு வகையான எதிர்வினைகளையும் சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது.

இந்து - முஸ்லிம் ஒற்றுமையை அழகான விளம்பரப்படத்தில் காட்டியது பிடிக்காமல் இந்துத்வ மதவெறியர்கள் டனிஷ்க் நிறுவனத்தை புறக்கணிக்கச் சொல்கின்றனர். இந்த ஒற்றுமை அவர்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் ஏன் நீண்ட காலமாக இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு அடையாளமாக இருந்து வரும் இந்தியாவையும் அவர்கள் புறக்கணிக்கக்கூடாது என்று காங்கிரஸ் எம்பி சஷி தரூர் ட்வீட் செய்துள்ளார்.

அதே போல எழுத்தாளர் ஷோபா டே, சேட்டன் பகத் உள்ளிட்ட பலரும் டனிஷ்க்கின் விளம்பரப் படத்தைப் பாராட்டியுள்ளனர். இந்த விளம்பரத்தில் எந்த தவறும் இல்லை, மிரட்டுபவர்களுக்கு அஞ்சக்கூடாது என்று சேட்டன் பகத் கூறியுள்ளார். டனிஷ்க் ஆதரவு ட்வீட்டுக்கள் சிலவற்றை ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராமும் பகிர்ந்துள்ளார்.

இன்னொரு பக்கம், நடிகை கங்கணா ரணாவத் இந்த விளம்பரப் படத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். "இந்த கருத்து தவறல்ல, ஆனால் சொல்லப்பட்ட விதம் தவறு. தனது நம்பிக்கையை ஏற்ற கணவர் குடும்பத்தினரிடம் ஏன் அவர், பயத்துடன், மன்னிப்பு கேட்பதைப் போல நன்றி சொல்ல வேண்டும்? அவர் அந்த குடும்பத்தில் முக்கியப் பெண்மணி தானே? அவர்களின் தயவிலா அவர் இருக்கிறார்? தனது சொந்த வீட்டிலேயே ஏன் அந்தப் பெண் அடங்கி ஒடுங்கி இருக்க வேண்டும்? இந்து மருமகள், தங்கள் குடும்பத்தின் வாரிசைச் சுமக்கும் போது மட்டும் தான் அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா, இது முற்றிலும் தவறான விளம்பரம்" என கங்கணா ட்வீட் செய்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

42 mins ago

இந்தியா

25 mins ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வர்த்தக உலகம்

2 hours ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்