உடுமலை நாராயணகவி 10

By செய்திப்பிரிவு

திரைப்படப் பாடல் ஆசிரியர், கவிஞர்

பழம்பெரும் திரைப்படப் பாடல் ஆசிரியரும், தனது எழுச்சிமிக்க பாடல்களால் மக்களிடம் தேசிய உணர்வை ஊட்டியவருமான உடுமலை நாராயணகவி (Udumalai Narayanakavi) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 25). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த பூவிளைவாடி கிராமத்தில் (1899) பிறந்தார். இயற்பெயர் நாராயணசாமி. இளம் வயதில் பெற்றோரை இழந்தவர், அண்ணன் ஆதரவில் வளர்ந்தார். 4-ம் வகுப்போடு படிப்பு முடிந்தது.

# புரவியாட்டம், சிக்குமேளம், தம்பட்டம், உடுக்கடிப்பாட்டு, ஒயில் கும்மி போன்ற கிராமியக் கலைகளை ஆர்வத்துடன் கற்றார். ஆரிய கான சபா என்ற நாடக சபாவின் ஆசிரியரான முத்துசாமிக் கவிராயர் இவரது திறனைக் கண்டு வியந்து தன்னுடன் சேர்த்துக்கொண்டார். அவரோடு பல இடங்களுக்கும் சென்று ஏராளமான நாடகங்களில் நடித்தும், எழுதியும், பாடியும் நேரடி அனுபவங்களைப் பெற்றார்.

# சுமார் 12 ஆண்டுகாலத்துக்குப் பிறகு ஊர் திரும்பியவர், கதர்க்கடை தொடங்கினார். அதில் நஷ்டம் ஏற்பட்டு கடன் தொல்லை அதிகமானது. கடன்களை அடைக்கும்வரை ஊர் திரும்ப மாட்டேன் என்று உறுதியேற்றார்.

# கையில் இருந்த நூறு ரூபாயோடு மதுரை சங்கரதாஸ் சுவாமிகளிடம் சென்றார். அவரிடம் யாப்பிலக்கணம் பயின்றார். நாடக சபாக்கள் நிறைந்த மதுரை மாநகரம், பணம் சம்பாதிக்க இவருக்கு உதவியது. பல நாடகங்களுக்கு வசனங்கள், பாடல்கள் எழுதினார்.

# விடுதலைப் போராட்டம் தீவிரமாக இருந்த காலக்கட்டம் அது. தேசிய உணர்வுமிக்க பாடல்களை எழுதி, மேடைதோறும் முழங்கச் செய்தார். கடன்களை அடைத்த பிறகு, ஊர் திரும்பினார்.

# டிகேஎஸ் நாடகக் குழுவினரோடு ஏற்பட்ட தொடர்பால் என்.எஸ்.கிருஷ்ணனின் நட்பும், பிறகு பெரியார், அண்ணா, பாவேந்தர் உள்ளிட்டவர்களின் நட்பும் கிடைத்தது. இயக்குநர் ஏ.நாராயணன் அழைத்ததால், கிராமபோன் கம்பெனிக்கு பாட்டு எழுதுவதற்காக சென்னைக்கு சென்றார். அது இவருக்கு திரையுலகக் கதவுகளைத் திறந்துவிட்டது.

# திரைப்படங்களுக்கு 1933 முதல் பாடல் எழுதத் தொடங்கினார். பெயரை நாராயணகவி என மாற்றிக்கொண்டார். சமுதாய சீர்திருத்தக் கருத்துகள் நிறைந்த பாடல்களை எழுதினார். முன்னணி பாடல் ஆசிரியராகத் திகழ்ந்தவர், ‘கவிராயர்’ என்று அன்போடும் மரியாதையோடும் அழைக்கப்பட்டார்.

# வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி, மனோகரா, பராசக்தி, தூக்குத் தூக்கி, தேவதாஸ் உள்ளிட்ட ஏராளமான படங்களில் அமரகீதங்களைப் படைத்துள்ளார். ‘கா கா கா’, ‘நல்ல நல்ல நிலம் பார்த்து’, ‘குற்றம் புரிந்தவன்’, ‘ஒண்ணுலேருந்து இருபது’, ‘சும்மா இருந்தா சோத்துக்கு நட்டம்’ ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

# சங்கீத நாடக சங்கம் 1967-ல் இவரை சிறந்த பாடல் ஆசிரியராகத் தேர்ந்தெடுத்தது. திரையுலகில் தனக்கென்று தனி இடத்தைப் பெற்றவர். பல்லாயிரக்கணக்கான பாடல்களை எழுதியுள்ளார்.

# கவிஞர், நாடக ஆசிரியர், நடிகர், சீர்திருத்தவாதி எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட உடுமலை நாராயணகவி 82-வது வயதில் (1981) மறைந்தார். இவரது நினைவாக 2008-ல் அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. இவர் பிறந்த ஊரில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

- ராஜலட்சுமி சிவலிங்கம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்