நீங்க என்ன செய்யப்போறீங்க டீச்சர்?- ஆசிரியர்கள் மத்தியில் வைரலாகும் வலைதளப் பதிவு

By கரு.முத்து

கரோனா தொற்று அச்சத்தால் பள்ளிகள் கால வரையறையற்று மூடப்பட்டிருக்கின்றன. ஒன்பதாம் வகுப்பு வரை தேர்வு நடத்தாமலே தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு இன்னமும் தேதி குறிக்கமுடியாத நிலையில் மே மாத இறுதியில் பள்ளிகளைத் திறந்து தேர்வுகளை நடத்தலாமா என்று அரசு சிந்தித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், பள்ளி ஆசிரியர்களோ குழப்பமான மனநிலையில் உள்ளனர். அவர்களின் மனநிலையை அப்பட்டமாக பிரதிபலிக்கும் வகையில், ‘என்ன செய்யப்போறீங்க டீச்சர்?’ என்ற தலைப்பில் ஒரு ஆசிரியர் எழுதிய வலைதளப் பதிவு ஆசிரியர்கள் மத்தியில் இப்போது வைரலாகி வருகிறது.

ஆசிரியர்களின் உள்ளக் குமுறலை அப்படியே பிரதிபலிக்கும் அந்தப் பதிவு...

''எதிர்வரும் கல்வியாண்டு ஆசிரியர் சமூகத்திற்கும் சவால் நிறைந்தாக இருக்கப் போகின்றது. கல்வியாண்டு மட்டும் புதிதாக இருக்கப் போவதில்லை... கற்றுக் கொடுக்கும் கல்வியே புதிதாகத்தான் இருக்கப் போகிறது. காலாண்டுகூட இல்லாத ஆண்டாக மாறலாம்.

அதுமட்டுமா!

நெருக்கமாய் அழைத்து புத்தகத்தில் உள்ள கேள்விகளுக்குப் பதில் சொன்ன ஆசிரியர்கள் இனி, குழந்தைகள் நெருங்குவதை அச்சமின்றி அனுமதிப்பார்களா? பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி வந்த ஆசிரியர்களும், மாணவர்களும் இனியும் ஒட்டி உரசிப் பயணப்பட விரும்புவார்களா?

குடிதண்ணீருக்கே பாடாய்ப்படும் பள்ளிகளில் பலமுறை கை கழுவத் தண்ணீருக்கு எப்போது யார் உத்தரவாதம் தரப் போகின்றார்கள்? இனி, சக ஆசிரியர்கள், பள்ளிக் குழந்தைகளின் தும்மலும், இருமலும் அவர்களை சந்தேகமாய்ப் பார்க்க வைக்கப்போகிறது. நோய்த் தொற்றுக்கு ஆளானவர் அல்லது அவரது குடும்பத்தினரின் குழந்தைகள் எனத் தெரிந்தால் பள்ளியில் அவர்களுடனான உறவு மற்றவர்களுக்கு எப்படி இருக்கும் என்று தெரியாது. அதேபோல், குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த ஆசிரியர்கள், குழந்தைகளைப் பற்றி பிற ஆசிரியர்கள், குழந்தைகளின் பார்வை எப்படி இருக்கப் போகிறது என்றும் சொல்லமுடியவில்லை.

வகுப்பறைகளில் இனி முகமற்ற முகங்களையே பார்க்கலாம். அவர்கள் அணிந்து வரும் முகக் கவசத்திற்கு, அதன் தரத்திற்கு யார் பொறுப்பு? தனிமனித விலகல் என்பது கிருமியை ஒழிக்கவே தவிர, நவீனத் தீண்டாமையல்ல என்பதை எப்படிப் புரியவைப்பது!

இதையெல்லாம் சரிசெய்யாமல், கோடை விடுமுறை முடிந்து எப்போதும் பள்ளிக் கதவுகளைத் திறப்பதைப் போல தற்போது பள்ளியைத் திறந்திட முடியுமா? இதுபற்றி கல்வித்துறையோ, கல்வியாளர்களோ வாய் திறந்தார்களா?

இவையெல்லாம் சரி செய்யாமல் இப்படியே ஆசிரியர்களையும் பிள்ளைகளையும் பள்ளிக்கு அனுப்பிவிட முடியுமா? அறிவியல் பூர்வமான வைரஸ் குறித்த வகுப்புகள், உளவியல் சார்ந்த வகுப்புகளில் பங்கேற்க வைத்த பின்புதான் அவர்களைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். அத்துடன், ஆண்டில் சில முறை மட்டும் பெயரளவில் குழந்தைகளை ஆய்வு செய்யும் சுகாதார ஆய்வாளர்கள் இனி பள்ளிகளில் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

உள்ளூர்ப் பஞ்சாயத்து, நகராட்சிகள், அரசு சாரா நிறுவனங்கள், கல்வி இயக்கங்கள், சங்கங்கள் போன்றவைகள் ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியத்திற்கான நடவடிக்கைகளை இணைந்து செய்திட வேண்டும். இவை எல்லாம் நடக்க அரசு விரைந்து செயல்பட வேண்டும்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும். நமது பள்ளியில் நீங்க என்ன செய்யப்போறீங்க டீச்சர்?''

இப்படிச் சுற்றுகிறது அந்த வலைதளப் பதிவு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

30 mins ago

ஓடிடி களம்

44 mins ago

க்ரைம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்