எடப்பாடியாரின் அடேங்கப்பா ட்விட்டர் கணக்கு!

By ஆர்.சி.ஜெயந்தன்

கரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள், உறவினர்கள், நண்பர்களிடம் தொடர்புகொள்ள நிறைய வசதிகள் இருப்பதால்தான் இந்த அளவுக்கு வீட்டுக்குள் இருக்க முடிகிறது. அரசாங்கத்துடன் தொடர்புகொள்ள தொலைபேசி எண்கள் மட்டுமல்ல; ட்விட்டர் கணக்குகளும் உதவுகின்றன. ஒவ்வொரு துறைக்குமான ட்விட்டர் கணக்குகளுக்கு வரும் கோரிக்கைகள் சிறப்பாக நிறைவேற்றப்படுகின்றன.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ட்விட்டர் பக்கத்தில், உதவி கோரி பலரும் பதிவிடுகிறார்கள். அவர்களது தேவை உடனுக்குடன் நிறைவேற்றப்படுகிறது. அப்படி சமீபத்தில் அவரது ட்விட்டரில் பதிவிட்டு உதவி கோரிய பலருக்கும் கண் இமைப்பதற்குள் உதவிகள் சென்று சேர்ந்திருக்கின்றன. அவற்றிலிருந்து ஒரு மனதை நெகிழ வைக்கும் சம்பவம் இது.

தமிழகத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்ற இளைஞர் மத்திய பாதுகாப்புப் படையின் குஜராத் பிரிவில் அங்கே பணிபுரிந்து வருகிறார். அவர், முதல்வரின் ட்விட்டர் கணக்கில் டேக் செய்து, “ ஐயா நான் தற்போது மத்திய பாதுகாப்பு படையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பணியில் உள்ளேன். எனது தாயார் 89 வயதுடையவர். வீட்டில் தனியாக உள்ளார். அவருக்கு உடல் நிலை சரியில்லை. எனக்குத் தந்தையும் இல்லை, சகோதரனும் இல்லை. எனது தாயாருக்கு மருத்துவ உதவி தேவை” எனக் கேட்டிருந்தார்.

அவ்வளவுதான்! ரவிக்குமாரின் தாயாருக்குத் தேவையான மருத்துவ உதவியைச் சென்று சேர்த்திருக்கிறார் முதல்வர். அத்துடன், ரவிக்குமாருக்கு ட்விட்டர் வழியாகவே முதல்வர் பதிலும் தெரிவித்துவிட்டார். அதில், “தங்கள் தாயாருக்குத் தேவையான மருந்துகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. அவர் நலமாக உள்ளார். தாங்கள் தைரியமாக நிம்மதியுடன் இருங்கள்!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதேபோல் ஒருவர் தனது கர்ப்பிணி மனைவிக்கு உதவி கேட்டுப் பதிவிட அவருக்கும் உதவி சென்று சேர்ந்தது. செல்வாக்கு மிக்கவரோ முகம் தெரியாத சாமானியரோ யார், எங்கிருந்து உதவி கோரினாலும் உடனுக்குடன் உதவிகளைத் தனது குழு வழியாகச் சென்று சேர்க்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதில் எந்த பாரபட்சமும் காட்டப்படுவதில்லை.

இன்னும் சற்று முன்பாக கரோனா ஊரடங்கு தொடங்கிய சமயத்தில் ஒரு சம்பவம். ஆந்திராவின் முக்கிய நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், தமிழக முதல்வரின் ட்விட்டர் கணக்கை டேக் செய்து, “ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், சோமபேட்டா வட்டாரத்தைச் சேர்ந்த 99 மீனவர்கள் தமிழகக் கடலோரத்துக்கு மீன்பிடிக்க வந்தபோது சென்னை காசிமேடு துறைமுகத்தில் ஊரடங்கு உத்தரவால் முடங்கிவிட்டனர். அவர்களது குடும்பத்தினர் இங்கே கலங்கித் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு உணவுக்கும் உறைவிடத்துக்கும் உதவுங்கள்” என்று கேட்டு கோரிக்கை வைக்க, அந்த உதவியை அன்றே செய்து முடித்துவிட்டு, ‘நீங்கள் கேட்ட உதவியைச் செய்துவிட்டோம்’ என்று ட்வீட் வழியாகவே பதிலளித்தார் முதல்வர் பழனிசாமி.

தனது ட்விட்டர் கணக்கு மூலம் உதவிகளைச் செய்வதில் மட்டுமல்ல; கரோனா காலத்தில் முன்னணியில் நின்று மக்கள் பணி செய்பவர்களைப் பாரபட்சம் இல்லாமல் பாராட்டி உத்வேகம் தருவதிலும் வியக்க வைக்கிறார்.

உதாரணத்துக்கு, “தனது தாயாரை இழந்த பெரம்பலூர் தூய்மைப் பணியாளர் அய்யாத்துரை, தாயை இழந்த சோகம் மறையும் முன்னரே, இறுதிச் சடங்கு முடிந்ததும் வந்து கரோனா பணியில் ஈடுபட்டது நெகிழ்ச்சி அளிக்கிறது. மக்களைக் காக்க வேண்டும் என்ற அவரது உயர்ந்த எண்ணத்திற்கும் அர்ப்பணிப்பிற்கும் தலை வணங்குகிறேன்” என்று அந்தப் பணியாளரின் படத்தைப் பதிவிட்டு நேற்று தனது ட்விட்டரில் பதிவிட்டு மனதாரப் பாராட்டியிருந்தார்.

இன்னும் சில தினங்களுக்கு முன் தினேஷ் சரவணன் என்ற மென்பொருள் பொறியாளரின் களப்பணி ஒளிப்படங்களைப் பதிவிட்டு, “ஐ.டி. நிறுவனத்தில் வேலை புரிகின்றபோதும், கிடைக்கின்ற நேரத்தில் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற உணர்வோடு, கடைக்கோடி மக்களைத் தேடி உதவுதல், மரக்கன்று நடுதல் என தாங்கள் பல்வேறு சேவைகள் செய்து வருவதை சமூக வலைதளம் மூலம் அறிந்தேன். தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்!” என்று தெரிவித்திருந்தார்.

செயலூக்கம் மிகுந்த ஒரு குழுவை வைத்துக்கொண்டு தனது ட்விட்டர் கணக்குக்கு வரும் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றிவரும் முதல்வரின் ட்விட்டர் கணக்குக்கு ‘பால் பாக்கெட்டுகள் திரிந்துவிட்டன’ என்ற கோரிக்கைகளும் வரத்தான் செய்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்